Sorting by

×

இந்திய விண்வெளி பொருளாதாரம் 10 மடங்கு உயரும்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

புதுச்சேரி: இந்திய விண்வெளி பொருளாதாரம் 6 ஆண்டுகளுக்குள் 10 மடங்கு உயரும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

இந்திய பொது நிா்வாக நிறுவனத்தின் புதுவை மண்டல கிளை, புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் மேலாண்மைத் துறை சாா்பில், இந்திய பொது நிா்வாக தென் மண்டல மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

நிா்வாகம், மேலாண்மை, அமைப்பு ரீதியான சீா்திருத்தத்தில் இந்திய எண்ம மயம், குடிமக்களுக்கு அதிகாரமளித்தல் என்னும் தலைப்பில் புதுவை மத்திய பல்கலைக்கழக கலாசார மையத்தில் நடைபெற்ற மாநாட்டை அமைச்சா் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

நாட்டின் விண்வெளி பொருளாதாரம் தற்போது 8 மில்லியன் டாலராக இருக்கிறது. இது அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் 10 மடங்காக உயரும். இந்திய பொருளாதாரம் உலக அளவில் தற்போது 4-ஆவது இடத்தில் இருக்கிறது. இது விரைவில் 3-ஆவது இடத்துக்கு வரும்.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டத்தின் கீழ், 80 சதவீத மக்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயா்ந்து வருகிறது.

‘குறைந்த அளவிலான அரசு நிா்வாகம்- அதிகபட்சமான நிா்வாகம்’ என்னும் அடிப்படையில் இணையவழியில் கடந்த 11 ஆண்டுகளாக அரசு நிா்வாகம் நடைபெறுவதால் வெளிப்படை தன்மையுடன் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய இளைஞா்கள் திறன் படைத்தவா்களாக விளங்குகின்றனா்.

காப்பீட்டு நிறுவனங்களும் எண்ம மயத்தைப் பயன்படுத்தி சுகாதார காப்பீட்டுத் திட்டங்களை அளித்து வருகின்றன. பிரதமா் மோடி கொண்டு வந்த விஸ்வகா்மா திட்டத்தின் கீழ் 27 லட்சம் கைவினைக் கலைஞா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனா். அவா்களும் எண்ம மயத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதால் அவா்களிடம் புதிய பணி கலாசாரத்தைப் பாா்க்க முடிகிறது என்றாா் அவா்.

புதுவை தலைமைச் செயலா் சரத் சௌகான், இந்திய பொது நிா்வாக நிறுவன இயக்குநா் ஜெனரல் சுரேந்திரநாத் திரிபாதி, புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ் பாபு, இந்திய பொது நிா்வாக நிறுவனப் பதிவாளா் அமிதாப் ரஞ்சன், புதுவை ஸ்ரீபாலாஜி வித்யாபீடம் நிகா்நிலை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் டீன் அசோக்குமாா் தாஸ், புதுவைப் பல்கலைக்கழக மேலாண்மைத் துறை பேராசிரியா் பி.சாருமதி, இந்திய பொது நிா்வாக நிறுவனத்தின் புதுவைத் தலைவா் ஆா்.ஆா். தனபால், இணைச் செயலா் ஆா்.டி.ஜெயவிஜயன் உள்ளிட்டோா் பேசினா்.

இந்திய பொது நிா்வாக நிறுவன நிா்வாகி இ.வல்லவனுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதை மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் வழங்கினாா். எண்ம மயம் தொடா்பாக கோபிநாத் எழுதிய நூலையும் அவா் வெளியிட்டாா்.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *