கனமழை காரணமாக குஜராத் மாநிலம் ராஜ்கோட் விமான நிலையத்தில் விமானப் பயணிகள் இறங்கும் மற்றும் வெளியேறும் இடத்தில் இருந்த மேற்கூரை கிழிந்து விழுந்துள்ளது.
புது தில்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தபோது, 2009ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டமைப்புதான் இடிந்துவிழுந்ததாக மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு நேற்று விளக்கம் அளித்திருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், 2023ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ராஜ்கோட் விமான நிலையத்திலும் மேற்கூரை கிழிந்து தொங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் சமூக வலைத்தளங்களில் விமரிசித்து வருகிறார்கள்.
வெளிப்பகுதியில் மிகப்பெரிய கட்டமைப்புகள் எதுவும் இல்லாமல், பெரிய பெரிய கம்பிகளுடன் ஒரு தண்ணீர் உள்புகாத கவர் மட்டுமே கூரையாக மாற்றப்பட்டுள்ளது. இது கனமழை, பலத்த காற்றின்போது, கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கிறது.
புது தில்லியில் கனமழை காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முதல் முனைய மேற்கூரை நேற்று அதிகாலை சரிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து இன்று ராஜ்கோட் விமான நிலைய மேற்கூரை விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
நல்வாய்ப்பாக, ராஜ்கோட் விமான நிலையத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜ்கோட் விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் பயணிகள் வாகனங்களில் வந்து இறங்கும் மற்றும் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
முன்னதாக வியாழக்கிழமை, ஜபல்பூர் விமான நிலையத்தின் மேற்கூரை விழுந்து விபத்து நேரிட்ட நிலையில், வெள்ளியன்று தில்லி விமான நிலையத்தில் மிக மோசமான விபத்து நேரிட்டது. இதில் 45 வயதான கார் ஓட்டுநர் பலியானார். அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும் எனவும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அறிவித்திருந்தார்.
BIG BREAKING ⚡
After Jabalpur & Delhi, now Rajkot airport roof also collapsed after rainfall.
Third airport collapse in 3 days, this Govt is creating history for all bad reasons.
Gems of #Panauti NDA Govt 3.0 pic.twitter.com/2VTOtpT3jd
— Ankit Mayank (@mr_mayank) June 29, 2024
இந்த நிலையில்தான், மூன்றாவது நாளான சனிக்கிழமை குஜராத் மாநிலம் ராஜ்கோட் விமான நிலையத்தில் மேற்கூரை சரிந்துள்ளது. இந்த விமான நிலையம் பிரதமர் நரேந்திர மோடியால், 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சரியாக ஒரு ஆண்டுக்குள் விமான நிலைய மேற்கூரை சரிந்திருப்பது சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஒரு நாள் பெய்த கனமழைக்கே இவ்வாறு மேற்கூரைகள் அதுவும் விமான நிலையத்தின் மேற்கூரைகள் சரிந்து விழுந்தால், கட்டுமானத்தின் உறுதித்தன்மை எந்த அளவில் இருக்கிறது என்று மக்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
சுமார் 2534 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட ராஜ்கோட் விமான நிலையம் ரூ.1405 கோடி பொருள் செலவில் கட்டப்பட்டது. தொடர்ச்சியாக மூன்று நாள்களில் மூன்று விமான நிலையங்களின்் மேற்கூரைகள் சரிந்திருப்பது குறித்து மத்திய அரசு கவனத்தில் எடுத்து, பெரிய அசம்பாவிதங்கள் நேரிடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விமானப் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
குஜராத் மாநிலத்தில், தெற்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், அங்கு பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் ஒரு சில இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர், குஜராத்தின் கட்ச், ராஜ்கோட், தேவ்பூமி, துவாரகை, சோம்நாத், நர்மதா உள்ளிட்ட மாவட்டங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

