Sorting by

×

பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி!

பரபரப்பான ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புணேவில் இன்று (ஜன.31) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். இன்றையப் போட்டியிலும் சஞ்சு சாம்சன் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறினார். அவர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அவரைத் தொடர்ந்து, திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இருவருமே 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அவர்களது விக்கெட்டினை சாக்யூப் மஹ்முத் வீழ்த்தினார். இந்திய அணி 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்திய அணி 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, அபிஷேக் சர்மா மற்றும் ரிங்கு சிங் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடினர். அபிஷேக் சர்மா 19 பந்துகளில் 29 ரன்கள் (4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), ரிங்கு சிங் 26 பந்துகளில் 30 ரன்கள் (4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழலில் இருந்தபோது, ஷிவம் துபே மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டது. அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். ஹார்திக் பாண்டியாக 30 பந்துகளில் 53 ரன்கள் (4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்), ஷிவம் துபே 34 பந்துகளில் 53 ரன்கள் (7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் சாக்யூப் மஹ்முத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜேமி ஓவர்டான் 2 விக்கெட்டுகளையும், பிரைடான் கார்ஸ் மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.

பவர்பிளேயான முதல் 6 ஓவர்களில் 62 ரன்கள் சேர்த்த நிலையில் அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் 39 ரன்கள்(7 பவுண்டரி, 1 சிக்ஸர்) சேர்த்து விக்கெட் கொடுத்தார். அவருக்குப் பின்னர் பில் சால்ட் 23 ரன்னில் பெவிலியன் திரும்ப, கேப்டன் ஜோஸ் பட்லர் 2 ரன்னில் வீழ்ந்தார்.

முந்தையப் போட்டிகளில் சரியாக விளையாட ஹாரி புரூக் இந்திய அணி பந்து வீச்சாளர்களை 2 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரி விளாசி திணறடித்தார். வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஹாரி புரூக் விக்கெட்டை இழக்க லிவிங்ஸ்டன் 9 ரன்களிலும் ஜேகப் பெத்தேல் 6 ரன்களிலும் கார்ஸ், ஆர்ச்சர் ரன் ஏதுமின்றி வெளியேறினர்.

முடிவில் 19.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 166 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணித் தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. மேலும், இந்திய அணி டி20 தொடரை சொந்த மண்ணில் 17 வது முறையாக வென்று புதிய சாதனையையும் படைத்திருக்கிறது.

இவ்விரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசிப் போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெறுகிறது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *