நீதிக் கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவர், இந்தியக் குடியரசுக் கட்சியின் முதல் தலைவர், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோருடன் பயணித்து அரசியல் செய்தவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என ஏகப்பட்ட பெருமைகளைக் கொண்டவர் சென்னையின் முன்னாள் மேயர் என்.சிவராஜ்.
தமிழக முதல்வராக ஜெ.ஜெயலலிதா இருந்த போது சென்னை தங்க சாலை மணிக்கூண்டு பகுதியில் இவருக்கு சிலை நிறுவப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடத்தில் மேம்பாலப் பணிகள் நடக்கவிருப்பதாகவும் தற்காலிகமாக எனச் சொல்லியும் சிலை இடம் மாற்றப் பட்டது. அதாவது அதே சாலையில் ஒரு ஓரமாகக் கொண்டு போய் சிலையை வைத்தார்கள்.

அதன்பின் மேம்பாலப் பணிகள் முடிவடைந்து விட்டன. அது முடிந்து சில வருடங்களாகிய நிலையிலும், இன்று வரை சிவராஜின் சிலை பழைய இடத்துக்கு வந்தபாடில்லை.
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் வந்தால் வடசென்னையின் சமூக ஆர்வலர்கள் சென்னை மாநகராட்சியிடமும் தமிழக அரசிடமும் இது தொடர்பாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் யாரும் செவி கொடுப்பதாக இல்லை.
தொடர்ந்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் வடசென்னைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எ.த.இளங்கோவிடம் பேசினோம்.
”பட்டியலினத்தைச் சேர்ந்தவரா இருந்தாலும் அனைத்து சமூக மக்களூக்காகவும் பாடுபட்ட தலைவர் அவர். இப்ப நேரு ஸ்டேடியம் இருக்கிற இடத்துல முதல்ல பீப்புள்ஸ் ஸ்டேடியம் இருந்தது. அது சிவராஜ் காலத்தில்தன் திறந்து வைக்கப்பட்டது. மக்கள் அவர் மீது கொண்ட அன்பால் அவரை தந்தை சிவராஜ்னே கூப்பிட்டு வந்திருக்காங்க. இவ்வளவு பெருமைகளைப் பெற்ற அவருடைய பிறந்த நாளூம் நினைவு நாளூம் ஒரே நாள்தான். செப்டம்பர் 29.

மேம்பாலம் அமையறதுக்காகனு சொல்லி சிலையை இடம் மாத்தினது சரி. பாலப் பணிகள் முடிவடைஞ்சு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துட்டா சிலையை மறுபடியும் அதே இடத்துல வைக்கிறதுதானே முறை. ஏற்கனவே சில தலைவர்களின் சிலைகளை இப்படி மாத்திட்டு திரும்ப அதே இடத்துல கொண்டு போய் வச்சிருக்காங்க. என்.எஸ்.கே. சிலையைக் கூட தி.நகர்ல இருந்து கலைவாணர் அரங்க முகப்புல வைக்க அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைக்க, அதற்குச் சம்மதித்தது அரசு.

ஆனா சிவராஜ் சிலை மட்டும் ஏன் வருஷக் கணக்கா ரோட்டோரத்துலயே கிடக்கணும்? அதுவும் இப்ப சிலை இருக்கிற இடம் வாகனங்கள் நிறுத்துமிடமா, சமயத்துல பலரும் அவசரத்துக்கு ஒதுங்கி சிறுநீர் கழிக்கிற திறந்த வெளி கழிவறைப் போல அசுத்தமான இடமா இருக்கு.
அந்த இடத்துல அவர் சிலையைப் பார்க்கறப்பவே வேதனையா இருக்கு. இந்தியா சுதந்திரம் அடையும் முனபே சென்னை மாநகரின் மேயராக இருந்தவருக்கு சென்னை மாநகராட்சி தர்ற மரியாதை இதுதானா? நாங்களூம் ஒவ்வொரு வருஷமும் செப்டம்பர் மாசம் அவருடைய பிறந்த மற்றும் நினைவு நாளையொட்டியாவது ஒரு விடிவு பிறக்காதானு தொடர்ந்து மனு கொடுத்துட்டு வர்றோம்.
எங்களைச் சமாளிக்க அந்த நாள் மட்டும் சில அதிகாரிளை அனுப்பி அந்த இடத்தைச் சுத்தப்படுத்தி பூ அலங்காரமெல்லாம் செய்து ஒரு மாலையை வாங்கிப் போட்டுட்டுப் போயிடுறாங்க. மறுநாள்ல இருந்து அதே பழைய நிலைதான்.

சென்னை மாநகராட்சி நிர்வாகம், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் வரை எல்லாரையும்பார்த்தாச்சு. ஆனா வேலை மட்டும் நடக்கவே மாட்டங்குது. காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூட முதல்வருக்கு இது தொடர்பா லெட்டர் அனுப்பினார். ஆனா இதுவரை இந்த விஷயத்துல தீர்வே கிடைக்கலை. வரும் செப்டம்பர்லயாவது நல்ல தீர்வு கிடைக்கணும்னு ஆசைப்படுறோம்.
ஒருவேளை பழைய இடத்துல சிலையை வைக்கறதுல போக்குவரத்து பிரச்னைகள் இருக்குன்னா பாலத்தை ஒட்டியே மாநகராட்சி பூங்கா இருக்கு.. அதுலயாவது வைக்கலாம்கிறதுதான் எங்க கோரிக்கை” என்கிறார் இளங்கோ.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


