Sorting by

×

‘அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்!’ – அண்ணாமலைக்கு புதிய பதவி; அப்செட்டில் நயினார் நாகேந்திரன்

சமீபத்தில், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 72 சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் பா.ஜ.க-வில் நியமிக்கப்பட்டனர். சிங்காநல்லூர், பத்மநாபபுரம் உள்ளிட்ட ஆறு தொகுதிகளுக்கு பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அதற்கு, அண்ணாமலை ஆதரவாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

“ஒரு மாநிலத் தலைவராக இருந்தவரை, ஆறு தொகுதிக்குள் சுருக்குவது நியாயமா…” என்று டெல்லிக்குப் புகார்களும் பறந்தன. மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரனின் ஆலோசனையில், மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம்தான் இந்த நியமனங்களை செய்தார் என்பதால், விநாயகத்தை பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டுமென டெல்லிக்கு அழுத்தமும் கூடியது. இந்தச் சூழலில்தான், கடந்த பிப்.9-ம் தேதி, சென்னை சேத்துப்பட்டிலுள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது.

பி.எல்.சந்தோஷ்

பா.ஜ.க-வின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹல் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில்தான், கேசவ விநாயகத்தை நீக்கிவிட்டு, புதிய அமைப்புப் பொதுச்செயலாளராக பிரஷோப குமாரை நியமிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. காரசாரமாக நடந்து முடிந்திருக்கும் அந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில், அண்ணாமலையிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து அவருக்கு மாநில அளவில் ஒரு பதவி வழங்க பேசி முடிக்கப்பட்டதாகவும் சொல்கின்றன பா.ஜ.க வட்டாரங்கள்.

சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ் ஆலோசனைக் கூட்டம் குறித்து, பா.ஜ.க-வின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம். “இந்தக் கூட்டத்திற்கு முன்பாக, கமலாலயத்தில் மாநில மையக்குழு கூட்டம் நடைபெற்றது. அதிலேயே, ‘சுற்றுப்பயண பொறுப்பாளர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகியது குறித்து யாரும் பேச வேண்டாம்’ என்று உத்தரவு போட்டுவிட்டார் சந்தோஷ். அப்போதே, தன்னுடைய சிஷ்யருக்கு ஆதரவாகவே சந்தோஷ் செயல்பட போவது தெரிந்துவிட்டது.

சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கு வர அண்ணாமலை விரும்பவே இல்லை. பி.எல்.சந்தோஷ்தான் வலுக்கட்டாயமாக பேசி அவரை வரவழைத்தார். கூட்டம் தொடங்கியவுடனேயே, ‘சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் குழுவில், முன்னாள் மாநிலத் தலைவர்களான பொன்னார், தமிழிசை, எல்.முருகன் உள்ளிட்டோரும்தான் இடம் பெற்றிருக்கிறார்கள். அண்ணாமலைக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க முடியுமா? கட்சியின் சார்பில் குழு போட்டால் அதை மதித்து நடக்க வேண்டியதுதானே…’ என்று சீனியர்கள் சிலர் பேசியிருக்கிறார்கள். அதற்கு அண்ணாமலையின் பதிலைக் கேட்டிருக்கிறார் சந்தோஷ்.

அண்ணாமலை, நயினார் நாகேந்திரன்

‘எனக்கு ஆறு தொகுதிகள் மட்டும் ஒதுக்கியதில் எந்த வருத்தமும் இல்லை. ஒரு தொகுதியை ஒதுக்கினாலும் வேலை செய்யத் தயார். ஆனால், நான் அங்கே போய் என்ன செய்வது… வெற்றிப் பெறுவதற்கான எந்த வியூகத்தையும் கட்சித் தலைமை சொல்லவே இல்லை. இந்தக் குழு அமைக்கப்பட போவதுகூட எனக்குத் தெரியாது. யாரும் என்னிடம் கலந்தாலோசிப்பதும் இல்லை. சுற்றுப்பயண பொறுப்பாளராக ஓர் இரவு முழுவதும் தொகுதிக்குள் தங்கினால் வெற்றி வந்துவிடுமா…

நமக்கு எந்தெந்த தொகுதிகள், வேட்பாளர்கள் யார் என்பதே இன்னும் முடிவாகவில்லை. வியூகமும் இல்லை. நாளைக்கே என்னை போட்டியிட சொன்னால், வியூகமே இல்லாமல் ஒன்றரை மாதத்தில் என்ன தேர்தல் வேலைப் பார்த்துவிட முடியும்…’ என்று கொதித்துப் பேசியிருக்கிறார் அண்ணாமலை. அவரது கேள்விகளுக்கு மாநிலத் தலைவரான நயினாரிடம் எந்த பதிலும் இல்லை என்பதால், அவர் கப்சிப் என அமைதியாக இருந்திருக்கிறார்.

அதன்பிறகுதான், அண்ணாமலைக்கு புதிய பதவி அளிப்பது குறித்து ஆர்.எஸ்.எஸ் சீனியர்களுடன் கலந்தாலோசித்திருக்கிறார் பி.எல்.சந்தோஷ். அதன்படி, தமிழகத்திலுள்ள சக்தி கேந்திரங்களுக்கு பொறுப்பாளராக, ‘சக்தி கேந்திர பிரமுக்’ பதவியில் அண்ணாமலையை நியமிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு சக்தி கேந்திரத்தின் கீழ், நான்கைந்து வாக்குச் சாவடிகள் வரும். வாக்குச் சாவடிகளையும் தொகுதி நிர்வாகிகளையும் இணைக்கும் பாலமாக சக்தி கேந்திரங்கள் செயல்படுகின்றன. தேர்தல் பிரசாரம் தொடங்கி, களப்பணி வரையில் முக்கிய பங்காற்றும் இந்த சக்தி கேந்திரங்களில், சுமார் 25,000 பேர் தமிழகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு பொறுப்பாளராகத்தான் நியமிக்கப்படவிருக்கிறார் அண்ணாமலை.

பா.ஜ.க கேசவ விநாயகம்

2015-ம் ஆண்டிலிருந்து கட்சியின் மாநில அமைப்புப் பொதுச் செயலாளராக 11 வருடங்கள் பணிபுரிந்தவர் கேசவ விநாயகம். அவருக்கும் அண்ணாமலைக்கும் இருக்கும் உரசலை பெரிதுப்படுத்தாமல், நீண்டகாலமாக ஒரே பொறுப்பில் இருப்பதால், அவரை நீக்குவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அவரிடத்தில், நாகர்கோவிலைச் சேர்ந்த பிரஷோப குமாரை நியமிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. தற்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாநிலச் செயலாளராக இருக்கும் பிரஷோப குமார், மார்ச் முதல்வாரத்தில் அமைப்பு பொதுச்செயலாளராக பொறுப்பேற்கவுள்ளார்” என்றனர் விரிவாக.

அமைப்பு பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள கேசவ விநாயகத்துக்கு, சமூக நல்லிணக்க பொறுப்பாளர் பதவியை வழங்கியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. தமிழகத்தில், கிராமங்கள் அளவில் கூட்டங்கள் போட்டு, சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு அவரை நியமித்திருக்கிறார்கள். இந்த மாற்றங்களில், சக்தி கேந்திர பொறுப்பாளராக அண்ணாமலைக்கு பதவி வழங்கப்படவுள்ளதில், நயினார் நாகேந்திரன் தரப்பு கடும் அப்செட் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் மூத்த தலைவர் ஒருவர், “சுற்றுப்பயண பொறுப்பாளர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகியவுடனேயே, அவர்மீது டெல்லிக்கு ரிப்போர்ட் வாசித்தது நயினார் தரப்பு. ‘அண்ணாமலை மீது டெல்லி கடும் கோபத்தில் இருக்கிறது. அவருக்கு வழங்கப்பட்டுள்ள இசட் பிரிவு பாதுகாப்பை விலக்கப் போகிறார்கள்’ என்ற வதந்தியும் கட்சிக்குள் தீயாகப் பரவியது. ஆனால், வேறொரு கணக்கைப் போட்டு முடித்துவிட்டது டெல்லி. நயினார் நாகேந்திரன் மீது டெல்லிக்கு நம்பிக்கை குறைந்ததால்தான், மாநிலத் தலைவர் பதவிக்கு இணையான ‘சக்தி கேந்திர பிரமுக்’ பதவியில் அண்ணாமலையை நியமிக்க முடிவெடுத்திருக்கிறார்கள்.

கேசவ விநாயகம் பிரிவு உபசார விழா…

வரும் பிப்.14-ம் தேதி, சக்தி கேந்திர நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க சேலம் வரவிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர். அதைத்தொடர்ந்து, பிப்.17-ம் தேதியிலிருந்து தேர்தல் பணிகளை சக்தி கேந்திர நிர்வாகிகள் தொடங்கவுள்ளனர். இதையெல்லாம் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் பொறுப்பு அண்ணாமலைக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, ‘என்னுடைய திருநெல்வேலி தொகுதியில் அண்ணாமலை நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டம் போட்டிருக்கிறார்கள். கட்சிக்குள் இருப்பவருக்கு எதற்கு நற்பணி மன்றம்..’ என்றெல்லாம் சொல்லிப் பார்த்திருக்கிறார் நயினார். அதையெல்லாம் டெல்லி சட்டை செய்யவே இல்லை. இதில், நயினார் கடும் அப்செட்!” என்றார்.

மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கட்சியின் முக்கிய பொறுப்புக்கு வரவிருக்கிறார் அண்ணாமலை. சக்தி கேந்திர பொறுப்பாளராக, பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளில் தீவிரமாக கவனம் செலுத்தவும் தயாராகிறார். அதேசமயம், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூலமாக, அண்ணாமலைக்கு பதவி வழங்கப்பட உள்ளதற்கு தடை போட சில காய்நகர்த்தல்கள் நடைபெறுகின்றன. என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *