Sorting by

×

“பூர்ணசந்திரனின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” – எல்.முருகன்

“பூர்ணசந்திரனின் இறப்பிற்கு திமுக அரசாங்கமும் ஸ்டாலினும் முழுப் பொறுப்பேற்க வேண்டும்…” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

அஞ்சலி செலுத்தும் முருகன்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக் கோரி தீக்குளித்து உயிரிழந்த பூர்ணசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல மதுரை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், செய்தியாளர்களிடம் பேசும்போது “திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பூர்ணசந்திரன் தியாகம் செய்திருக்கிறார், தீக்குளிப்பை யாரும் செய்யக்கூடாது. தர்மத்தை காக்க வேண்டுமென்றால் உயிரோடு இருந்து அதற்காக போராடி தர்மத்தை வெல்ல வேண்டும். ஆனால், பூர்ணசந்திரன் தியாகம் செய்திருக்கிறார் அவருடைய தியாகம் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறும்.

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் வரை எல்லோரும் போராடுவோம், அதுதான் பூர்ண சந்திரனுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும், அவருடைய குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்கும். பூர்ணசந்திரனுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது, கார்த்திகை தீபம் ஏற்றுவதாக இருக்க வேண்டும்.

பூர்ணசந்திரனின் இழப்பிற்கு காரணம் திமுக அரசுதான், இதற்கு திமுக அரசாங்கம்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும், ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டும். பூர்ண சந்திரனின் குடும்பத்திற்கு தமிழக அரசு தரப்பிலிருந்து ஆறுதல் சொல்லவோ, எந்த முன்னெடுப்பும் செய்யாதது திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது.

எல்.முருகன்

திமுக அரசு, உயிர்தியாகம் செய்த பூர்ணசந்திரன் வீட்டுக்கு கூட வரவில்லை, 3 அமைச்சர்கள் இருக்கிறார்கள், அவர்களெல்லாம் வந்து பார்க்கவில்லை. பூர்ணசந்திரனின் குடும்பத்தினரை சந்திக்கவில்லை ஆறுதல் கூறவில்லை என்பது அந்த குடும்பத்தினருக்கு செய்கின்ற அவமரியாதையாக பார்க்கிறோம். கடவுளுக்காக உயிரை தியாகம் செய்த பூர்ணசந்திரன் திமுக குடும்பத்தை சார்ந்தவராக இருந்தபோதிலும் அமைச்சரோ, அரசோ மரியாதை செய்யாததை பூரண சந்திரனின் இழப்புக்கான அவமரியாதையாக பார்க்கிறோம், அவரது தியாகம் நிச்சயமாக வெல்லும். தீபம் நிச்சயம் ஒரு நாள் ஏற்றப்படும். நிச்சயமாக திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள், பூர்ணசந்திரன் பாஜக-விலும் இல்லை, எந்த அமைப்பிலும் இல்லை.

அவர் ஒரு இந்துவாக முருக பக்தராக அவருடைய உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார், கார்த்திகை நாளில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது உலகம் முழுவதிலும் இருக்கின்ற முருக பக்தர்களுடைய எண்ணமாக, கோரிக்கையாக இருக்கிறது. அந்த கோரிக்கையைத்தான் பூர்ணசந்திரன் இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார். அதை திமுக அரசு கொச்சைப்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற வேண்டும் என்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கை, இதற்காக ஒவ்வொரு வருடமும் கைது செய்வது திருப்பி அனுப்புவது என தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நியாயமாக பக்தர்கள் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்கள் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய திமுக அரசு, ஓட்டு அரசியலுக்காக திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை பக்தர்கள் உணர்வாக பார்க்க வேண்டும். கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஒவ்வொருவரின் லட்சியம், எண்ணம், முருக பக்தர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. அதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொருவருக்கும் சாமி கும்பிடுவது அடிப்படை உரிமை, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. வழிபாட்டு உரிமையை கொடுத்திருக்கிறது, அந்த உரிமையை, சட்டத்தை திமுக அரசு காலில் போட்டு மிதிக்கிறது.

உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மதிக்காத அரசாங்கமாக இருந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் தமிழக மக்களுக்கும், முருக பக்தர்களுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *