Sorting by

×

மோடி, நட்டாவை எல்லாம் கேள்விப்பட்டதே இல்லை! அவசர நிலைக் காலம் பற்றி லாலு

மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவையில் பேசுகையில், நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25ஆம் தேதி ஒரு கருப்பு நாள் என்றார், இதனை பிரதமர் நரேந்திர மோடி வழிமொழிந்தார். இருவருமே, அரசு மற்றும் அரசமைப்பை நிலைநிறுத்துவதில் ஏற்பட்டிருக்கும் தோல்விகளிலிருந்து மக்களை திசைதிருப்ப முயன்றுள்ளனர் என்கிறார் லாலு பிரசாத் யாதவ்.

அவசரநிலை குறித்து மத்திய அரசு தொடர்ச்சியாக பேசிவரும் நிலையில், பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் தனது எக்ஸ் பக்கத்தில் விரிவான விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், அதிர்ச்சி தரும் வகையில், மோடி மற்றும் அவரது பாஜக-ஆர்எஸ்எஸ் நண்பர்கள், வரலாறு பற்றி தெரியாத எதிர்கால சந்ததியினருக்கு, அவசரநிலைப் பிரகடனம் பற்றி, அவர்களது இருப்பே சந்தேகத்துக்குரியதாக இருக்கும் நிலையில், “விளக்கம்” கொடுக்கிறார்கள்.

ஜெயப்பிரகாஷ் காந்தி தலைமையில் – மகாத்மா காந்திக்குப் பிறகு மிகப்பெரிய மக்கள் தலைவராக இருந்தவர் – பிரதமராக இருந்த இந்திரா காந்தி கொண்டுவந்த மிகப்பெரிய அவசரநிலை பிரகடனத்துக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல அமைக்கப்பட்ட குழுவில் நான் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன், மிசா சட்டத்தின் கீழ் சுமார் 15 மாதங்கள் நான் சிறையில் அடைக்கப்பட்டேன், ஆனால், இப்போது அவசரநிலைப் பிரகடனம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் பாஜக அமைச்சர்கள் யாரையுமே எனக்கோ எங்களது சகாக்களுக்கோ தெரியவே தெரியாது, சுதந்திரம் பற்றி தற்போது நமக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் மோடி, நட்டா மற்றும் சில அமைச்சரவை சகாக்களை எல்லாம் கேள்விப்பட்டதே இல்லை.

அப்போதுதான், பிரதமர், அவசரநிலையை பிரகடனப்படுத்த அரசமைப்பு விதிகளை நாடினார். அப்போது எங்களில் பலரை அவர் சிறையில் அடைத்தார், ஆனால் அவர் எங்களை துன்புறுத்தவில்லை. இந்திரா காந்தியோ அல்லது அவர்களது அமைச்சர்களோ எங்களை தேசத் துரோகிகள் என்றோ தேச விரோதிகள் என்றோ அழைக்கவில்லை. நமது அரசியலமைப்பை உருவாக்கிய பாபாசாகேப் பீமாராவ் அம்பேத்கரின் நினைவுகளை அழிக்க, காழ்ப்புணர்ச்சியாளர்களுக்கு அவர் எப்போதுமே உதவவில்லை, மதத்தின் மற்றும் சாதியின் பெயரால், தலித் மக்களையோ சிறுபான்மை மக்களையோ அடித்துக் கொலை செய்யும் வன்முறைக் கும்பல்களுக்கு அவர் எப்போதும் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை. மாட்டிறைச்சி வைத்திருப்பதாகக் கூறி கால்நடை வணிகர்கள் துன்புறுத்தப்பட்டுக் கொலை செய்யப்படவில்லை.

1975ஆம் ஆண்டு அவசரநிலை பிரகடனத்தின்போது மகாத்மா காந்தியைக் கொலை செய்தவர்கள் கொண்டாடப்படவில்லை. இளைஞர்கள், தங்களது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமையை பெற்றிருந்தனர். லவ் ஜிகாத் என்ற கற்பனைப் பெயரில், காதலிப்பவர்கள் துன்புறுத்தப்படவில்லை.

2024 தேர்தல் பிரசாரத்தின்போது, வோட் ஜிகாத் குறித்து மோடி பேசியிருந்தார், அது மீன், இறைச்சி சாப்பிடுவது தொடர்பான மூட நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருந்தது என்று லாலு தெரிவித்துள்ளார்.

விநாயகருக்கு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் தந்தங்கள் கிடைத்ததாக இந்திரா காந்தி எப்போதும் சொல்லவில்லை. இந்தியாவை அணுசக்தி பெற்ற நாடாக மாற்றினார், அவர் பிரதமராக இருந்த போது, இந்திய ராணுவம் பாகிஸ்தானை வெற்றிக்கண்டது, 1971ஆம் ஆண்டு வங்கதேசம் உருவாகக் காரணமாக இருந்தது, ஆனால், தற்போதைய பிரதமரோ, மிகச் சாதாரண சாதனைகளைக் கூட மிகைப்படுத்திக் காட்டுகிறார்,

2024-ல் – அரியலூர் ரயில் விபத்தும் சாஸ்திரியின் ராஜிநாமாவும்… கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ்!

18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளில், நாட்டின் கல்வி மையங்களின் நிலை, வினாத்தாள் கசிவு, தலைவிரித்தாடும் வேலையின்மை, சாதிவாரிக் கணக்கெடுப்பு, சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு, கணிக்க முடியாத பணவீக்கம், அரசமைப்பு மீதான அச்சுறுத்தல், பிகாருக்கு தனி அந்தஸ்து, மணிப்பூரில் தொடரும் வன்முறை, பாஜகவுக்கு எதிரான கட்சிகள் மீது புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவது, ஊடகங்களைக் கைப்பற்றுதல், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்களை சிறையில் அடைப்பது போன்றவற்றைப் பற்றி விவாதித்திருக்க வேண்டும்.

நாட்டில் தற்போது நிலவும் பிரச்னைகளை மக்களவையில் விவாதிப்பதே, அதன் செயல்பாடு என்ற நிலையை மாற்றி, அவசரநிலை பிரகடனம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசி மக்களை திசைதிருப்பவே பாஜக முயல்கிறது, இந்தியா கூட்டணியின் கீழ் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுமே, சங் பரிவாரின் ஏதேச்சதிகார ஆட்சியை எதிர்க்கும் திறன் பெற்றுள்ளன. அவற்றை இந்தியா கூட்டணி பயன்படுத்தும்.

தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் துணையுடன்தான் பிரதமர் மோடி ஆட்சியில் இருக்கிறார், ஆனால், எதுவுமே மாறாதது போல பிரதமர் நடிக்கிறார், அது முட்டாள்களின் சொர்க்கம்.

ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், சுப்ரியா சுலே மற்றும் ஏராளமான இளைய எம்.பி.க்கள் இந்தியா கூட்டணியிலிருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். இந்தியா கூட்டணியின் பக்கம்தான் மக்கள் இருக்கிறார்கள், மக்களின் நம்பிக்கையை பிரதமர் மோடி இழந்துவிட்டதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களவைக்கு அனுப்பிய இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், மக்களுக்காகக் குரல்கொடுத்துக்கொண்டுதானிருப்பார்கள்.

மோடி, பிர்லா, நட்டா போன்றவர்கள், தவறான தகவல்களைப் பரப்பவும், அவசரநிலை பிரகடனத்துக்கு எதிராக போராடியவர்களைப் போல தங்களை பெரிய கதாநாயகனாகக் காட்டிக்கொள்ளும் திட்டத்தைக் கொண்டுள்ளனர். அவசரநிலை என்பது நமது ஜனநாயகத்தின் மீது படிந்த கறைதான் என்பதில் சந்தேகமில்லை, அதனை எதிர்த்துப் பல தலைவர்கள் போராடியிருக்கிறார்கள். அவர்களில் சந்திரசேகர், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், முலாயம் சிங் யாதவ், ஷரத் யாதவ், கர்பூரி தாகூர், ராமானந்த் திவாரி, ராஜ் நாராயண் மற்றும் பிகாரைச் சேர்ந்த எனது நண்பர்கள் நிதீஷ் குமார் (பிகார் முதல்வர்), ராம் விலாஸ் பாஸ்வான், ஷிவானந்த் திவாரி, அப்துல் பாரி சித்திக் மற்றும் எண்ணற்ற தலைவர்களும் அங்கம் வகித்தனர்.

ஜேபி நட்டா, சங் பரிவார் தலைவர்கள் இரட்டைப் பதவிகளை வகிப்பதை விரும்புவதேயில்லை, அவர்களை எல்லாம் ஆர்எஸ்எஸ்-ல் இருந்து விலகி ஜனதா கட்சியில் இணைய வேண்டும் என்று கேட்கிறார், சங் பரிவார் தலைவர்கள் நட்டா சொல்வதைக் கேட்கவில்லை, அவர்கள் சமுதாயத்தில் அங்கீகாரம் பெற அமைப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தொடர்ந்து வகுப்புவாத பிரிவினைகளை தொடர்ந்துகொண்டிருக்கின்றனர்.

ஆர்எஸ்எஸ் தலைவர் பாலாசாகேப் தியோராஸ், மிசாவில் கைது செய்யப்பட்ட பிறகு, இந்திரா காந்திக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியதை ஷிவானந்த் திவாரி நினைவுகூருகிறார். மற்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்களையும் கூட அவர் கேட்டுக்கொண்டார்.

ஆமாம், அனைவருமே விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுப்போம், அரசமைப்பைத் துண்டாட யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் எதிர்க்கட்சிகளைத் துஷ்பிரயோகம் செய்யவிட மாட்டோம் என்றும் உறுதி ஏற்போம்., 1975ஆம் ஆண்டு ஒரு போதும் திரும்பக்கூடாது, ஆனால், 2024ஆம் ஆண்டு மத்தியில் யார் அதிகாரத்தில் இருந்தார்கள், அவர்கள் எதிர்க்கட்சியினருக்கு மரியாதை அளிக்க மறுத்ததையும் யாரும் ஒருபோதும் மறக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *