மும்பை: 2029-ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியை நாம் பார்ப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.
ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 30) நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியொன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் அமைந்துள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கும் சென்றிருந்த மோடி, அங்கே ஆா்எஸ்எஸின் நிறுவனத் தலைவா்களான டாக்டா் ஹெட்கேவாா், குருஜி கோல்வல்கா் ஆகியோரின் நினைவிடங்களுக்கும் சென்று அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், பல ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் தலைமையகம் சென்றிருப்பதைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ள சிவசேனை கட்சி(உத்தவ் தக்கரே அணி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத், பிரதமர் மோடி முதுமையடைந்து வருவதால், தாம் அரசியலிலிருந்து ஓய்வெடுப்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்திடவே ஆர்எஸ்எஸ் தலைமையகம் சென்றிருப்பதாக பகிரங்கமாகப் பேசியுள்ளார்.
மேலும், “மோடிக்குப் பிறகு பாஜகவில் அடுத்த தலைவர் யார்? என்பதை ஆர்எஸ்எஸ் தீர்மானிக்கும். மோடிக்குப் பிறகு அடுத்த தலைவர் மகாராஷ்டிரத்திலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிர அரசியலில் முக்கிய தலைவராக அறியப்படும் சஞ்சய் ராவத்தின் இந்த கருத்து தேசிய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சஞ்சய் ராவத்தின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், “2029-ஆம் ஆண்டில், மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியை நாம் பார்ப்போம். மோடிக்குப் பிறகு யார்? என்ற தேடலுக்கு அவசியம் எழவில்லை. மோடியே நமது தலைவர், அவரே தலைவராகவும் நீடிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “நமது கலாசாரத்தில், தந்தை உயிருடன் இருக்கும்போது, அவருக்குப் பின் யார் என்பது குறித்து பேசுவது ஏற்புடையதல்ல.
அப்படிப் பேசுவது முகலாய கலாசாரமாகும். அதைப் பற்றி ஆலோசிக்க இன்னும் நேரம் வரவில்லை” என்றார்.
இதையும் படிக்க: ஓய்வை அறிவிக்க ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றாரா மோடி?
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


