Sorting by

×

அருணாசலத்தில் வெள்ளம், நிலச்சரிவு! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன.

அப்பர் சுபன்சிரி மாவட்டத்தின் டபோரிஜோ பகுதியிலுள்ள, ஆறு ஒன்று நிரம்பியதால் அங்குள்ள தாழ்வானப் பகுதிகள் முழுவதும் வெள்ளம் ஏற்பட்டு பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கு நிலவும் மோசமான வானிலையால் அம்மாவட்டத்திலுள்ள, சுமார் 117 வீடுகள் மற்றும் முக்கிய உள் கட்டமைப்புகள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதில், அங்குள்ள போலோ காலனி, சிகும் ரிஜோ, சிகின் காலனி, புக்பென் காலனி மற்றும் ஃபாரஸ்ட் காலனி ஆகிய பகுதிகள்தான் வெள்ளத்தில் அதிகம் பாதிப்புக்குள்ளாகியதாகக் கூறப்படுகிறது. ஆனால், நல்வாய்ப்பாக உயிர் சேதங்கள் ஏற்பட்டதாக இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

அங்குள்ள தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், தற்போது அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அம்மாவட்ட அதிகாரிகள் சேதாரங்களைக் கணக்கிட்டு, மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கி வருவதுடன், தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல், மேற்கு காமெங் மாவட்டத்தில், ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் அங்குள்ள பாலிபாரா – சரிதுவார் – தவாங் சாலைக்கு அருகிலுள்ள சாராய் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நிலச்சரிவால் அம்மாவட்டத்தின் ஜோதி நகர், திராங், பத்மா மற்றும் துர்கா மந்தீர் உள்ளிட்ட பல முக்கிய சாலைகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.

அம்மாவட்டத்தின், பொம்திலா பகுதியிலுள்ள படாலிங் காலனியில், நேற்று (மே 30) மிகப் பெரியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள சாலைகள் மற்றும் வீடுகள் இடிந்து மண்ணுக்குள் புதைந்துள்ளன.

கனமழை மற்றும் நிலச்சரிவினால் அம்மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நேற்று இரவு முழுவது இருளில் மூழ்கின.

இத்துடன், நிலச்சரிவினால் பல பகுதிகளின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், மியோங் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எனும் அபாயமுள்ளதால் அதன் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையானது இன்னும் சில நாள்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அருணாசல பிரதேசத்தின் குருங் குமே, காம்லே மற்றும் லோவர் சுபன்சிரி ஆகிய மாவட்டங்களிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், வங்கதேசத்துக்கு அருகில் வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்ததால், வடக்கிழக்கு மாநிலங்களில் லேசானது முதல் அதீத கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனால், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளது.

மேலும், அருணாச்சலத்தின் லோவர் சுபன்சிரி, மேற்கு காமெங், மேற்கு சியாங், லோஹித் மற்றும் சாங்லாங் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கக் கூடாதா? வீழ்கிறதா கோடிங்? 6000 பேரை பணிநீக்கம் செய்த மைக்ரோசாஃப்ட்

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *