Sorting by

×

தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு அனைத்து வகையிலும் இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு – ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரையில்,

அப்படியே உங்கள் முகத்தை எல்லாம் தொடர்ந்து அமைதியாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.

இப்படி தான் ஒரு முறை எங்களை எல்லாம் ஆளாக்கிய நம்முடைய ஒப்பற்றத் தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா ஒரு கூட்டத்தில் பேசுகின்றபோது சொன்னார்.

அதிலும் குறிப்பாக, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்றபோது இதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். இரண்டு நிமிடம் பேசாமல் இருந்திருக்கிறார். எல்லோருக்கும் கொஞ்சம் வியப்பாக இருந்திருக்கிறது. உடம்பு ஏதாவது சரியில்லையா? தொண்டை ஏதும் சரியில்லாமல் இருக்கிறதா? அதற்குப் பிறகு பேச ஆரம்பித்திருக்கிறார். அந்த உணர்வு தான் எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது.

பல்லாயிரம் கிலோ மீட்டர்களைக் கடந்து, வேறொரு நாட்டில் நீங்களும், நானும் சந்திக்கின்றபோது ஏற்படுகின்ற இந்த மகிழ்ச்சிதான், உண்மையான தமிழ்ப் பாசம்! தமிழினப் பாசம் இது!

உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும், தமிழன் இருப்பான்; தமிழ்க் குரலைக் கேட்கலாம் என்று சொல்கின்ற அளவுக்கு உலகெல்லாம் பரவி, தங்களுடைய அறிவால், உழைப்பால் உயர்ந்திருக்கின்ற இனம்தான், நம்முடைய தமிழினம்! நம்முடைய இனத்திற்கான இதுதான் மிகப் பெரிய பெருமையாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

நில எல்லைகளும், கடல் எல்லைகளும் நம்மைப் பிரித்தாலும், மொழியும், இனமும் நம்மை இணைக்கின்றது! கண்டங்களைக் கடந்துவிட்டாலும், நம்முடைய தொப்புள் கொடி அறுந்துவிடவில்லை!

பேரறிஞர் அண்ணாதான் சொல்வார். “ஒருதாய் வயிறு தாங்காது என்ற காரணத்தால், தனித்தனி தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புகள் நாம்” என்று சொல்வார். அப்படி உடன்பிறப்புகளாக, தமிழர்களான நாம் இணைந்திருக்கிறோம்!

ஜெர்மனி நாட்டில் உங்கள் எல்லோரையும், அதுவும் உங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்கின்றபோது மகிழ்ச்சி. நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்புமிக்க பொசிஷனில் இருப்பதை பார்க்கும்போது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக, திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவனாக மிகந்த மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமை அடைகிறேன்!

நம்முடைய திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்த பிறகு, தமிழ்நாடு எல்லா வகையிலும் இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தொழில் வளர்ச்சியில், மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய தமிழ்நாட்டு வளர்ச்சியைப் பற்றி நீங்கள் எல்லாம் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள் – சோஷியல் மீடியாக்களில் பார்த்திருப்பீர்கள்.

இங்கு இருக்கக்கூடிய உறவினர்கள், நண்பர்கள் மூலமாக கேள்வியும் பட்டிருப்பீர்கள். இந்த வளர்ச்சியை இன்னும் இன்னும் விரைவுப்படுத்த வேண்டும் என்று தான் முதலீட்டாளர்கள் மாநாடு, அதாவது முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் ஆகியவற்றை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.

ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், ஸ்பெயின், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கெல்லாம் பயணத்தை மேற்கொண்டு ஏராளமான முதலீடுகளைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்து, நம்முடைய மக்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்.

இப்படி வெளிநாடுகளுக்கு வரும்போது, முதலில் எனக்குள் என்ன தோன்றுகிறது என்றால், இந்த நாட்டில் வாழுகின்ற நம்முடைய தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுடைய வாழ்க்கைத்தரம் எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது? பெரும் பாடுபட்டு தலைநிமிர்ந்த இந்த இனம், இந்த மண்ணில் சுயமரியாதையுடன் நடைபோடுவதை பார்க்கவேண்டும் என்று நான் நினைப்பேன்.

அதிலும் முக்கியமாக, ஒரு அயலக மண்ணில், நம்முடைய தமிழைக் கேட்கவேண்டும் என்ற ஆசை எனக்கு வந்துவிடும். எல்லோருக்கும் அப்படிதான். அதனால்தான், ஜெர்மனிக்கு வந்தவுடனே முதலில் உங்களை சந்திப்பதற்கு வந்துவிட்டேன்.

இப்போது உங்களுடைய ஆரவாரத்தை கேட்கும்போது மகிழ்ச்சியை பார்க்கும்போது, நொடியில் தமிழ்நாட்டிற்கு டிராவல் செய்த உணர்வு ஏற்படுகிறது.

மனிதன் எங்கே சென்றாலும், அவனுடைய வேர் இருக்கின்ற தாய்நிலத்தை மறக்க மாட்டான். அப்படித்தான் உங்களுடைய நினைப்பும், எப்போதும் தமிழ்நாட்டின் மீதே இருக்கும். தமிழ்நாட்டில் இருக்கின்ற நாங்களும் உங்களை அன்போடு பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் நம்முடைய திராவிட மாடல் அரசில், அயலகத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

இந்த ஆண்டு மட்டும், இந்த அயலகத் தமிழர் நாள் விழாவுக்கு எத்தனை நாடுகளில் இருந்து நம்முடைய தமிழர்கள் சென்னைக்கு வந்திருந்தார்கள் தெரியுமா? 62 நாடுகளிலிருந்து வந்தார்கள்! சொந்த மண்ணில் கால் வைத்தபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சியைப் பார்த்து அதை நான் ரசித்தேன் – புலங்காகிதம் அடைந்தேன் – பூரிப்படைந்தேன்.

அடுத்து, அயலகத் தமிழர் நலவாரியம். அயலகத் தமிழர்களுக்கான டோல்-ஃப்ரீ ஹெல்ப்லைன், அதேபோன்று புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு சுழல் நிதி, தமிழ்நாட்டுக்கு வெளியே வாழுகின்ற தமிழர்களுக்கு இன்ஷுரன்ஸ் என்று ஏராளமான திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று, எதிர்பாராதவிதமாக உயிரிழக்க நேரிடுகிறவர்களின் குடும்பத்திற்கு, நிதியுதவியும், பென்ஷனும் வழங்குகிறோம்.

இப்படி பார்த்து பார்த்து செய்து தருவதுடன், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஓடோடி வந்து உதவுகிறோம்.

நம்முடைய அரசின் திட்டங்களை நாம் ஏற்படுத்தி தருகின்ற வாய்ப்புகளை நீங்கள் எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

உலக நாடுகளை குறிப்பாக, வளர்ச்சியடைந்த நாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்று பார்ப்பவர்கள் நீங்கள். இதுபோல நம்முடைய தமிழ்நாடும் வளரவேண்டும் என்று நான் நினைப்பது போல தான் நீங்களும் நிச்சயமாக நினைப்பீர்கள். என்னைவிட அதிகமாகதான் நினைப்பீர்கள். எனவே, உங்களால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து உங்கள் தாய் மண்ணுக்கு நீங்கள் செய்யுங்கள் – செய்வீர்கள் – செய்து கொண்டிருப்பீர்கள்.

நீங்கள், சிறியதாக பிசினஸ் செய்து கொண்டிருந்தாலும், உங்கள் தொழிலைத் தமிழ்நாட்டிலும் தொடங்க முயற்சி செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tamil Nadu is progressing in all aspects today, said Chief Minister Stalin in Germany.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *