Sorting by

×

’’அவங்களுக்கு ஓட்டே இருக்காதே’ ; அன்று விஜய் ரசிகர்களை அலற விட்ட செங்கோட்டையன்!’ – நாஞ்சில் அன்பழகன்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததுதான் தமிழக அரசியல் களத்தில் கடந்த வார பேசு பொருளாக இருந்தது.

செங்கோட்டையனின் முடிவுக்கு ஆதரவும் விமர்சனமும் சமமாகக் கிடைத்து வந்தபடி இருக்கின்றன.

இந்த நிலையில் ’விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுக கூட்டணியில் சேர்ந்து தேர்தலையே சந்தித்திருக்க வேண்டிய ஒரு சூழல் இதே செங்கேட்டையனால்தான் முன்பு தடைபட்டது’ என்கிறார் அதிமுகவின் கலைப் பிரிவு இணைச் செயலாளரும் நட்சத்திரப் பேச்சாளருமான நாஞ்சில் பி சி அன்பழகன்.

இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்த இவர் ரசிகன், தேவா முதலான விஜய் படங்களிலும் பணி புரிந்தவர்.

 அப்போது நடந்தது குறித்து அன்பழகனிடம் பேசினோம்.

நாஞ்சில் அன்பழகன், அதிமுக

 ‘’2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்துல விஜய் மக்கள் இயக்கம் பல வேலைகளைச் செய்து அடிக்கடி அதனுடைய பெயர் செய்திகள்ல அடிபட்டுச்சு. யாராவது புதுசா அரசியலுக்கு வந்தா திமுகவுக்குதான் பிடிக்காதே. அதனால விஜய் வந்திடுவாரோனு அவருக்கு பிரச்னைகள் கொடுக்கத் தொடங்கினாங்க. ’காவலன்’ படத்துக்கு தியேட்டர் கிடைக்க விடாம செய்தாங்க. இதனால ஒருகாலத்துல கலைஞர் அபிமானியா இருந்த என்னுடைய குருநாதர் எஸ்.ஏ.சந்திரசேகர் திமுக மேல கடும் அதிருப்தியில இருந்தார் அந்தச் சமயத்துல மக்கள் இயக்கம் முழுக்க அவர் கட்டுப்பாட்டுல இருந்தது..

இந்தச் சூழல்ல 2011 தேர்தல் வந்தது. ’மீண்டும் திமுக வரக்கூடாது; அதுக்கு நம்ம சைடுல என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யணும்’னு உறுதியா இருந்தார் டைரக்டர்.

எஸ்.ஏ.சந்திரசேகர் – விஜய்

தேர்தல் அறிவிப்பு வந்தது. விஜய் மக்கள் இயக்கமும் அதிமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிடலாம்கிற ஒரு எண்ணம் டைரக்டருக்கு இருந்தது..

அதேநேரம் கூட்டணிக்காக முதல்ல யார் மூலம் அப்ரோச் செய்தாங்கனு எனக்குத் தெரியலை. ஆனா அந்தப் பேச்சுவார்த்தை தடைபட்டது செங்கோட்டையனால்தான். அப்ப அவர் கட்சியின் தலைமைக் கழகச் செயலாளரா முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புல இருந்தார். தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவெடுக்கிற குழுவுல அவரும் ஒருத்தர்.

அவர் விட்ட ஒரு லூஸ் டாக் எங்க டைரக்டரைக் கடுப்படைய வச்சிடுச்சு.

‘அதாவது அம்மாகிட்ட ’விஜய் மக்கள் இயக்கம் நம்மகூட வர விரும்புகிறாங்க’ங்கிற தகவலைச் சொல்லாம, இவராகவே ‘தொகுதிக்கு 100 பேர் இருப்பாங்களா, அதுல பாதிப்பேருக்கு ஒட்டு இருக்குமா தெரியலை, அவங்க கூடல்லாம் பேச்சுவார்த்தையா’னு நக்கலடிச்சுட்டு 2 சீட் வேணும்னா தரலாம்னு சொல்லியிருக்கார்.

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

அந்தச் சந்திப்புல நடந்த விஷயத்துக்கு அவர்கிட்ட வருத்தமும் தெரிவிச்சாங்க அம்மா, அதேநேரம் விஜய்காந்த் கட்சில்லாம் வந்து கூட்டணி கிட்டத்தட்ட இறுதி வடிவம் பெற்று விட்டதால குறைவான தொகுதிதான் ஒதுக்க வேண்டிய நிலையில இருக்கோம்னு அம்மா சொன்னதும் ’அவங்க இவ்வளவு இறங்கிப் பேசறாங்களே’னு நெகிழ்ந்து போன டைரக்டர், ’பரவால்லம்மா, போட்டியிடறதை அடுத்த முறை பார்த்துக்கலாம், இந்த தேர்தல்ல நிச்சயம் உங்களுக்கு ஆதரவு தர்றோம்’னு அதிகாரபூர்வமா அதை அறிவிச்சார்.

இப்ப எதுக்கு சொல்ல வேண்டி வருதுன்னா, கட்சி மாறி போறது அவங்கவங்க விருப்பம். ஆனா இன்னொரு இடத்துக்குப் போன பின்னாடி நடந்து வந்த பாதை குறித்து விமர்சனம் செய்யறதுங்கிறது நல்ல நாகரிகம் கிடையாது.

நேர்மையான ஆட்சி, புனிதமான ஆட்சியை விஜய் தருவார்னு சொன்னா, இதுக்கு முன்னாடில்லாம் அந்த மாதிரி ஆட்சி நடக்கலையானு கேள்வி வருமா இல்லையா?

இவர் அமைச்சரா இருந்த போதே வாச்சாத்தி விவகாரம், தனிப்பட்ட பிரச்னைக்காக இவர் பதவி இழந்ததுனு ஆயிரம் இருக்கே, அதையெல்லாம் நாங்க எடுத்து விடலாமா?  என்றவர்,

அனாலும் காலம் தான் எவ்வளவு அதிசயத்தை நிகழ்த்துது, ஒருகாலத்துல உங்களுக்கு ஓட்டு இருக்கானு கேட்டவர், இப்ப அதே கூட்டத்துக்கு முன்னாடிதான் போய் ஓட்டுக் கேக்கவே போறார்/ வேறென்ன சொல்றது’ என முடித்துக் கொண்டார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *