Sorting by

×

நெல்லை: 523 தூய்மைப் பணியாளர்கள் திடீரென பணியிலிருந்து நீக்கம்; வேலை கேட்டு போராட்டம்; பின்னணி என்ன?

திருநெல்வேலி மாநகராட்சியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, இனி உங்களுக்கு வேலை இல்லையென 523 தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் திடீரென நிறுத்தப்பட்டனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள், இவர்களின் குழு பதிவுசெய்யப்படாத குழு என்பதால் இனி வேலை இல்லை எனவும், தனியார் அமைப்பிலுள்ள பணியாளர்களை வைத்து இனி பணியைப் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர். இவ்வாறு அறிவிக்கப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான், இந்த சுய உதவிக் குழுவைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் அலுவலகத்திலுள்ள மரத்தின் மீது ஏறிக் கிளை வெட்டுகையில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

திருநெல்வேலி தூய்மைப் பணியாளர்கள் – போராட்டம்

அதனால், உயிரிழந்தவருக்கு இழப்பீடு கோரி சுய உதவிக் குழுவைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்குப் பிறகு, இவர்களுக்கு வேலை கிடையாது என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இதனால், தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களிடத்தில் பேசியபோது, கடந்த 20 ஆண்டுகளாக இவர்கள் இந்த மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வருவது தெரியவந்தது. மேலும், 45 ரூபாய் சம்பளத்தில் தங்களின் பணியைத் தொடங்கிய இவர்கள், இன்று 12 மணி நேரம் வேலைக்கு 480 ரூபாய் சம்பளம் பெறுவதாகத் தெரிந்தது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களிடம் பேசுகையில், “எங்கள் குழுவைச் சேர்ந்த 24 வயது இளைஞர், இரண்டு வாரங்களுக்கு முன் தூய்மைப் பணியை மேற்கொள்ளும்போது மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அவரின் குடும்பத்துக்காக மாநகராட்சியிடம் போராடி நஷ்டஈடு தொகையைப் பெற்றுக் கொடுத்தோம். அந்தப் போராட்டத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் தற்போது எங்களைப் பணிநிறுத்தம் செய்திருக்கிறார்கள்.

திருநெல்வேலி தூய்மைப் பணியாளர்கள் – போராட்டம்

எங்களின் வாழ்வாதாரமே இந்தப் பணியை நம்பிதான் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக இந்தப் பணியை நாங்கள் செய்தும் எங்களுக்கான மரியாதை எதுவும் கிடைக்கவில்லை. குறைவான ஊதியம், அதிக நேர வேலை என அனைத்தையும் பொறுத்துக் கொண்டோம். கொரோனா காலத்தில் ஊரடங்கு இருந்தபோதும் மறுக்காமல் நாங்கள் பணி மேற்கொண்டபோது, நாங்கள் பதிவு செய்யாத குழுவைச் சேர்ந்தவர்கள் என்று இந்த அதிகாரிகளுக்கும், அரசுக்கும் தெரியவில்லையா?

கொரோனா காலத்தில் நாங்கள் எங்களின் குடும்பம், குழந்தைகள் என எதைப் பற்றியும் நினைக்காமல் நோயாளிகள் இருக்கும் இடத்துக்குச் சென்று எங்கள் பணியைச் செய்தோம். ஆனால், அதற்கான எந்த சன்மானமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இப்போது, போதிய கல்வியறிவு இல்லாத எங்களிடம், எவ்வாறு பதிவு செய்வது என எந்தத் தகவல்களையும் தெரிவிக்காமல் எங்களைப் பணி நிறுத்தம் செய்கின்றனர்.

திருநெல்வேலி தூய்மைப் பணியாளர்கள் – போராட்டம்

இனி எங்களின் நிலை என்னவாகும்? எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும்? இரண்டு நாள்களாக உணவு இல்லாமல், உறங்காமல் குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு, எங்களின் வேலைக்காகப் போராடுகிறோம். ஆனால், இந்தப் போராட்டம் தொடங்கியது முதல் இதுவரை மாநகராட்சியைச் சேர்ந்த யாரும் எங்களைச் சந்தித்துப் பேசவில்லை, எங்களுக்கு வேலை வழங்குவதாகவும் கூறவில்லை.

திருநெல்வேலி தூய்மைப் பணியாளர்கள் – போராட்டம்

இவ்வளவு ஆண்டுகளாகக் குப்பைகளைச் சுத்தம் செய்து பணிகளை மேற்கொண்டோம். இன்று நாங்கள் கண்ணீருடன் இருக்கும்போது எங்களுக்கு உதவ அரசோ, அரசு அதிகாரிகளோ யாரும் முன்வரவில்லை. எங்களுக்காக நாங்களே போராடுகிறோம். எங்களுக்கு நிரந்தர வேலை வேண்டும் அதுவரை இந்தப் போராட்டம் தொடரும்” என்று உறுதியாகக் கூறினர்.

வண்டி வண்டியாக வக்கிரப் பேச்சு, வசமாகச் சிக்கிய சூப்பர்வைசர்கள்… கதறும் பெண் தூய்மைப் பணியாளர்கள்!

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *