முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திமுகவினர் செய்து வரும் பிரமாண்ட ஏற்பாடுகளால் மதுரை மாநகரம் அமளிதுமளியாகி வரும் நிலையில் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது.

நீண்ட காலத்துக்குப்பின் ஜூன் 1 ஆம் தேதி திமுகவின் மாநில பொதுக்குழு மதுரையில் நடைபெறுகிறது. அதற்காக உத்தங்குடி அருகே பிரமாண்ட பொதுக்குழு அரங்கம், விழாப்பந்தல், உணவுக்கூடம் என ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்து வருகிறார். அமைச்சர் பி.மூர்த்தி. ஒருபக்கம் கட்சியினருடன் மாவட்ட நிர்வாகமும் கடந்த ஒரு வாரமாக களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றனர்.
பொதுக்குழுவில் கலந்துகொள்ளும் மு.க.ஸ்டாலின் இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்.
இன்று விமானம் மூலம் மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25 கிலோ மீட்டர் தூரம் ‘ரோடு ஷோ’ நடத்தி பொதுமக்களை சந்திக்கிறார். இதற்காக அவர் வருகின்ற பகுதிகளை மாவட்ட நிர்வாகத்தினர் பளிச்சென்று மாற்றி வருகிறார்கள்.

மதியம் தனியார் ஹோட்டலில் ஓய்வெடுத்துவிட்டு மாலை 4 மணிக்கு அங்கிருந்து கார் மூலம் பெருங்குடி, அவனியாபுரம், வெள்ளக்கல், வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், சுந்தரராஜபுரம் மார்க்கெட், டி.வி.எஸ்.நகர் சுரங்க பாதை வழியாக பழங்காநத்தம், வ.உ.சி.பாலம், எல்லீஸ்நகர் 70 அடி ரோடு, பை-பாஸ் ரோடு, பொன்மேனி, காளவாசல், குருதியேட்டர், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், ஜல்லிக்கட்டு ரவுண்டனா வழியாக சென்று மறைந்த மேயர் முத்து சிலையை முதல்வர் திறந்து வைக்கிறார்.
செல்லும் வழியில் ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவிலில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையை முதல்வர் திறந்து வைக்கிறார். நாளை 1-ந் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்
இந்த நிலையில் மதுரையில் அனைத்து சாலைகளும் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ள நிலையில் முதல்வர் வருகைக்காக அவர் வருகின்ற பாதையிலும், மு.க.அழகிரி வீட்டுக்கு செல்வார் என்ற உறுதிப்படுத்தாத தகவலால் அழகிரி வீடு அமைந்துள்ள டி.வி.எஸ் நகர்ப் பகுதியிலும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டது.

ரோடு ஷோ வருகின்ற வழியில் கழிவு நீர் கலந்து அசுத்தமாகிவிட்ட பந்தல்குடி கால்வாயின் ஒட்டி முதலமைச்சர் வருவதால் முதலமைச்சர் பார்வையில் கழிவுநீர் கால்வாய் பார்வையில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக வண்ணத் துணிகளை வைத்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாயை சுற்றி அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பந்தல்குடி கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் பல ஆண்டுகளாக கடும் நோய்க்கு ஆளாகி வரும் பொதுமக்கள் முதலமைச்சரிடம் தங்களது பிரச்சனை குறித்து கூறலாம் என நினைத்துக் கொண்டிருந்தபோது பந்தல்குடி கால்வாய் பகுதியில் முழுவதுமாக வண்ண வண்ண திரைச் சீலைகளால் அடைக்கப்பட்டத அதிர்ச்சி அடைந்தார்கள்.
கோரிப்பாளையம் பகுதியிலிருந்து நரிமேடு பகுதி வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் கால்வாய் ஓரம் திரைச்சீலைகளால் மூடப்பட்டுள்ளன. கால்வாயை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களோடு சேர்த்து திரைசீலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்களை கூட எடுக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிபட்டனர்.
இது சர்ச்சையானதைத் தொடர்ந்து மூடப்பட்ட வண்ணத்திரைகளை அப்புறப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார்.
இப்படி முதலமைச்சரின் வருகையால் அமளி துமுளியால் மதுரை மாநகரமே பரபரப்பாக காணப்படுகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


