தமிழ்நாட்டின் துணை முதல்வரும் தி.மு.க-வின் மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கடந்த 27-ம் தேதி நடைபெற்றது.
கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்ட இளைஞரணி சார்பில் அதன் மாவட்ட அமைப்பாளர் இமயம் சசி என்பவர் தனது சமுதாயத்தைச் சேர்ந்த படுகர் இளைஞர்களை மட்டும் அழைத்துச் சென்று உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்றும், இளைஞரணி அமைப்பாளர் என்ற பதவிக்கு ஏற்ப பழங்குடி மற்றும் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களை அரவணைத்து உடன் அழைத்துச் செல்லவில்லை என்றும் அக்கட்சிக்குள் விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன.
நீலகிரி மாவட்ட இளைஞரணி அமைப்பாளரின் இந்தச் செயல் கட்சிக்குள் பெரும் சர்ச்சையை எழுப்பி வருகிறது.
இது குறித்து நம்மிடம் தெரிவித்த அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர், “வாக்கு வங்கி அரசியலில் அடிப்படையாகக் கொண்டு படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்குத் தற்போது மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர் சொந்த சமுதாய மக்களுக்கு மட்டுமே ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டும் கட்சிக்குள் நிலவி வருகிறது. இந்த நிலையில், படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த மாவட்ட இளைஞரணி அமைப்பாளரின் இந்தச் செயலும் மனக்கசப்பை ஏற்படுத்தியிருக்கிறது” என்றனர்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமயம் சசியைத் தொடர்பு கொண்டு கேட்டோம் , “துணை முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு கலாசார ரீதியில் வாழ்த்து அளிக்க வேண்டும் என்பதற்காகவே படுக சமுதாய இளைஞர்களுடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம்.
அதே வேளையில், அந்தச் கலாசார நிகழ்வுகளில் படுகர் அல்லாத மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களும் உடன் இருந்தனர். பிரிவினை போன்ற எந்த விதமான செயலுக்கும் இங்கு இடமில்லை” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


