Sorting by

×

சித்தராமையா வீட்டில் விருந்து; இறங்கிவந்த D.K.சிவக்குமார் – முடிவுக்கு வந்ததா முதல்வர் பஞ்சாயத்து?

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா வீட்டிற்கு இன்று காலை துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சென்றிருக்கிறார்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், துணை முதலமைச்சர் சந்தித்துக் கொள்வது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை தான். ஆனால், இவர்கள் விஷயத்தில் நிச்சயம் இதை கவனித்தே ஆக வேண்டும்.

முதலமைச்சர் யார்?

2023-ம் ஆண்டு கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றியை பெற்றது.

இந்த வெற்றிக்கு பிறகு, ‘சித்தராமையாவா… டி.கே.சிவக்குமாரா?’ – யாருக்கு கர்நாடகா முதலமைச்சர் பதவி என்கிற கேள்வி இருந்துகொண்டே இருந்தது.

சித்தராமையா - டி.கே.சிவக்குமார்
சித்தராமையா – டி.கே.சிவக்குமார்

இருவருக்கும் ‘சூப்பர் ஆஃபர்’ என்கிற ரீதியில், சித்தராமையாவிற்கு கர்நாடகா முதலமைச்சர் பதவியும், டி.கே.சிவக்குமாருக்கு கர்நாடகா துணை முதலமைச்சர் பதவி மற்றும் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. அதில் இருவருமே ‘ஹேப்பி’ தான்.

ஆனால், அப்போதே, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதலமைச்சராக இருப்பார்… அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே.எஸ் முதலமைச்சராக இருப்பார் போன்ற பேச்சுகள் அடிப்பட்டன. ஆனால், இதை யாரும் உறுதிசெய்யவில்லை.

பேச்சுகள்…

இப்போது கர்நாடகா தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன.

சில மாதங்களுக்கு முன்பே, ‘டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆகப்போகிறார்’ என்கிற பேச்சுகள் கர்நாடகாவில் அடிப்பட தொடங்கிவிட்டன. அவரது ஆதரவாளர்களும் ஓப்பனாகவே பேசினார்கள்.

ஆனால், அது குறித்து சித்தராமையாவோ, டி.கே.சிவக்குமாரோ வாயை திறக்கவே இல்லை. அவர்கள் சொன்னதெல்லாம் ஒன்று தான், ‘அனைத்தையும் கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்’.

இப்படி திரைக்கு பின்னும், அங்கொன்றும் இங்கொன்றும் எழுந்துகொண்டிருந்த சத்தம், சமீபத்தில் டி.கே.சிவக்குமாரிடம் இருந்தே வந்தது.

சித்தராமையா
சித்தராமையா

சித்தராமையா Vs டி.கே.சிவக்குமார்

 டி.கே.சிவக்குமார் சமீபத்தில், ‘சொன்ன வார்த்தையை காப்பாற்றுவது தான் உலகின் மிகப்பெரிய சக்தி ஆகும்’ என்று பேசியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘உலகத்தை மக்களுக்காக மேம்படுத்தாது என்றால் ‘வார்த்தை’ ஒரு சக்தி இல்லை’ என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் சித்தராமையா.

இந்த மோதல் அவர்களது சண்டையை வெட்ட வெளிச்சமாக்கியது.

சமாதானம்

சித்தராமையா, டி.கே.சிவக்குமார் சண்டையை காங்கிரஸ் மேலிடம் சிறிதும் விரும்பவில்லை. அவர்கள் உடனடியாக இருவரிடமும் பேசியிருக்கிறார்கள். இருவரையும் சமாதானமாக போக சொல்லியும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

இதையடுத்து, நேற்று டி.கே.சிவக்குமாரை உணவருந்த வீட்டிற்கு அழைத்திருந்தார் சித்தராமையா. இந்த அழைப்பை ஏற்று சிவக்குமாரும் சித்தராமையா வீட்டிற்கு சென்றிருக்கிறார்… இருவரும் ஒன்றாக உணவருந்தி உள்ளனர்.

டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார்

சித்தராமையா பேச்சு

பின்னர், இருவரும் இணைந்தே செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். அப்போது பேசிய சித்தராமையா, “எங்களுடைய இலக்கு 2028-ம் ஆண்டு தேர்தல். உள்ளாட்சி தேர்தல் மிக முக்கியமானது. நாங்கள் 2028-ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது பற்றி கலந்தாலோசித்தோம்.

நாங்கள் அதை ஒற்றுமையாக செய்வோம். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. எதிர்காலத்திலும் வராது” என்று கூறியிருக்கிறார்.

டி.கே.சிவக்குமார் என்ன சொல்கிறார்?

டி.கே.சிவக்குமாரோ, “அரசியல் ரீதியாக நாங்கள் இருவரும் ஒரே திசையில் பயணிக்கிறோம். கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ, அதை அப்படியே நாங்கள் பின்பற்றுவோம்.

எதிர்காலத்திலும், கட்சிக்குள் எந்தப் பிரிவினைவாதமும் இருக்காது. 2028-ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க அனைத்து எம்.எல்.ஏக்களும், காங்கிரஸ் கட்சியும் வலுவாக மாற வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

இருவருமே கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ, அதை செய்வோம் என்பதை இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மையப்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் இருவருமே முதலமைச்சர் பதவி குறித்து தான் ஒளிவுமறைவாக பேசுகிறார்கள்.

ஆக, கட்சி மேலிடம் என்ன செய்யப்போகிறது… என்ன முடிவு எடுக்கப்போகிறது? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *