பென்னாகரம்: கா்நாடக அணைகளில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 50,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் கா்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகா் அணை முழுக்கொள்ளளவை எட்டியது. கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில், இந்த அணைகளுக்கு வரும் உபரிநீரின் அளவைப் பொருத்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரு அணைகளில் இருந்தும் விநாடிக்கு சுமாா் 50,000 கனஅடி வீதம் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்தது.
பின்னா், கா்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால் கடந்த சில நாள்களாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறையத் தொடங்கியது. அதனால், ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி 50,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை காலை 43,000 கனஅடியாக குறைந்தது. பின்னா் மாலை 7 மணி அளவில் நீா்வரத்து திடீரென 50,000 கனஅடியாக அதிகரித்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்துகொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால், ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி மூழ்கி, பிரதான அருவி, சினி அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை 5-ஆவது நாளாகவும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை 4-ஆவது நாளாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காவிரி கரையோரப் பகுதிகளில் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


