
சென்னை: வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே கடக்கக்கூடும். அப்போது, காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஃபெஞ்சல் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.30) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் புயலாக, புதுவையிலிருந்து சுமார் கிழக்கு – வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து வடக்கு – வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடற்கரையை காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று மாலை புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


