Sorting by

×

‘பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகத் தொகுப்புச் சட்டங்கள்’ – கொதிக்கும் தொழிற்சங்கங்கள்!

இந்தியாவில் கடந்த 1930 முதல் 1950 வரையில் தொழிலாளர் நலனுக்காக 44 சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் 15 சட்டங்களை நீக்கிவிட்டு எஞ்சிய 29 சட்டங்களை ஒருங்கிணைத்து ஊதிய விதி – 2019, தொழில்துறை தொடர்பு விதி – 2020, சமூகப்பாதுகாப்பு விதி – 2020, பணிப்பாதுகாப்பு, சுகாதாரம், பணிச்சுழல் விதி – 2020 என 4 தொகுப்புச் சட்டங்களாக மத்திய அரசு அமல்படுத்திருக்கிறது.

தொழில்துறை

இதுகுறித்து மத்திய தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பும், பின்பும் (1930 – 1950) முந்தைய தொழிலாளர் சட்டங்கள் இயற்றப்பட்டன. அந்தச் சமயத்தில் நமது பொருளாதாரத்திலும் உலக அளவிலான பணிச்சூழலிலும் பல வேறுபாடுகள் இருந்தன. அதன்பிறகு காலத்துக்கேற்ப பல நாடுகள் தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தன. அதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் சீர்திருத்தங்கள் பேர்கொள்ளப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறது.

‘தொழிலார்களின் உரிமை பாதுகாக்கப்படும் – மோடி!’

இதுகுறித்து பிரதமர் மோடி, “இது சுதந்திரத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மிகவும் விரிவான மற்றும் முற்போக்கான தொழிலாளர் சார்ந்த சீர்திருத்தங்களில் ஒன்றாகும். நமது தொழிலாளர்களுக்கு மகத்தான அதிகாரத்தை அளிக்கிறது. எளிமையான வணிகம், சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச, சரியான நேரத்தில் ஊதியப் பட்டுவாடா, பாதுகாப்பான பணியிட சூழல், லாபகரமான வாய்ப்புகளுக்கான வலுவான அடித்தளமாகச் செயல்படும்.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்து பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும். வேலைவாய்ப்பை அதிகரித்து, உற்பத்தித்திறனை மேம்படுத்தி மேம்பட்ட இந்தியாவை நோக்கிய நமது பயணத்தை விரைவுபடுத்தும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

பீகார் பிரச்சாரத்தில் மோடி!

இதன் பின்னணி குறித்து பேசும் விவரப்புள்ளிகள், “2020-ல் இந்தச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சித்தனர். அந்த நேரத்தில்தான் மூன்று வேளாண்மை சட்டங்கள் இயற்றப்பட்டன. அதை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் நாட்டில் கொந்தளிப்பான சூழல் நிலவியதால் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன.

பிறகு புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் குதித்தனர். ஏற்கெனவே வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற்றிருக்கும் சூழலில் இந்தப் புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தி அதையும் திரும்பப்பெறும் சூழல் ஏற்பட்டால் பெரும் பின்னடைவு ஏற்படும் என அரசு கருதியதால் சட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்தசூழலில்தான் தற்போது அவை அமலுக்கு வந்திருக்கிறது.

‘இரட்டிப்பு ஊதியம்.. அனைவருக்கும் பி.எப்..’

புதிய தொகுப்பு சட்டத்தில், ‘அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி நியமன கடிதங்கள்; நிரந்தர தொழிலாளர்களுக்கு நிகராக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் விடுமுறை, மருத்துவ, சமூக பாதுகாப்பு; 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் இலவச மருத்துவ பரிசோதனை; ஆன்லைன் இயங்குதள தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வருங்கால வைப்பு நிதி, காப்பீடு, சலுகைகள்; ஓராண்டு பணியாற்றியிருந்தாலே கிராஜுவிட்டி; சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் தொழிலாளர்கள் கூடுதல் நேரம் பணியாற்றினால் இரட்டிப்பு ஊதியம்; ஐ.டி. துறையில் பணியாற்றுபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதிக்குள் ஊதியம்; பெண்கள் ஒப்புதல் இருந்தால் அவர்களை இரவு பணிகளிலும் பணியமர்த்தலாம்; ஆதார் இணைப்புடன் கூடிய ஒற்றைக்கணக்கு எண்’ உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

கிக் தொழிலாளர்கள்
கிக் தொழிலாளர்கள்

அதேநேரத்தில் ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்ச தொழிலாளர்கள் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டால்தான் வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ மருத்துவ சலுகை, பணிக்கொடை வழங்கப்படும் போன்ற நிபந்தனை தளர்த்தப்படவில்லை. பணியாளர்களை நீக்கவும், ஆட்குறைப்பு செய்யவும், நிறுவனத்தை மூடுவதற்கு அரசின் முன் அனுமதியை பெறுவதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி குறைந்தபட்சம் 100 ஊழியர்கள் இருந்தாலே அரசின் அனுமதி பெற வேண்டும் என்பது 300 ஊழியர்கள் என மாற்றப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தில் 50% மேலான ஊழியர்கள் ஒட்டுமொத்தமாகத் தற்செயல் விடுப்பு எடுத்தால் அது வேலை நிறுத்தமாகக் கருதப்படும். ஏற்கெனவே இருந்த விதிகளின் கீழ் இது வேலை நிறுத்தப் போராட்டமாகக் கருதப்படவில்லை என்பதால் இது  தொழில்சங்கங்களில் ஆதிக்கத்தை குறைப்பதாகும். கூடுதல் பணிநேரத்துக்கு இரட்டிப்பு ஊதியம் என்பது 8 மணிநேர வேலை நேரத்தை மறைமுகமாக அதிகரிக்கும் எனத் தொழிற்சங்கங்கள்ள் அஞ்சுகின்றன” என்றனர்.

‘பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக..’

இதுகுறித்து நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜி.செல்வா, “இந்தியாவில் இருக்கும் அனைத்து தொழிற்சங்கங்களும், பிரதான எதிர்க்கட்சிகளும் இந்தச் சட்டங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் பீகார் தேர்தல் முடியும்வரை அமல்படுத்தாமல் இருந்தார்கள். தற்போது சட்டவிரோதமாக அமல்படுத்திருக்கிறார்கள். இனி நிரந்தர பணியாளர் என்கிற விஷயமே இருக்காது. இந்தியாவில் சிறு, குறு நிறுவனங்கள்தான் அதிகம். அங்குக் குறைந்த பணியாளர்கள்தான் இருப்பார்கள்.

ஜி.செல்வா

அப்படியிருக்கும் சூழலில் 300 பேர் இருக்கும் தனியார் நிறுவன தொழிலார்களுக்குத்தான் பணி பாதுகாப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கெனவே இருக்கும் சட்டங்களில் 10% ஊழியர்களுக்குத்தான் பணி பாதுகாப்பு இருந்தது. அதை அனைவருக்கும் வழங்க வேண்டும் என நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் இவர்கள் ஒட்டுமொத்தமாக அனைவருக்குமான உரிமையைப் பறிக்கிறார்கள். மொத்தத்தில் இந்திய உழைக்கும் மக்களின் உழைப்பு வளங்களைப் பெரு முதலாளிகள் சூறையாடுவதற்கு வழிவகை செய்திருக்கிறார்கள்” எனக் கொதித்தார்.

தமிழக பாஜகவின் துணைத் தலைவர்  நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இதுகுறித்து தமிழக பா.ஜ.க-வின் தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் விளக்கம் கேட்டோம், “1,436 தொழிலாளர் சட்ட விதிகளை 351 ஆகக் குறைத்து எளிமைப்படுத்திருக்கிறோம். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பனி பாதுகாப்பு கிடைக்கிறது. குறிப்பாகப் பெண்கள், இளைஞர்களின் வாழ்க்கை மேம்படும். இந்தியாவில் 6 மாதங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது. எனவே பீகார் தேர்தலுக்கு முன்பு கொண்டுவந்திருந்தால் பா.ஜ.க-வுக்கு தோல்வி ஏற்பட்டிருக்கும் எனச் சொல்வதும், தொழிலார்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்று சொல்வதும் எதிர்க்கட்சிகளின் மலிவான அரசியலை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது” என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *