Sorting by

×

ADMK : ‘கூட்டணி ஆட்சி; கறாராக ‘நோ’ சொல்லும் எடப்பாடி! – பின்வாங்குமா பா.ஜ.க?

‘கூட்டணி ஆட்சி சர்ச்சை!’

அதிமுக – பா.ஜ.க கூட்டணி அறிவிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைகளுக்கு குறைவில்லை. ஏப்ரல் 11 ஆம் தேதியன்று கூட்டணிக்காக கைக்குலுக்கிய சமயத்திலேயே தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் எனக் கூறி திரியைக் கொளுத்திப் போட்டார் அமித் ஷா. அப்போது உண்டான புகைச்சல் இன்னுமே ஓயவில்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

‘எடப்பாடியின் மெசேஜ்!’

நேற்று, கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தனது உள்ளக் கிடக்கை மொத்தமாக போட்டு உடைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ‘எங்களை யாராலும் கபளீகரம் செய்ய முடியாது. அதிக இடங்களில் வென்று அதிமுக தனிப்பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடிக்கும்.’ என பா.ஜ.கவுக்கு நேரடியாக மெசேஜ் சொல்லியிருக்கிறார் எடப்பாடி.

‘தமிழக வரலாறு…’

ஆட்சியில் பங்கு கொள்வது பல மாநிலங்களிலும் பா.ஜ.க முன்னெடுக்கும் யுக்தியே. ஆட்சியில் தங்களின் பிடி வலுவாக இருப்பதற்கும், அந்த மாநிலத்தில் தங்களுடைய வளர்ச்சியை மேலும் உறுதி செய்வதற்கும் கூட்டணி ஆட்சியே வழி என்பது பா.ஜ.கவின் எண்ணம். ஆனால், தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி என்கிற கதையாடலே பெரிதாக பேசப்பட்டதில்லை.

கருணாநிதி
கருணாநிதி

2006-11 ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில் திமுகவுக்கு தனி மெஜாரிட்டி கிடையாது. கூட்டணி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு கொடுத்துதான் கருணாநிதி அந்த ஆட்சிக்காலத்தை நிறைவு செய்தார். மைனாரிட்டி திமுக என ஜெயலலிதா அந்த ஆட்சியின் மீது கடும் விமர்சனங்களை கூட முன் வைத்திருக்கிறார். அதேமாதிரி, அதிமுகவும் தங்களின் தேர்தல் வரலாற்றில் கூட்டணியாக ஆட்சி அமைத்ததே இல்லை. 2011 இல் அதிமுகவோடு விஜயகாந்தின் தேமுதிக கூட்டணி அமைத்தது. திரை நட்சத்திரமாக 2006 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்கு வங்கியை நிருபித்துக் காட்டிவிட்டு அதிமுக கூட்டணிக்கு வந்திருந்தார் விஜயகாந்த். அப்போதும் அவர் எதிர்க்கட்சித் தலைவராகத்தான் ஆக முடிந்தது. ஆட்சி அதிகாரத்தில் பங்கை பெற முடியவில்லை.

‘கூட்டணி ஆட்சி குரல்!’

கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய், தன்னுடைய முதல் மாநாட்டிலேயே ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனப் பேசியிருந்தார். அதற்கு முன்பாகவே விசிக தலைவர் திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதைப் பற்றி பேசி அது திமுக கூட்டணிக்குள் சர்ச்சையை கிளப்பியிருந்தது. திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என குரலை உயர்த்தினாரே தவிர, கூட்டணிக்குள் அதை ஒரு டிமாண்டாக இன்னும் எடுத்து வரவில்லை. காங்கிரஸ் தரப்பிலிருந்தும் அவ்வபோது கூட்டணி ஆட்சி என்கிற குரல் எழுந்து அப்படியே அமைதியாகி விடுகிறது.

ADMK - BJP - எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா - அண்ணாமலை
ADMK – BJP – எடப்பாடி பழனிசாமி – அமித் ஷா – அண்ணாமலை

‘அமித்ஷா vs எடப்பாடி’

ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் பா.ஜ.க கூட்டணி ஆட்சி என்பதை ஒரு அதிகாரத்துடனும் ஆதிக்கத்துடனும் முன் வைக்கிறது. அமித் ஷாவே மீண்டும் மீண்டும் அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். ஏப்ரல் 11 ஆம் தேதி கூட்டணியை அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும் என்று எடப்பாடியை மேடையில் வைத்துக் கொண்டே பேசினார். அப்போதே அமித் ஷாவின் பேச்சு சர்ச்சையானது. உடனே தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு இடமே இல்லை என தம்பிதுரையை வைத்து பதில் கூறினார் எடப்பாடி.

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், ‘அமித் ஷா கூறியதை நீங்கள் தவறாக புரிந்துகொண்டுவிட்டீர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சியைப் பிடிக்கும் என்றுதான் கூறினார்.’ என கமா போட்டுப் பேசி அமித் ஷாவின் பேச்சுக்கு புதிய உரை விளக்கம் கொடுத்தார் எடப்பாடி. இடையில் பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புகுந்து, ‘தமிழகத்தில் அமையப் போவதை நான் கூட்டணி ஆட்சி என்று சொல்லமாட்டேன். பா.ஜ.கவின் ஆட்சி என்றே சொல்வேன்.’ என மொத்தமாக அத்தனை பர்னிச்சரையும் உடைத்து காலி செய்தார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

இந்த களேபரத்தில் தற்போதைய பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மட்டும் கொஞ்சம் நிதானமாகவே பேசினார். ‘தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் ஆட்சி அமையும்.’ என உறுதியாகக் கூறினார். பா.ஜ.கவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், செய்தித்தொடர்பாளர்கள் சிலரும் அமித் ஷா பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்றே மெயிண்டெயின் செய்து வந்தனர்.

‘அமித் ஷா பேட்டி!’

ஆனால், சில நாட்களுக்கு முன் அமித் ஷா தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு நாளிதழ்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ‘கூட்டணி ஆட்சிதான். அதில் பா.ஜ.க அங்கம் வகிக்கும்.’ என நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல கூறியிருந்தார். கூட்டணி ஆட்சி பற்றிய சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிமுகவினர் கூட்டணி ஆட்சி என்பதை ரசிக்கவில்லை என்பதெல்லாம் முழுமையாக தெரிந்த பிறகுதான் அமித் ஷா அந்தப் பேட்டியை கொடுத்திருக்கிறார். எனில், பா.ஜ.கவின் அகில இந்திய தலைமையும் அமித் ஷாவும் கூட்டணி ஆட்சிதான் என்பதில் உறுதியாக இருப்பதை உணர முடிகிறது.

எடப்பாடி பழனிசாமி - அதிமுக
எடப்பாடி பழனிசாமி – அதிமுக

‘எடப்பாடி ரியாக்சன்!’

அமித் ஷாவின் பேட்டிக்குப் பிறகு அதிமுகவிடமிருந்து வலுவான ரியாக்சன் எதுவும் வரவில்லை. இந்நிலையில்தான், நேற்று கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் இது சம்பந்தமாக வாய் திறந்திருக்கிறார் எடப்பாடி. ‘எங்களை யாராலும் கபளீகரம் செய்ய முடியாது. அதிக இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையோடு அதிமுக ஆட்சியமைக்கும்.’ எனப் பேசியிருக்கிறார். அமித் ஷாவின் பேட்டிக்கு மைக்கின் வழி எடப்பாடி பழனிசாமி கொடுத்திருக்கும் பதிலாகத்தான் இந்தப் பேச்சு பார்க்கப்படுகிறது.

‘உடன்படிக்கையின் போது…’

இதுசம்பந்தமாக பேச நமது அம்மா இதழின் ஆசிரியர் கல்யாணசுந்தரத்தை தொடர்புகொண்டோம். ‘கூட்டணி ஆட்சி கிடையாது என்பதை பொதுச்செயலாளர் தெளிவாக கூறிவிட்டார். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.’ என்று தொடங்கிய கல்யாணசுந்தரம், ‘தமிழகத்தில் அதிமுக கூட்டணி பெருவாரியான இடங்களில் வெல்லும். அதிமுக தலைமையில் ஆட்சி அமையும். இதை பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் உறுதியாகக் கூறிவிட்டார்.

கல்யாணசுந்தரம்
கல்யாணசுந்தரம்

அப்படியே பா.ஜ.கவுக்கு கூட்டணி ஆட்சியின் மீது விருப்பம் இருந்தால் தேர்தல் உடன்படிக்கையின் போது அவர்கள் அதை வெளிக்காட்டட்டும். நாங்கள் பேசி தீர்த்துக்கொள்கிறோம். திமுக கூட்டணி வலுவாக இல்லை. கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிக்கு எதிராக போராடுகிறார்கள். மதிமுக அதிக இடங்களை கேட்கிறது. டீ, பன்னுக்காக வேலை செய்யமாட்டோம் என திருமா பேசுகிறார். அவர்களின் கூட்டணி வலுவாக இல்லை. அதை மறைக்க அதிமுக கூட்டணியைப் பற்றி திமுக எதையாவது கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறது.’ என முடித்தார்.

‘இப்போ ஒன்னும் அவசரம் இல்ல!’

‘எடப்பாடி பேசியதை நீங்கள் முழுமையாக கவனிக்க வேண்டும். பா.ஜ.க – அதிமுக கூட்டணி வெல்லும் என்று அவர் பேசுகிறார். ஆக, கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. கூட்டணி ஆட்சியைப் பற்றிய சர்ச்சையெல்லாம் இப்போது தேவையில்லை.’ எனக் கூறுகிறார். பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன்.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

உடன்படிக்கையின் போது பார்க்கலாம் என்கிறது அதிமுக தரப்பு. இப்போதைக்கு இந்த சர்ச்சை தேவையில்லை என்கிறது பா.ஜ.க தரப்பு. இந்த விவகாரத்தில் வெள்ளைக் கொடி காட்டப்போவது யார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *