Sorting by

×

`வழிக்கு வராத எடப்பாடி; பலிக்காத அமித் ஷா ஜாலம்; அமையாத மெகா கூட்டணி!’ – தடுமாறும் NDA?

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி உருவாகி 200 நாட்களை கடந்துவிட்டது. ஆனால், இன்னமும் அதிமுகவும் பாஜகவும் மட்டுமே அந்தக் கூட்டணியின் பெரிய ஆட்டக்காரர்கள்.

எடப்பாடி அமைப்பதாக சொன்ன மெகா கூட்டணியும் அமையவில்லை. எந்த பிரமாண்ட கட்சியும் என்.டி.ஏவை தேடி வரவில்லை. மாறாக கூட்டணியிலிருந்த பாமக, தேமுதிக, அமமுக எல்லாம் ஆளுக்கு ஒரு பக்கம் பிய்த்துக் கொண்டு சென்று கபடி ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

செங்கோட்டையன் தவெகவில் செட்டில் ஆகிவிட, பன்னீர்செல்வமும் தனிக்கட்சி தூபம் போட்டுக் கொண்டிருக்கிறார். `தேர்தல் சாணக்கியர்’ என பாஜகவினரால் அழைக்கப்படும் அமித் ஷாவின் சூட்சங்கள் எதுவும் இப்போது வரை தமிழகத்தில் எடுபடவில்லை. அவர் செய்ய நினைக்கும் ‘Social Engineering’ உம் இன்னும் கைகூடி வரவில்லை. மொத்தத்தில் தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வெற்றிக்கான வழி தெரியாமல் தடுமாறி நிற்கிறது.

‘ஆபரேஷன் கமலம்’

அமித் ஷாவின் முக்கியமான ப்ராஜெக்ட்களில் ஒன்று. இந்தி பேசும் மாநிலங்களில் கோலோச்சும் பாஜகவால் தென்னிந்தியாவுக்குள் நுழைய முடியாமல் இருந்தது. அதை உடைக்க நினைத்த அமித் ஷாவின் லட்சியம்தான் ‘ஆபரேஷன் கமலம்’.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனாவோடு சேர்ந்து தாமரையை காப்பாற்றிவிட்டனர். கர்நாடகாவிலும் பாஜகவுக்கு இறுக்கமான பிடி இருக்கிறது. தெலங்கானாவிலும் வளர்ந்து வருகிறார்கள். புதுச்சேரியிலும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

அமித்ஷா
அமித்ஷா

தமிழ்நாட்டிலும் கேரளாவிலும்தான் பாஜகவால் தடம்பதிக்க முடியவில்லை. அதிலும் கடந்த தேர்தலில் சுரேஷ் கோபி மூலம் கேரளத்திலும் காவி கொடியை பறக்கவிட்டு விட்டார்கள். 2014 க்குப் பிறகு மோடி – அமித் ஷா கூட்டணியில் அவர்களின் வசம் இன்னும் சிக்காமல் செல்வது தமிழகம் மட்டுமே.

ஒரு மாநிலத்தின் சமூகரீதியான தன்மைகளையும் ஏனைய கட்சிகளின் வாக்குவங்கிகளையும் மனதில் வைத்து அமித் ஷா போடும் கூட்டல் கழித்தல் கணக்குகள்தான் பாஜகவுக்கு பல மாநிலங்களில் வெற்றியை கொடுத்திருக்கிறது. அதற்கான சமீபத்திய உதாரணம் பீகார்.

காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகள் பெரிய கூட்டணியை அமைத்த போதிலும், ஏற்கனவே ஆட்சியிலிருந்த நிதிஷ் குமார்தான் அங்கே மீண்டும் வென்றிருக்கிறார். அதற்கு அமித் ஷா வகுத்த வியூகங்களும் முக்கிய காரணமாக இருந்தன. தலித்களின் அடையாளமாக உள்ள சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிக்கும் நிதிஷ் குமாருக்கும் ஆகாது.

மோடி - நிதிஷ் குமார்
மோடி – நிதிஷ் குமார்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏவுக்கு வெளியே நின்று ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும் சிராக் பஸ்வான் வேட்பாளர்களை நிறுத்தி சேதாரத்தை ஏற்படுத்தினார். அதுவே பாஜகவின் உள்ளடி வேலை என நிதிஷ் சந்தேகித்தார்.

இதோ இப்போது நடந்து முடிந்த தேர்தலில் சூழலை புரிந்துகொண்டு அந்த சிராக் பஸ்வானையும் கூட்டணிக்குள் உள்ளே இழுத்துப் போட்டுக் கொண்டது பாஜக. காங்கிரஸ் – ராஷ்திரிய ஜனதா தள கூட்டணியை முஸ்லீம் – யாதவர்களுக்கான கூட்டணியென அடையாளப்படுத்தி மற்ற சமூகத்தினரின் வாக்குகளையெல்லாம் ஒரே பக்கமாக ஒருங்கிணைத்தனர்.

அதேமாதிரி, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பாஜக எதிர்ப்பு மனநிலையில்தான் இருந்தார். 2019 தேர்தல் சமயத்தில் தேசியளவில் பாஜக, காங் அல்லாத மூன்றாவது கூட்டணியை உருவாக்குவதில் சந்திரபாபு நாயுடு முனைப்போடு இருந்தார். அப்படிப்பட்டவரை பவன் கல்யாண் மூலம் சரிகட்டி கூட்டணி அமைத்து வென்றனர்.

இந்த மாதிரியான எந்த விஷயமும் தமிழ்நாட்டில் நடக்கவில்லை. பெரும்பாலான மாநிலங்களில் பாஜக கட்டளையிடும் இடத்தில் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் அவர்கள் அதிகாரத்தோடு செயல்பட்டாலும் இன்னும் கட்டளையிட்டு சாதிக்கும் இடத்துக்கு முழுமையாக நகரவில்லை. காரணம், பாஜகவுக்கு இன்னமுமே மக்கள் மத்தியில் நம்பிக்கையளிக்கும் வகையில் இங்கே செல்வாக்கு கிடைக்கவில்லை.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

அதனால்தான் 2021 சட்டமன்றத் தேர்தலிலேயே டிடிவியை என்.டி.ஏவுக்குள் கொண்டு வர முயன்றும் எடப்பாடியின் எதிர்ப்பால் அமித் ஷா பின்வாங்கினார். அதேமாதிரிதான் தேமுதிக-வையும் அனுசரித்து கூட்டணிக்குள் இழுக்க முடியாமல் சொதப்பினர். இறுதியில், தேமுதிகவும் அமமுகவும் கூட்டணி சேர்ந்தனர்.

அமித் ஷாவின் Social Engineering வேலைக்காகமல் போனது. கடைசி நேரத்தில் கொடுக்கப்பட்ட வன்னியர் உள் ஒதுக்கீடும், அதிமுகவில் முக்குலத்தோர் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற டிடிவியின் பிரசாரமும் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு கணிசமான தொகுதிகளில் கையை கடித்தது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி – அமித் ஷா என இருவரின் கணிப்புகளும் முடிவுகளுமே தவறிப்போனது. அண்ணாமலையின் துடுக்கான விமர்சனங்களை காரணம் காட்டி எடப்பாடி கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

திமுகவுக்கு எதிராக பாஜகதான் பிரதான எதிரிக்கட்சி என பொறிந்து தள்ளிய அண்ணாமலையை அமித் ஷா நம்பினார். மெகா கூட்டணி அமைக்கிறேன் என தேமுதிகவை மட்டும் வைத்துக் கொண்டு களமாடினார் எடப்பாடி. பாமக பாஜக பக்கம் நின்றது. முடிவில், யார் அதிக தொகுதிகளில் இரண்டாமிடம் பிடித்தோம் என போட்டி போட்டுக் கொள்ள மட்டுமே அது உதவியது.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

‘கழகங்கள் இல்லா தமிழ்நாடு!’ என்ற பாஜகவின் கோஷம் வெற்றி பெறவே கழகங்களின் உதவி தேவை என்பதை பாஜக புரிந்துகொண்டது. விஜய்யை நம்பி காத்திருந்து ஏமாந்த எடப்பாடியும் டெல்லியை நோக்கி காரை திருப்பினார். சட்டமன்றத் தேர்தலுக்கு சரியாக ஓராண்டுக்கு முன்பே எடப்பாடியும் அமித் ஷாவும் கைகோத்தனர். அப்போதிருந்தே இந்தக் கூட்டணி எந்த இடத்திலும் டேக் ஆப் ஆகவில்லை.

கூட்டணியை அமித் ஷா உறுதி செய்துவிட்டு டெல்லி கிளம்புவதற்குள்ளேயே கூட்டணி ஆட்சி என்கிற திரியை கொளுத்தியது பாஜக. பற்றி எரிந்த அந்த நெருப்பை அமித் ஷாவும் ரசித்தார். சில பேட்டிகளில் அவருமே கூட்டணி ஆட்சிதான் என கமிட் செய்தார். ஆனால், எடப்பாடிக்கு இதில் உடன்பாடில்லை. அதிமுக தனிப்பெரும்பான்மையாக ஆட்சியமைக்கும் என தனது மேடைப் பேச்சுகளின் மூலம் அமித் ஷாவுக்கு மெசேஜ் சொன்னார்.

அந்தக் கூட்டணி ஆட்சி சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்தடுத்த பாம்புகள் படமெடுத்தன. பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் நயினார் நாகேந்திரன் மதிக்கவில்லை என ஓபிஎஸ் உறுமினார். நயினார் நாகேந்திரனும் கொஞ்சம் பதிலுக்கு பதில் பேசி ஓபிஎஸ்ஸை உஷ்ணப்படுத்தினார். விரக்தியானவர் ஒரே நாளில் இரண்டு முறை முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, ‘அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.’ என பொடி வைத்துப் பேசினார்.

இன்னொரு பக்கம் டிடிவியும் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை அனுசரித்து செல்ல தெரியவில்லை, என்.டி.ஏவிலிருந்து விலகுகிறேன் என வெடித்தார். இடையில் டெல்லியின் ஆசியுடன் செங்கோட்டையன் கலகம் செய்ய முயன்று இப்போது அப்படியே கூடாரம் மாறிவிட்டார்.

டிடிவி தினகரன்

ராஜ்யசபா சீட் கிடைக்காததால் எதுவாக இருந்தாலும் ஜனவரியில் பார்க்கலாம் என லாவகமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் பிரேமலதா. அப்பா, மகன் சண்டையிலேயே நேரம் கழிவதால் பாமகவும் என்.டி.ஏவை இப்போது வரை கண்டுகொள்ளவில்லை. ஜான் பாண்டியனும் டாக்டர் கிருஷ்ணசாமியுமே கூட இன்னமும் என்.டி.ஏவில் தங்களை கமிட் செய்துகொள்ளாமல் இருக்கின்றனர்.

கரூர் சம்பவத்துக்குப் பிறகு விஜய்க்கும் மிகத் தீவிரமாக தூண்டில் போட்டு பார்த்தனர் அதிமுகவும் பாஜகவும். தம் கட்டி விஜய்க்கு ஆதரவாக கம்பு சுற்றினார். விஜய் எதற்கும் வளைந்து கொடுத்ததாக தெரியவில்லை. பொதுக்குழுவில் ஆதரவு தெரித்தவர்களுக்கு நன்றி என சம்பிரதாயத்துக்கு கூட கூறாமல், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என என்.டி.ஏ கூட்டணியின் முகத்தில் அறைவதைப் போல தீர்மானம் போட்டார். ஆந்திராவில் பவன் கல்யாணை போல தமிழகத்தில் விஜய் உதவுவார் என்கிற அவர்களின் கனவு பலிக்காமல் போனது.

தவெகவை நம்பி வருபவர்களை அரவணைக்க தயாராக இருக்கிறோம், ஆட்சியில் பங்கு தருகிறோம் என விஜய் முழங்குகிறார். டிடிவி வெளிப்படையாக விஜய்யை ஆதரிக்கிறார். விஜய்யின் தரப்பும் டிடிவியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது.

தேமுதிகவும் பாமகவும் (அன்புமணி) மறந்தும் கூட விஜய்யை வஞ்சித்து பேசுவதில்லை. தங்களின் பேர வலிமையை ஏற்றிக் கொள்ள கிடைத்திருக்கும் கூடுதல் ஆப்சனாக விஜய்யை பார்க்கின்றனர். எம்.ஜி.ஆர் மாளிகையில் எண்ணியவை கிடைக்காவிடில் பனையூர் பக்கமாக வண்டியை திருப்ப தயாராக இருக்கின்றனர்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

இன்றைய தேதிக்கு அதிமுகவும் பாஜகவும் மட்டும்தான் என்.டி.ஏவுக்குள் உறுதி. பாமக இல்லாமல் வட மாவட்டங்களில் வன்னியர்களின் வாக்குகளையும் ஓ.பி.எஸ், டிடிவி, சசிகலா இல்லாமல் தென் மாவட்டங்களில் முக்குலத்தோரின் வாக்குகளையும் என்.டி.ஏவால் அத்தனை எளிதாக இழுக்க முடியாது.

எடப்பாடியின் பிடிவாதத்தால் ஓ.பி.எஸ், டிடிவியை என்.டி ஏவுக்குள் கொண்டு வர முடியாமல் பாஜக சங்கடப்பட்டு நிற்கிறது. செங்கோட்டையன் காட்டிய வழியில் மேலும் சில முன்னாள் அமைச்சர்கள் ஜகா வாங்கினால் என்ன செய்வது என்கிற புதிய தலைவழி வேறு எடப்பாடிக்கு.

இது எல்லாவற்றையும் கடந்து திமுக எதிர்ப்பு என்னும் கோஷம் மட்டும் தான் அதிமுக – பாஜக கூட்டணிக்கு இப்போதைக்கு உள்ளது. அதிலும் விஜய், அடித்து ஆடி பெரும் சேதாரத்தை உருவாக்குகிறார் என்பது என்.டி.ஏவுக்கு கூடுதல் மைனஸ்.

இன்னொரு பக்கம் 2019 இல் உருவாக்கிய அதே கூட்டணியை அப்படியே இப்போது வரை தக்கவைத்திருக்கிறது திமுக. அதிமுக அதிருப்தியாளர்களை அறிவாலயம் பக்கம் திருப்பும் அசைன்மெண்ட்டும் ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது.

மெகா கூட்டணி எதுவும் அமையாமல், இருக்கிற கூட்டணியும் டேக் ஆப் ஆகாமல், சமூகக் கணக்குகளும் கைக்கொடுக்காமல் இப்போதைக்கு முனை மழுங்கிய வாளோடுதான் களத்தில் நிற்கிறது என்.டி.ஏ. தேர்தலுக்கு முந்தைய ‘Perception War’ இல் மக்களுக்கு என்.டி.ஏ எந்தப் பெரிய நம்பிக்கையயையும் கொடுத்ததாக தெரியவில்லை என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

டெல்லியில் எடப்பாடி பழனிசாமி அமித்ஷா சந்திப்பு
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி அமித்ஷா சந்திப்பு

‘Many a Slip between the Cup and Lip’ என்பார்கள். தேநீர் கோப்பையை உதடுகளில் வைத்து முழுமையாக அருந்தி முடிக்கும் வரைக்கும் அது தவறி விழுவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருப்பதாக பொருள்.

அதன்படி பார்த்தால் அமித் ஷா தமிழக தேர்தலில் அருந்த நினைத்த அத்தனை தேநீர் கோப்பைகளும் ‘மிஸ்’ ஆகி தவறிவிழவே செய்திருக்கின்றன. இன்னும் 5 மாதங்கள் இருக்கிறது தேர்தலுக்கு. என்ன செய்யப்போகிறது என்.டி.ஏ… பொறுத்திருந்து பார்ப்போம்.!

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *