Sorting by

×

கே.பாப்பாரப்பட்டி: “குழந்தைகளுக்கான மைதானமா? மது அருந்துவோரின் கூடாரமா?” – சீரமைக்க கோரும் மக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், கே.பாப்பாரப்பட்டி கிராமத்தில் அரசு நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட விளையாட்டு மைதானம், இலவச ‘மது பாராக’ செயல்பட்டு வருவதை அறிந்து அங்கு சென்று பார்த்தோம். தமிழ்நாடு அரசு – மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGS) 2024–25 திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டதாக, மைதானத்தில் தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அரசு மைதானம் பராமரிப்பின்றி, கண்காணிப்பின்றி, சமூக விரோத செயல்களுக்கான இடமாக மாறி வருவது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து அங்கிருந்த சிறுவர்களிடம் கேட்கும் போது,

“நாங்க விளையாட போகணும்னு நினைப்போம். ஆனா… அங்க யாரெல்லாம் இருக்காங்கன்னு பார்த்தாலே பயமா இருக்கும். அதனால திரும்பி வீட்டுக்கே வந்துடுவோம். இல்லன்னா ஊர் முனையில இருக்க மாரியம்மன் கோயிலுக்கு விளையாட போய்டுவோம்” என்கின்றனர்.

சில நேரங்களில் அதுவும் மிகவும் அரிதாக, இளைஞர்கள் சிலர் அந்த மைதானத்தில் விளையாட வருகிறார்களாம். ஆனால் தொடர்ச்சியான மது அருந்தல், அச்சுறுத்தும் சூழல் காரணமாக அவர்களும் அந்த இடத்தைத் தவிர்த்துவிட்டு வேறு இடங்களுக்குச் செல்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து தற்போது அந்த கிராமத்தின் பொறுப்பில் உள்ள பஞ்சாயத்து எழுத்தாளர் தங்கராஜ் என்பவரிடம் பேசும்போது,

“இந்த பிரச்னை குறித்து பல முறை போலீசில் புகார் அளித்துள்ளேன். வட்டார வளர்ச்சி அலுவலரை அழைத்து வந்து நேரில் காட்டியிருக்கிறேன். குடித்து கொண்டிருப்பவர்களிடம் நேரடியாக சென்று, ‘இங்க குடிக்காதீங்க’ன்னு எச்சரித்தும் இருக்கேன். ஆனா யாரும் கேட்க மாட்டேங்குறாங்க. எனினும், இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியா அடுத்த வாரத்தில் மைதானத்தை டிராக்டர் கொண்டு சமனாக்கி சீரமைக்க திட்டமிட்டிருக்கோம். அதேபோல, ‘இங்கு மது அருந்த கூடாது’ன்னு சொல்லும் எச்சரிக்கை பேனரும் வைக்க முடிவு பண்ணியிருக்கோம்.” என்றார்.

அரசு நிதியில் உருவாக்கப்பட்ட ஒரு பொதுச் சொத்து, வீணடிக்கப்படுவது, அதிகாரிகளின் கண்காணிப்பு குறைபாட்டையும், ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *