சிவகங்கை அருகே வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்கள் சேகரித்து வைத்திருந்த தோட்டத்து வீடு நள்ளிரவில் திடீரென வெடித்துச்சிதறிய சம்பவம் குறித்து காவல்துறையினர் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
சிவகங்கை அருகே அரசேனரி கீழமேடு என்ற கிராமத்தில் உள்ள தோட்டத்து மோட்டார் பம்பு செட் அருகே உள்ள ஒரு ஓட்டு வீட்டில் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அரவிந்தன் என்பவர் அவ்வப்போது அங்கு வந்து சென்றுள்ளார்.
இவர் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை இந்த ஓட்டு வீட்டில் சேகரித்து வைத்திருந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அந்த ஓட்டு வீட்டில் இருந்த வெடி மருந்து எதிர்பாராத விதமாக வெடித்தது. அதில் ஓட்டுவீடு முழுவதும் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பலத்த சப்தம் கேட்டதால் அருகில் இருந்தவர்கள் அச்சமடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் அரவிந்தன்
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் லிங்கபாண்டியன், உதவி ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் அளித்த புகாரின்பேரில் காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, வெடிகுண்டு வெடித்த வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற அரவிந்தன் என்பவரை சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அரவிந்தன் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் உள்பட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் முக்கிய நபர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினாரா? அல்லது விற்பனைக்காக வெடிகுண்டை தயாரித்தாரா? என்கிற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியிருப்பு பகுதி அருகில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

