Sorting by

×

மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி பாராமதியில் நடந்த விமான விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அவரது மனைவி சுனேத்ரா பவார் புதிய துணை முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தை அஜித் பவார் உயிரோடு இருக்கும்போது நடந்து வந்தது. ஆனால் அஜித் பவார் இறந்த பிறகு அஜித் பவார் கட்சியில் இருக்கும் சில மூத்த தலைவர்கள் இருகட்சிகளின் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பிரபுல் பட்டேல்

இதனால் இரு கட்சிகளின் இணைப்பு பேச்சுவார்த்தை நின்று போனது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. பிரபுல் பட்டேல் கட்சியில் செயல் தலைவராக இருக்கிறார்.

அஜித் பவார் இறந்தவுடன் பிரபுல் பட்டேலும், மற்றொரு தலைவரான சுனில் தட்கரேயும் இணைந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்ததாக சரத் பவார் பேரன் ரோஹித் பவார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ரோஹித்பவார் அளித்த பேட்டியில், ”அஜித் பவார் மறைந்த 18 நாட்களிலேயே, கட்சியின் பிரபுல் பட்டேல் மற்றும் சுனில் தட்கரே ஆகியோர் கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்தனர்.

பிப்ரவரி 16-ம் தேதி, கட்சி விதிகளை மாற்றி செயல் தலைவரான பிரபுல் படேலுக்கு முழு அதிகாரங்களையும் வழங்கும் வகையில் இவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் அல்லது மகன் பார்த் பவாரிடம் சொல்லாமலும், மற்ற எம்.எல்.ஏ-க்களைக் கலந்தாலோசிக்காமல் இந்த சதியில் ஈடுபட்டுள்ளனர். 

கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, மார்ச் 10-ம் தேதி சுனேத்ரா பவார் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில், அஜித் பவாரின் மரணத்திற்குப் பிறகு தான் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு இடைப்பட்ட காலத்தில் அனுப்பப்பட்ட அனைத்து கடிதங்களையும் செல்லாது என அறிவிக்குமாறு கோரியுள்ளார்.

ரோஹித் பவார்

பிரபுல் படேல் மற்றும் தட்கரே தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய இரண்டு நாட்களுக்குள், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அஜித் பவாரின் கட்சிக்கு பிரபுல் படேல் தேசிய தலைவராகிவிட்டார் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். 

பியூஷ் கோயல் பின்னர் அது தவறுதலாக சொல்லப்பட்ட ஒன்று என்று விளக்கமளித்தாலும், நடந்த சம்பவங்களை பார்க்கும்போது பிரபுல் படேல், தட்கரே மற்றும் கட்சியின் பிற முக்கிய தலைவர்களுக்கு இடையே சில விஷயங்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருப்பது போலத் தெரிகிறது. ஒட்டுமொத்தமாக, பிரபுல் படேலும் சுனில் தட்கரேயும் கட்சியைத் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவே இவ்வாறு செயல்பட்டனர்”என்று ரோகித் பவார் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள சுனில் தட்கரே, ரோகித் பவாரின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,” ரோகித் பவார் வெறும் விளம்பரத்திற்காகவும், கவனத்தை ஈர்ப்பதற்காகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். அஜித் பவாரின் மறைவுக்குப் பிறகு, உண்மையாகவே தேசியவாத காங்கிரஸ் கட்சியை “ஹைஜாக்” செய்ய முயன்றது ரோகித் பவார் தான். அஜித் பவாரின் குடும்பத்தினரான ஜெய், பார்த் மற்றும் சுனேத்ரா பவாருக்கு எதிராக என்னென்ன சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன என்பது எனக்குத் தெரியும்.

ரோகித் பவார் எங்கள் கட்சியைப் பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். என்னால் பல விஷயங்களைச் சொல்ல முடியும். என்னை வாய் திறக்க வைக்காதீர்கள்,” என்று அவர் எச்சரித்துள்ளார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *