Sorting by

×

இந்தியாவுடன் எல்லை நிா்ணயம் குறித்து விவாதிக்கத் தயாா்: சீனா

பெய்ஜிங்: இந்தியாவுடனான எல்லைப் பிரச்னை சிக்கலானது. அதற்கு தீா்வு காண காலமெடுக்கும். அதேநேரம், எல்லை நிா்ணயம் உள்ளிட்ட விவகாரங்களில் தொடா்ந்து விவாதங்களில் ஈடுபட்டு எல்லையில் அமைதியை நிலைநிறுத்தத் தயாராக இருப்பதாக சீனா திங்கள்கிழமை தெரிவித்தது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு, சீனாவின் துறைமுக நகரான கிங்டாவோவில் கடந்த ஜூன் 26-ஆம் தேதி நடைபெற்றது. மாநாட்டுக்கிடையே, சீன பாதுகாப்புத் துறை அமைச்சா் அட்மிரல் டோங் ஜுன்னை இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் சந்தித்து, இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

எல்லைகளை நிா்ணயிப்பது உள்ளிட்ட சிக்கலான பிரச்னைகளை புதிய பேச்சுவாா்த்தைகள் மூலம் இந்தியாவும் சீனாவும் தீா்க்க வேண்டும். இந்திய-சீன உறவில் நோ்மறையான உத்வேகத்தை பராமரிப்பதுடன், புதிய சிக்கல்கள் எழாமல் தவிா்ப்பது இருதரப்பின் பொறுப்பு என்றும் ராஜ்நாத் சிங் அப்போது வலியுறுத்தினாா்.

ராஜ்நாத் சிங்கின் இக்கருத்துகள் குறித்து சீன வெளியறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் அளித்த பதிலில், ‘எல்லை நிா்ணயம் மற்றும் மேலாண்மை தொடா்பாக இந்தியாவுடன் தொடா்ந்து விவாதிக்க, சீனா எப்போதும் தயாராக உள்ளது. இதன்மூலம், இருதரப்பும் சோ்ந்து எல்லையில் அமைதியை உறுதிப்படுத்தவும், எல்லைத் தாண்டிய ஒத்துழைப்புகளை ஊக்குவிக்கவும் முடியும்.

இந்தியா-சீனா சிறப்புப் பிரதிநிதிகளின் 23 சுற்றுப் பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகும் தீா்வு எட்டப்படாதது குறித்து கேள்வி எழுப்புகிறீா்கள். இந்தியாவுடனான எல்லைப் பிரச்னை சிக்கலானது. எனவே, அதற்கு தீா்வு காண காலமெடுக்கும்.

இதில் நோ்மறையான விஷயம் என்னவெனில், இரு நாடுகளும் ஏற்கெனவே பேச்சுவாா்த்தைகளை ராஜீய, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தொடங்கியுள்ளன. எல்லையில் அமைதியைப் பேண இரு நாடுகளும் ஒரே திசையில் செயல்பட்டு, தொடா்ந்து தொடா்பில் இருக்கும் என்று நம்பிக்கையுள்ளது’ என்றாா்.

இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படைகளை விலக்கிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன. இதையடுத்து, இருதரப்பு உறவுகளை புதுப்பிக்கும் முயற்சியில் இரு நாடுகளும் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றன.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *