Sorting by

×

திருப்பத்தூர் பேருந்து விபத்து: ஸ்டாலின் முதல் பிரேமலதா வரை இரங்கல்

காரைக்குடி – திருப்பத்தூர் சாலையில் பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப்பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் முதற்கட்டத் தகவல்கள் வந்திருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள் மதுரை, சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டுச் செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரச் செய்தியறிந்ததும் மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.

திருப்பத்தூர் பேருந்து விபத்து
திருப்பத்தூர் பேருந்து விபத்து

உடனடியாக மாவட்ட ஆட்சியரையும் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் திரு. கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களையும் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்திடுமாறு அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், “சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் மோதியதில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தக்க நிவாரணம் அளிக்கவும், படுகாயமடைந்தோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். பேருந்து விபத்துகள் தொடரும் நிலையில், சாலைப் பயணங்களுக்கான உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் பேருந்து ஓட்டுநர்கள் மட்டுமன்றி, அனைவரும் தவறாமல் பின்பற்றி, பாதுகாப்போடு பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இரண்டு அரசுப் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் பெண்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் வரும் செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன. தென்காசியில் நடந்த உயிரிழப்புகளின் ரணம் ஆறும் முன்பே, மீண்டுமொரு பெரும் விபத்து நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்கள் முழு குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டுமென இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். இத்தொடர் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் முறையான விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, இதற்கான காரணிகளை அறிந்து, அவற்றிற்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டுமெனவும் திமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பா.ம.க தலைவர் அன்புமணி, “சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை தேவை! சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கொடிய விபத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் முழுமையான நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்மைக்காலமாக சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன் தென்காசி அருகில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்திருந்தனர். இப்போது இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்தில் சிக்கிய இரு பேருந்துகளில் ஒரு பேருந்தின் ஓட்டுனர் தூங்கியது தான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அவருக்கு ஓய்வில்லாமல் தொடர்ந்து பணி வழங்கப்பட்டதால் ஏற்பட்ட சோர்வு தான் விபத்துக்கு காரணமா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும். சாலைகளை சரி செய்வது, பேருந்துகளை சீரமைப்பது, போக்குவரத்து விதிகளை தீவிரமாக பின்பற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் சாலை விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விபத்த்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.” எனத் தெரிவித்திருக்கிறார்.

தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்
தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்த 11 பேர்க்கு இரங்கல் தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *