2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தொடங்கிவிட்டன. அதன் அடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக-வின் பொதுக்கூட்டம் நடந்தது.
அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “தொண்டர்கள் கூட்டணி குறித்துக் கவலைப்பட வேண்டாம். நாம் பலமான கூட்டணி அமைப்போம். கூட்டணியின் முதல்கட்டமாக நம்முடன் பாஜக கூட்டணி சேர்ந்திருக்கிறது.

நாம் பாஜக-வுடன் கூட்டணி வைத்தவுடன் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கென்ன?. வாக்குகள் சிதறாமல் அதிமுக-வுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கூட்டணி அமைக்கப்பட்டது.
மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டும் என்பதற்காகவே கூட்டணி அமைத்துள்ளோம். அதிமுக-வை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் பேசுகின்றன.
31 வருடங்கள் தமிழகத்தில் ஆட்சி புரிந்த, பொன் விழா கண்ட அதிமுக-வை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்துவிட முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது அதிமுக-வை அழிக்க கருணாநிதி எவ்வளவோ முயற்சிகள் செய்தார். ஆனால், அனைத்தையும் முறியடித்தோம்.
கருணாநிதியாலேயே அதிமுக-வை ஒழிக்க முடியவில்லை. ஆகவே, ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது. 2021-ல் மக்களை ஏமாற்றுவதற்காக சுமார் 500-க்கும் மேலான அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.

பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது திமுக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், சிலிண்டர் மானியம், கல்விக் கடன் என்று எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை. போதைப் பொருள் பரவல் இயல்பாகிவிட்டது. ஊழல், லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.
திமுக அமைச்சர்கள் மீது உள்ள அனைத்து ஊழல் வழக்குகளும் அதிமுக ஆட்சி அமைந்ததும் விரைந்து விசாரிக்கப்படும். ஒருவரையும் விடமாட்டோம். வேண்டும் என்றே பொய் வழக்கு போடுவது, அதிமுக-வை அவதூறாக பேசுவதை எல்லாம் நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா? வேடிக்கை பார்த்த அந்தக் காலம் எல்லாம் மாறிவிட்டது. அன்று இருந்த பழனிசாமி வேறு, இனி பார்க்க போகிற பழனிசாமி வேறு.” எனப் பேசியிருக்கிறார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


