Sorting by

×

கடலூர்: `அலட்சிய சிகிச்சை… முறையிட்டால் மிரட்டல்!’ – அரசு மருத்துவரிடம் விசாரணை!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறு காயங்களுடன் சிறுவன் ஒருவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சிறுவனை பரிசோதித்து, மருத்துவர் வழங்கிய ஊசி சிறுவனுக்கு மேலும் வலியினை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுவனின் தந்தை கேட்டபோது, அவரை சரமாரியாக மருத்துவர் திட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சிக்கு பின்புறம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் இங்கு தான் சிகிச்சையும் முதல் உதவியும் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்- தமிழ் தம்பதியினரின் மகன் தனுஷன் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக அந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

எப்படி காயம் ஏற்பட்டது?

தனுஷன் பள்ளியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது கீழே விழுந்து காயமடைந்து, அதனால் அவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அருகில் உள்ள பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த வாரம் சனிக்கிழமை அன்று அழைத்து சென்றுள்ளார் அவரது தந்தை பிரகாஷ்.

அவரை பரிசோதித்த மருத்துவர் ஊசி போட்டு மாத்திரை வழங்கியதாக கூறப்படுகிறது. சிகிச்சை பெற்ற தனுஷனுக்கு ஊசி போட்ட இடத்தில் கடும் தொற்று ஏற்பட்டு அந்த இடமே வீங்கிய நிலையில் வலி நிறைந்து இருப்பதாக தனுஷன் அவரது பெற்றோரிடத்தில் அழுதவாரே தெரிவித்துள்ளார்.

உடனடியாக தனுஷனின் பெற்றோர் வீக்கத்திற்கு காரணம் அறியவும் அவற்றை சரிசெய்யவும் அதே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகியுள்ளனர்.

.

வழக்கமாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் ஒன்பது மணி அளவில் வரவேண்டும். ஆனால் இங்கு ஒன்பது மணி அளவில் வர வேண்டிய மருத்துவர் இளம்தமிழ் தாமதமாக 10 மணிக்கு வந்துள்ளார். இதனால் சிறுவன் பள்ளிக்கு செல்லவும் தாமதமாகிவிட்டது.

கூடுதலாக உடல் வலியும் அதிகரித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் இது குறித்து மருத்துவர் இளம்தமிழிடம் கேட்ட பொழுது, “நீங்கள் ஊசி போட்டதெல்லாம் எனக்கு தெரியாது. என்னை கேட்டா ஊசி போட்டீர்கள்” என கூறியிருக்கிறார்.

ஒன்பது மணிக்கு வர வேண்டிய மருத்துவமனைக்கு 10 மணிக்கு வந்தும் சரியான சிகிச்சை அளிக்காதது ஏன் எனக் கேட்டபோது ‘என்னை கேள்வி கேட்டீர்கள் என்றால் உங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்து விடுவேன்’ என மிரட்டும் தொனியில் பேசி உள்ளார்.

மேலும், `இதே மருத்துவமனையில் அரசியல் செல்வாக்குடைய சிலர் வெறும் 2 மணி நேரம் மட்டுமே வேலை பார்த்துவிட்டு செல்கிறார்கள். நீங்கள் எங்கு வேண்டுமென்றாலும் சென்று கூறிக்கொள்ளுங்கள், என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என ஆவேசமாக பேசியுள்ளார்.

இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிறகு தனுஷனின் பெற்றோர் அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில் பின்புறம் ஊசி போட்ட இடத்தில் கடும் தொற்று ஏற்பட்டு வலி மிகுதியாக உள்ளதாக தெரிவித்தனர். மேலும் இவை மாத்திரையின் மூலம் சரியாகவில்லை என்றால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தனுஷனின் தந்தை பிரகாஷிடம் கேட்டபோது

“சனிக்கிழமை அன்று குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த பின் டிடி ஊசி செலுத்தினர். அதனையும் செல்போன் பேசிக்கொண்டே செலுத்தினர். ஏன் என்று கேட்டதற்கு பதில் ஏதும் கூறவில்லை. ஆனால் 10 வயது குழந்தைக்கு போட வேண்டிய டோசினை ஒன்பது வயது குழந்தைக்கு போட்டு விட்டேன் என செவிலியர்களுக்குள்ளே பேசிக்கொண்டனர். திங்களன்று எப்பொழுதும் போல் தனுஷனை பள்ளிக்கு அனுப்பினோம். மாலை வீடு திரும்பும் பொழுது ஊசி போட்ட இடம் வீங்கி இருப்பதாக கூறி அதிகமாக அழ தொடங்கினான்.

மருத்துவமனைக்கு சென்றபோது மருத்துவர்கள் யாரும் இல்லை. பிறகு செவ்வாய்க்கிழமை காலை 8:50 மணிக்கே மருத்துவமனைக்கு சென்று விட்டோம். ஆனால் பத்து மணி வரை மருத்துவர் யாரும் வரவில்லை. இவை குறித்து கேட்டபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வீடியோ எடுப்பதற்கு முன்னர் மிகவும் கடுமையாக பேசினார் மருத்துவர். வீடியோ எடுத்தால் அமைதி ஆவார் என நினைத்தேன் ஆனால் அப்பொழுதும் அவர் எங்களை திட்டுவதை நிறுத்தவில்லை. பிறகு அமைதியாக வெளியேறி விட்டோம். பண்ருட்டி அரசு மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர் மிகுந்த தொற்று ஏற்பட்டதாக கூறினார். இவற்றிற்கு ஆயின்மென்ட் ஏதும் தடவக்கூடாது மாத்திரை எழுதிக் கொடுக்கிறேன் அவற்றின் மூலம் சரியானால் சரி. அப்படி இல்லையேல் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்’ என கூறினார்.

மருத்துவர்களை நம்பி தானே மருத்துவமனைக்கு செல்கிறோம். அவர்களே இப்படி செய்தால் என்ன செய்வது” என வருத்தத்தோடு கூறினார்.

இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலரிடத்தில் கேட்டபோது,

‘நான் மருத்துவரிடத்தில் விளக்கம் கடிதம் கேட்டிருக்கிறேன். மருத்துவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். காலையில் அவர் தாமதமாக வந்தது தவறு. அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு பேர் மீதும் தவறு இருக்கிறது. ஒரு சிலருக்கு ஊசி போட்டால் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் . அவ்வாறே இக்குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது.

ஏன் செல்போனை பேசிக்கொண்டே ஊசி போட்டார் என கேட்டதற்கு, அவர் அன்றுதான் வேலைக்கு சேர்ந்தார். மருந்து எங்கே இருக்கிறது என தெரியாததால் தொலைபேசி வாயிலாக கேட்டு தெரிந்து கொண்டார் என கூறினார்.

ஏன் பலரும் இரண்டு மணி நேரம் மட்டுமே பணியை பார்த்துவிட்டு வீட்டுக்கு செல்கிறார்கள் என கேட்டதற்கு அங்கு நிறைய கர்ப்பிணி தாய்மார்கள் வருவார்கள் அவ்வாறு வரும் பொழுது மருத்துவர்கள் சாப்பிட மூன்று மணி ஆகிவிடும். அவ்வாறான நேரங்களில் மருத்துவர்கள் சாப்பிட்டு வீட்டுக்கு சென்று விடுவார்கள், மீண்டும் மருத்துவமனைக்கு வர மாட்டார்கள். இல்லையெனில் ஒரு சில நேரங்களில் தூரம் அதிகம் உள்ள வீடுகளில் வசிக்கும் மருத்துவர்கள் சீக்கிரமாக வீட்டிற்கு சென்று விடுவார்கள் எனக் கூறினார். மேலும் இவ்வாறு நடைபெறாமல் இருக்க காலை 9 மணி அளவில் மதியம் 3 மணி அளவில் மருத்துவ அதிகாரியை பார்வையிட கூறி இருக்கிறேன்” எனக் கூறினார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *