கேரளத்தில் பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கையை ஒரு வாரத்திற்கு முன்பாகவே கேரள அரசுக்கு மத்திய அரசு தகவல் அளித்திருந்தது என்று அமித் ஷா மக்களவையில் கூறியுள்ளார்.
புது தில்லியில், இன்று நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, “வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படும் என்று ஒரு வாரத்திற்கு (ஜூலை 23) முன்பே கேரள அரசுக்கு மத்திய அரசு எச்சரித்தது.
தென் மாநிலத்தில் அதிகன மழை பெய்யும் என்று கணிக்கப்பட்ட பின்னர், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஒன்பது குழுக்களை கேரளத்திற்கு மத்திய அரசு அனுப்பியது. இருப்பினும், கேரள அரசு சரியான நேரத்தில் மக்களை வெளியேற்றவில்லை.
கண்டிப்பாக கேளுங்கள்.. சர்ச்சையான அனுராக் தாக்கூா் பேச்சுக்கு பிரதமர் பாராட்டு
மீட்புக் குழுக்கள் வந்ததைத் தொடர்ந்து, கேரள அரசு எச்சரிக்கையாக இருந்திருந்தால் நிலச்சரிவுகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்திருக்கலாம். இயற்கைப் பேரழிவுகள் குறித்து, குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை செய்யக்கூடிய நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்” என்று தெரிவித்தார்.
கேரளம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடா் கனமழையால் மேப்பாடி பகுதியில் உள்ள மலைப்பாங்கான இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலையில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
பெரிய பாறைகள் மற்றும் மண்ணுடன் கலந்துவந்த காட்டாற்று வெள்ளம், முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழை ஆகிய கிராமங்களைச் சூழ்ந்தது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள், உயிரோடு புதைந்தனா்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தின் 300 வீரா்கள், கடற்படை குழுவினா், தேசிய பேரிடா் மீட்புப் படை, இந்திய கடலோரக் காவல் படை உள்ளிட்ட பல்வேறு முகமைகள் தேடுதல்-மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன.
விமானப் படை ஹெலிகாப்டா்கள், ராணுவத்தின் மோப்ப நாய்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது வரை 180 வரையில் உள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

