`நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்` எனச் சொல்லி 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர், மின் இணைப்புகளைப் பெற்று, வரி செலுத்திவந்த அடிதட்டு மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு தரை மட்டமாக்கியிருக்கிறது தி.மு.க அரசு. “எங்கள் வீடுகளுக்கு அருகே அமைந்திருக்கும் பெரு நிறுவனங்களின் கட்டடங்களை அரசின் புல்டோசர்கள் திரும்பிக்கூட பார்க்கவில்லை” எனக் குமுறுகிறார்கள் அனகாபுத்தூர் பகுதி மக்கள்!
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் பகுதியில் அமைந்திருக்கிறது அனகாபுத்தூர் நகராட்சி. அடையாறு ஆற்றின் கரையின் தாய் மூகாம்பிகை நகர், ஸ்டாலின் நகர், காயிதே மில்லத் நகர் பகுதிகளில் சுமார் 700 குடும்பங்களின் வீடுகளை 21.05.2025 முதல் 26.05.2025 தேதிகளுக்குள் இடித்திருக்கிறது அரசு. வீடுகளை காலிசெய்ய மறுத்த குடும்பங்களை காவல்துறையை வைத்து மிரட்டியும், போராட்டம் நடத்தினால் மாற்று இடமும் கிடையாது என அச்சுறுத்தியும், இடித்துத் தள்ளியிருப்பதாக, மக்கள் கூறுகிறார்கள்.

இது குறித்துப் பேசும் சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “ஸ்டாலின் நகர் அமைந்திருக்கும் அதே ஆற்றங்கரையோர சாலையிலுள்ள திருமலை நகர் வீடுகள், தனியாரின் அப்பார்மென்ட்டுகள் மற்றும் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் வானுயர்ந்த கட்டடங்களுக்கும், தனியார் கல்லூரி கட்டடங்களுக்கும் தமிழக அரசு எந்த நெருக்கடியையும் தரவில்லை. செல்வந்தர்களின் பகுதிகளை சீண்டாத அதிகாரிகள் அன்னாடங்காட்சிகளின் வீடுகளை தரைமாட்டமாக்கியிருக்கின்றனர்” எனக் குற்றம்சாட்டுகிறார். அனகாபுத்தூரில் என்னதான் நடக்கிறதென நேரில் சென்று விசாரித்தோம்.
அரசு புல்டோசரின் கண்ணில் படவில்லையா?
ஸ்டாலின் நகரைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத பட்டதாரி பெண் ஒருவர் பேசுகையில், “எத்தனையோ நீதிமன்ற கட்டடங்களும் ஆட்சியர் அலுவலகங்களும் நீர்நிலைகளின் மீதுதான் இருக்கின்றன, நீர்வழிப் பாதைகளை வகைமாற்றித்தான் சென்னை நகரமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் அகற்றாத அரசு தினக்கூலிகளாக இருந்து நகையை விற்று, வட்டிக்கு கடன் வாங்கி உயிரைக் கொடுத்து கட்டிய வீடுகளை 40 நிமிடங்களில் புல்டோசர் கொண்டு அகற்றுகிறது. எங்கள் அனகாபுத்தூர் பகுதிமீது இவ்வளவு வேகம் காட்டுவதன் பின்னணியில் ஏதோ சதி இருக்கிறது. கரையின் மறுபக்கம், ஆற்றின்கரைமீதே சுற்றுச்சுவர் எழுப்பிய தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் கட்டடங்கள் அரசு புல்டோசரின் கண்ணில் படவில்லையா?” என்றார் கண்களில் நீர்பெருக.

நம்மிடம் பேசும் விவரமறிந்தவர்கள் சிலரோ, “மறுகரையிலுள்ள கட்டுமான நிறுவனம், ஆற்றங்கரையோர பகுதிகளை குறிவைத்துதான் தன் தொழிலை விரிவாக்கம் செய்கிறது. சைதாப்பேட்டை கரையோரம்.. பொழிச்சலூர் கரையோரம், போரூரிலும் ஆற்றங்கரையோரம் என கட்டடங்களை அடுக்குகிறார்கள். அனகாபுத்தூரிலும் அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்யவும், அப்பகுதிகளை எலைட் நகரமாக்கும் நோக்கிலும்தான் எங்களை அப்புறப்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் அம்மக்களுக்கு எழுந்திருக்கிறது.

அதேபோல் மறுகுடியமர்வு என்கிற பெயரில் பூர்வகுடிகளை ஊருக்கு வெளியில் தூக்கியடித்து, மேட்டுக்குடிகளின் இருப்பிடமாக சென்னையை மாற்றும் குரூரம் ஆட்சியாளர்களுக்கு இருப்பதாகவும் தெரிகிறது. `ல்லாங்குத்து புறம்போக்காக சொல்லப்படும் தங்கள் பகுதியை நீர்நிலைகளாக நீதிமன்றத்தில் தவறுதலாக சொல்லப்பட்டதாகவும், ஆவணங்களில் நீர்நிலைகள் என இருந்தாலும் யதார்த்தத்தில் அப்படியில்லை என்ற வாதத்தையும் அரசு தரப்பு முன்வைக்கவே இல்லை என்பது உறுதியாகிறது” என்றனர்.
வேறு ஏதோ நோக்கம் இருக்கிறது
இவ்விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய் சி.பி.எம் கட்சியின் ஜி செல்வா, “நீர்நிலை பாதுகாப்பு எனச் சொல்வதும், நீதிமன்றத்தை காரணம் காட்டுவதும் அப்பட்டமான ஏமாற்று வேலை. ஆற்றை சுத்தப்படுத்துவது, கரையை வலிமைப்படுத்துவது, பொழுதுபோக்கு மற்றும் வணிகம் ஈட்டும் இடமாக நதிக்கரைகளை மாற்றுவதற்கு உலக வங்கி உள்ளிட்ட பொருளாதார அமைப்புகள் கடனாவும் ஊக்கத் தொகையாகவும் பணம் தர முன்வருகிறார்கள். அனகாபுத்தூரை பொறுத்தவரை அரசு ஆவணங்களின் படி ஆற்றிலிருந்து 60 அடி தள்ளியிருக்கும் பகுதிமீதுதான் அரசு கைவைத்திருக்கிறது. அப்புறப்படுத்தப்பட்ட பெரும்பான்மையான இடம் குடியிருப்பு பகுதி என்றே சொல்கிறது சி.எம்.டி.ஏ தரவுகள்.

போதாகுறைக்கு கடந்த மாதம்வரை மின்சாரக் கட்டணமும் வீட்டுவரியையும் வசூலித்திருக்கிறது அரசு. இச்சூழலில் அவசர அவசரமாக வீடுகளை இடித்துத் தள்ளுவதற்கு பின் வேறு ஏதோ நோக்கம் இருக்கிறது” எனச் சந்தேகத்தை கிளப்பினார்.
அடுக்கு மாடி கட்டடம் கட்ட எதனடிப்படையில் அனுமதி கொடுத்தது?
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசும்போது, “தற்போது வீடுகளை இழந்திருக்கும் மக்களுக்கு 2008-ம் ஆண்டு பட்டா தருவதற்கு தி.மு.க ஆட்சியில் ரசீது தரப்பட்டிருக்கிறது. 2016-ல் ஆக்கிரமிப்பென அ.தி.மு.க ஆட்சியில் ரசீது கொடுத்திருக்கிறார்கள். 2023-ல் ஆற்றின் கரையென்று, வரைபடத்தை திருத்தி வீடுகளை இடிக்க தி.மு.க ஆட்சியில் உத்தரவு பெறப்பட்டு, இப்போது இடிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் திடீரென 2023-ல் அதே பகுதிகளில் முளைக்கிறது ரியல் எஸ்டேட் நிறுவனம். ஆற்றிற்குள்ளேயே 10 அடுக்கு மாடியை கட்டியிருக்கிறார்கள். அனகாபுத்தூர் மக்கள் வீடுகளை 2023-ல் இடிக்க உத்தரவிட்ட அரசு, அடுக்கு மாடி கட்டடம் கட்ட எதனடிப்படையில் அனுமதி கொடுத்தது?” என வினவுகிறார்
எங்களுக்கு மட்டும் திராவிட புல்டோசர் மாடல்
தாய் மூகாம்பிக்கை நகர் வாசிகள் சிலரோ, “2021 மற்றும் 2024 தேர்தலுக்கு பிரசாரத்துக்குவந்த தி.மு.க பிரமுகர்கள், எங்களுக்கு வாக்களித்தால் உங்களுக்கு பட்டா கிடைக்குமென ஓட்டு கேட்டனர். இப்போது அவர்கள் எங்கே போனார்கள்.. தனியார் நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கு பட்டா கொடுத்த அவர்கள் எங்களுக்கு ஏன் தரவில்லை. இதுதான் எல்லோருக்கும் எல்லாவற்றை உறுதிசெய்யும் அரசா.. திராவிட மாடல், திராவிட மாடல் எனச் சொல்லி எங்களுக்கு மட்டும் திராவிட புல்டோசர் மாடலை கொடுத்திருக்கிறார்கள்” என்றனர்.

காய்தே மில்லத் பகுதியினரோ, “மாற்று இடமாக 32 கி.மீ அப்பாலுள்ள செம்மஞ்சேரியிலும் பொத்தேரி தைலாவரத்திலும் வீடு ஒதுக்கியிருக்கிறார்கள்.. அனகாபுத்தூர் பகுதி கடைகளையும், நிறுவனங்களையும் நம்பிய எங்களின் கால் நூற்றாண்டு வாழ்வாதாரத்தை ஒரே நாளில் உதறிவிட்டு வரமுடியுமா?” எனக் குமுறினர்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தி.மு.க-வின் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் அனகாபுத்தூரில் அரசு மேகொண்டுவரும் நடவடிக்கை முறையானதல்ல என்ற அதிருப்தியை பதிவு செய்யும் வகையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆட்சியாளர்களுக்கு வலுவான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


