Sorting by

×

மூட்டை முடிச்சுகளுடன்.. தில்லி மதராசி முகாம் மக்கள் கண்ணீர்!

கடந்த 60 ஆண்டுகாலமாக இதுதான் எங்கள் வீடு, ஆனால், திடீரென எப்படி மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வெளியேறுவது என்று 67 வயது பெண் ஒருவர் கூறி கண்ணீர் விடுகிறார்.

தனது சிறு வயதில், குடும்பத்துடன் இந்த மதராஸி முகாமுக்கு வந்த இவர், தனது முதுமைக் காலத்தை வேறு எங்கோ சென்று கழிக்க வேண்டியதை நினைத்து பெரும் துயருற்றுள்ளார்.

தில்லியின் பழமையான அங்கீகரிக்கப்பட்ட பஸ்திகளில் ஒன்றான ஜங்புராவில் உள்ள மதராஸி கேம்ப், தில்லி நகா்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத்தின் டியுஎஸ்ஐபியின் அறிவிக்கை செய்யப்பட்ட குடிசைப் பட்டியலில் ஒன்றாகும். மேலும் என்சிடி தில்லி சிறப்பு ஏற்பாடுகள் 2011இன்படி சட்டப் பாதுகாப்பிற்கு தகுதியானதாகும்.

பெரும்பாலும் தமிழ்நாட்டிலிருந்த வந்தவர்கள் தங்கியிருக்கும் மதராஸி முகாமில் உள்ள கட்டங்களை ஜூன் 1ஆம் தேதி இடித்துத் தள்ளுமாறு, தில்லியின் பொதுப் பணித்துறைக்கு தில்லி உயர் நீதிமன்றம் மே 9ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.

“பராபுல்லா வடிகால் அடைப்பை முழுமையாக சரி செய்ய மதராசி முகாம் அகற்றம் மிகவும் அவசியம். அந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட பொது நிலம் என்பதால், மறுவாழ்வு உரிமையைத் தாண்டி குடியிருப்பாளர்கள் யாரும் எந்த உரிமையையும் கோர முடியாது,” என்று நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்தப் பகுதியில் வசிக்கும் 370 குடும்பங்களில், 189 குடும்பங்கள் மட்டுமே தில்லி அரசின் சேரி மற்றும் ஜுகி ஜோப்ரி மறுவாழ்வு மற்றும் இடமாற்றக் கொள்கை, 2015 இன் கீழ் மறுவாழ்வுக்குத் தகுதியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த உத்தரவால் குடிசைப் பகுதியில் பல பத்தாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து வருபவர்களுக்கு தில்லி அரசு மாற்றிடம் ஒதுக்கி வருகிறது. ஆனால், மற்றவர்கள் வாடகைக்குத்தான் மாற்று இடம்தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

செல்லுபடியாகும் ஆவணங்களை வைத்திருந்தாலும், மூன்றில் ஒரு பங்கு வீடுகளுக்கு மறுவாழ்வு மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தகுதியுள்ளவா்கள் என்று கருதப்படுபவா்கள் அனைத்து நெறிமுறைகளையும் தெளிவாக மீறும் வகையில் 50 கிமீ தொலைவில் உள்ள நரேலாவிற்கு வெளியேற்றப்படுகிறாா்கள்.

இந்த தீர்ப்பு வந்ததிலிருந்தே, எப்போதும் சந்தைப்போல சப்தமாக இருக்கும் மதராஸி முகாமில் வாடிய முகத்துடன் எதிர்காலம் பற்றிய கேள்விகளுடன் மௌனமாக அமர்ந்திருக்கும் மக்களைத்தான் காண முடிகிறது.

மதராஸி கேம்பில் வசிக்கும் பெரும்பாலானோர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். இவர்களில் பலர் கூலி வேலைக்கும், வீட்டு வேலைக்கும் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த முகாமுக்கு அருகே இருக்கும் மிகப்பெரிய பகுதிகளில் உள்ள வீடுகளில், இங்குள்ள பெரும்பாலான பெண்கள் வீட்டு வேலை செய்து வருகிறார்கள். எனவே, இங்கிருந்து தங்களால் வேறு எங்கும் செல்ல முடியாது. ஆனால், இங்கே வீடு வாடகைக்கு என்றால் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும். அதற்குக் குறைவாக வீடு கிடைக்காது. எங்களுக்கு வீடு வழங்கப்பட்டாலும் கூட அது இங்கிருந்து 40 கி.மீ. தொலைவில் தில்லியின் நரெலாவில் உள்ளது.

இங்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் பலரும், தாங்கள் எப்படி வேறு ஒரு இடத்துக்குச் சென்று, அங்கிருந்து வியாபாரம் செய்யப்போகிறோம், எங்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைப்பார்களா? அதுவரை வாழ்வாதாரம் என்னவாகும் என்ற கவலையோடு இருக்கிறார்கள்.

இது மட்டுமல்ல, இங்கிருக்கும் பள்ளிகளில் படித்து வரும் பிள்ளைகள், 40 கிலோ மீட்டர் தொலைவு நாள்தோறும் வந்து செல்ல முடியுமா, பள்ளியை மாற்றுவது என்றால் அவ்வளவு எளிதா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

நீதிமன்ற உத்தரவுப்படி, மே 20 முதல் மே 31ஆம் தேதிக்குள் இங்கிருப்பவர்கள் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு மாற்று இடத்துக்குச் செல்ல வேண்டியதுதான் ஒரே வழியாக இருக்கிறது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *