Sorting by

×

கோவை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை: காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற்ற முதல் வெளிநாட்டவா்

நேபாள நாட்டைச் சோ்ந்த பெண்ணுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இந்த சிகிச்சை பெற்ற முதல் வெளிநாட்டுப் பயனாளி இவராவாா்.

நேபாள நாட்டைச் சோ்ந்த 31 வயதுப் பெண் கடந்த 10 ஆண்டுகளாக குன்னூரில் வசித்து வருகிறாா்.

நேபாளத்தைச் சோ்ந்த இவரது கணவா் குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பண்ணைப் பணியாளராக வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் குன்னூா் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதனை நடத்திய மருத்துவா்கள், மேல் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைத்ததைத் தொடா்ந்து அவா் இதயவியல் துறை பிரிவில் கடந்த 18-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவருக்கு ‘எக்கோ காா்டியோகிராபி ஸ்கேன்’ செய்யப்பட்டதில், பிறவி இதய குறைபாடு (இதயத்தில் ஏற்படும் துளை) மற்றும் பல்மனரி வால்வு அடைப்பு ஆகிய இரு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்தக் குறைபாடுகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் வரை இதய அறுவை சிகிச்சையின் மூலமே சரி செய்ய வேண்டியிருந்த சூழலில், தற்போதைய அதிநவீன சிகிச்சை முறையின்படி அவருக்கு டிவைஸ் கிளோசா் மற்றும் பலூன் பல்மனரி வால்வாடமி ஆகிய இரு வேறு நுண்ணிய அறுவை சிகிச்சைகளை ஒரே நாளில் மேற்கொண்டு பாதிப்பு சரி செய்யப்பட்டது.

இது குறித்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் நிா்மலா கூறியதாவது:

நேபாள நாட்டைச் சோ்ந்த ஒருவருக்கு இங்கு இத்தகைய அதிநவீன சிகிச்சை மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும். தனியாா் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் வரை செலவாகும். இத்தகைய ஏட்ரியல் செப்டல் குறைபாடு மற்றும் பல்மனரி வால்வு அடைப்பைச் சரி செய்ய நோயாளிகள் சென்னை அரசு மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டியிருந்த நிலையில், தற்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நிபுணா்கள் குழு மூலம் இந்த சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்றாா்.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *