கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்துவருகிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே சித்தராமையாவுக்கும் காங்கிரஸ் தலைவர் சிவகுமாருக்கும் இடயே மோதல் போக்கு நிலவி வந்தது. அதைத் தொடர்ந்து, மத்திய காங்கிரஸ் தலைமை இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, சமானாதப்படுத்தியே தேர்தலை நடத்தி முடித்திருந்தது.
அப்போதே இருவரும் 5 ஆண்டுகள் ஆட்சியை சரிசமமாக பிரித்து ஆட்சி செய்துகொள்ளலாம் என ‘ரகசிய ஒப்பந்தம்’ மூலம் முடிவெடுத்ததாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், முதல்வராக சித்தராமையா தலைமையிலான அரசு 2.5 ஆண்டு பதவிக் காலத்தை, நவம்பர் 20 அன்று நிறைவு செய்தது. அப்போது முதலே இரு தலைவர்களுக்கு மத்தியில் மீண்டும் ‘ரகசிய ஒப்பந்தம்’ புகையத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “கர்நாடக மக்கள் அளித்த ஆணையை ஏற்று எனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன். ஐந்து உத்தரவாதத் திட்டங்கள் உட்பட கட்சியின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மறுபுறம், கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் தரப்பு, தலைமை மாற்றத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது என்றும், மூத்த தலைவர்களிடையே ‘ரகசிய ஒப்பந்தம்’ குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையிலான உயர்மட்டக் குழு விரைவில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சித்தராமையாவும் சிவகுமாரும் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “கர்நாடக காங்கிரஸ் தலைவராக தனது வரம்புகளை நன்கு அறிவேன். 2028 கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான ஒரு உத்தியை தயாரிப்பதுதான் கட்சியின் இப்போதைய ஒரே கவனம். எனக்கும் முதல்வருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
முதல்வருடன் எனக்கு எங்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்றாக வேலை செய்கிறோம். கர்நாடக மக்களின் ஏராளமான கனவுகளுக்காக நாங்கள் பணியாற்ற உறுதியோடு இருக்கிறோம். எங்கள் இலக்கு 2028 மற்றும் 2029 ஆகும், அதற்காக நாங்கள் பாடுபடுகிறோம்.” எனத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் இரு தலைவர்களுக்குள்ளும் இருக்கும் சிக்கல் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி ஒத்திப்போடப்பட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


