Sorting by

×

மகாராஷ்டிரா: இந்தி திணிப்பு வாபஸ்; ரத்து செய்யப்பட்ட தாக்கரே சகோதரர்கள் பேரணி.. பின்னணி என்ன?

மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5-வது வகுப்பு வரை மூன்றாவது மொழியாக இந்தி கற்றுக்கொடுக்கப்படும் என்றும், அது இந்த ஆண்டே நடைமுறைக்கு வரும் என்றும் அரசாணை பிறப்பித்து இருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இதையடுத்து மூன்றாவது மொழியாக இந்தி அல்லது மாணவர்கள் விரும்பும் மொழியை கற்றுக்கொள்ளலாம் என்று அரசாணையில் திருத்தம் செய்தது. ஆனாலும் இந்தியைத்தான் பிரதானமாக கற்றுக்கொடுக்க அரசு திட்டமிட்டு இருந்தது.

மாநில அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் வரும் 5-ம் தேதி மிகப்பெரிய அளவில் பேரணி நடத்த அழைப்பு விடுத்திருந்தன.

தாக்கரே சகோதரர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகார போட்டியால் பிரிந்தனர். ராஜ்தாக்கரே 2005-ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து வெளியேறி சொந்தமாக கட்சி ஆரம்பித்தார். அதன் பிறகு தாக்கரே சகோதரர்களுக்குள் எந்த வித அரசியல் உறவும் இல்லாமல் இருந்தது.

உத்தவ் தாக்கரே

முதல் முறையாக இந்தி திணிப்புக்கு எதிராக இருவரும் இணைய திட்டமிட்டு இருந்தனர். வரும் அக்டோபர் மாதம் மாநகராட்சி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தாக்கரே சகோதரர்கள் ஒன்று சேருவதை பார்த்து பா.ஜ.க, மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிகள் அதிர்ச்சியடைந்தன.

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு

இதையடுத்து நேற்று திடீரென பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கற்றுக்கொடுக்கும் திட்டத்தை மாநில அரசு திரும்ப பெற்றுக்கொண்டது. அதாவது இனி பள்ளிகளில் 1 முதல் 5-வது வகுப்பு வரை மூன்றாவது மொழி கற்றுக்கொடுக்கப்படாது.

ஆங்கிலம் மற்றும் மராத்தி மட்டும் கற்றுக்கொடுக்கப்படும். மகாராஷ்டிரா அமைச்சரவை கூடி இது தொடர்பாக முடிவு செய்துள்ளது.

மேலும் மும்மொழி கொள்கையை அறிமுகப்படுத்த தேவையான பரிந்துரைகளை கொடுக்க கல்வியாளர் நரேந்திர ஜாதவ் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்படும் என்றும், அரசின் கொள்கை மராத்தியையும், மராத்தி மாணவர்களையும் மையமாக கொண்டதாக இருக்கும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே மீது பட்னாவிஸ் குற்றச்சாட்டு

மேலும் உத்தவ் தாக்கரே ஆட்சியில் இருந்தபோது தேசிய பள்ளிக்கொள்கையை அமல்படுத்த அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரைகளைத்தான் அரசு அமல்படுத்தியது என்றும், ஆட்சி மாறியவுடன் அவர்களின் கொள்கையும் மாறிவிட்டது என்றும் பட்னாவிஸ் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

உத்தவ் தாக்கரே அரசு தேசிய கல்விக்கொள்கைக்கு ஒப்புதல் கொடுத்ததா என்று உத்தவ் தாக்கரேயிடம் ராஜ் தாக்கரே கட்டாயம் கேட்கவேண்டும் என்றும் பட்னாவிஸ் தெரிவித்தார்.

இந்தி திணிப்பை கைவிட்டதன் மூலம் மகாராஷ்டிரா அரசு தாக்கரே சகோதரர்கள் ஒன்று சேருவதை தடுத்து நிறுத்தி இருப்பதாகவே கருதப்படுகிறது.

தாக்கரே சகோதரர்கள் ஒன்று சேர்ந்து 5-ம் தேதி பேரணி நடத்தினால் அது எதிர்காலத்தில் அவர்களிடையே தேர்தல் கூட்டணிக்கு வழிவகுத்திருக்கும். இது வரும் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.கவிற்கு சாதகமாக அமையாது என்று கருதியே மாநில அரசு இம்முடிவை எடுத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜ் தாக்கரே

`இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்’ – ராஜ் தாக்கரே

அரசு இந்தி திணிப்பு திட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டதை தொடர்ந்து வரும் 5-ம் தேதி நடக்க இருந்த பேரணியை தாக்கரே சகோதரர்கள் திரும்ப பெற்றுக்கொண்டனர்.

ராஜ் தாக்கரே இது தொடர்பாக அளித்த பேட்டியில்,” மராத்தி மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்தி திணிப்பை அரசு திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. பேரணி நடந்திருந்தால் அது மிகப்பெரியதாக இருந்திருக்கும். இந்தியைத் திணிப்பதில் அரசாங்கம் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறது, இந்த அழுத்தம் எங்கிருந்து வருகிறது என்பது இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது. அரசாங்கம் மீண்டும் ஒரு புதிய குழுவை நியமித்துள்ளது. இதை நான் தெளிவாகச் சொல்கிறேன். இந்தக் குழுவின் அறிக்கை வந்தாலும் வராவிட்டாலும், இதுபோன்ற விஷயங்களை இனி பொறுத்துக்கொள்ளப்படாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிப் பேரணி – உத்தவ் தாக்கரே அறிவிப்பு:

இது குறித்து உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில்,”இது மராத்தி மக்களை பிரித்து, மராத்தி பேசாதவர்களை பாஜக பக்கம் கொண்டுவரும் முயற்சியாகும். இப்போது மராத்தி மக்கள் ஒன்று சேருவதைத் தடுக்க இரண்டு அரசாணைகளை அவர்கள் கைவிட்டனர். முதலில், மக்கள் மீது விஷத்தை கக்க முயன்று தோல்வியடைந்தனர், எனவே அவர்கள் இப்போது ஒற்றுமையைத் தடுக்க முயற்சிக்கின்றனர்.

உத்தவ் தாக்கரே

மோர்ச்சா கைவிடப்பட்டது, ஆனால் இப்போது நாம் ஒரு வெற்றிப் பேரணியை நடத்துவோம். தேசிய கல்விக் கொள்கை வந்த பிறகு, நாங்கள் ஒரு குழுவை நியமித்தோம். ஆனால் அந்த ஆய்வுக் குழுவின் ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை. ஆனால் பின்னர் எங்கள் அரசு வீழ்ந்தது. அதனால்தான் பா.ஜ.க-வால் பொய்கள் பரப்பப்படுகின்றன. மராத்தி மக்கள் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக இந்தி திணிப்பை திரும்ப பெற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் இப்போது மராத்தி மக்களின் ஒற்றுமை தொடர வேண்டும்”என்றார்.

சிவசேனா(உத்தவ்) எம்.பி சஞ்சய் ராவுத் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ”இது மராத்தியர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. தாக்கரே சகோதரர்கள் ஒன்று சேர்ந்துவிடுவார் என்று பயந்து அரசு இந்தி திணிப்பை கைவிட்டுள்ளது” என்று தெரிவித்தார். வரும் 5-ம் தேதி நடக்க இருக்கும் வெற்றிப் பேரணியில் ராஜ் தாக்கரே கட்சியினர் கலந்து கொள்வது குறித்து அக்கட்சி இன்னும் எதையும் தெரிவிக்கவில்லை.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *