Sorting by

×

மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் தங்களுக்கு முறையான நிவாரணமும் இழப்பீடும் கம்பெனி தரப்பிலிருந்து கிடைக்கவில்லையென்றும், அதைப் பெற்றுத் தருவதில் அரசும் சுணக்கம் காட்டுவதாகவும் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தியோடு பத்திரிகையாளர்களைச் சந்தித்து முறையிட்டிருந்தனர்.

திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்தி

திருமுருகன் காந்தி பேசுகையில், “மாஞ்சோலை எஸ்டேட்டை பாம்பே பர்மா கம்பேனி சட்ட விரோதமாக மூடி நான்கு தலைமுறையாக வேலை பார்த்தவர்களை வெளியே அனுப்புகிறது. அங்கே காடை திருத்தி தேயிலை தோட்டத்தை உருவாக்கியதே நம்முடைய தொழிலாளர்கள்தான். ஆண்டுக்கு 4,000 கோடி அளவுக்கு அந்த நிறுவனம் லாபம் பார்த்திருக்கிறது. ஆனால், நம்முடைய தொழிலாளர்களை ஏமாற்றி தாமாக ஓய்வு பெறுகிறோம் என கையெழுத்து வாங்கி சொற்ப தொகையை கொடுத்து ஏமாற்றியிருக்கிறார்கள்.

ஒரு ஆண்டுக்கு 200 நாள்கள் என்ற கணக்கில் ஒரு தொழிலாளர் எத்தனை ஆண்டுகள் உழைத்தார்களோ அதே அளவில் நட்ட ஈடு கொடுக்க வேண்டும்.

போர்டு நிறுவனம் மூடிய போது 147 நாள்கள் கணக்கிட்டு இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், இங்கே 15 நாள்கள் என்ற வீதத்தில்தான் இழப்பீட்டை வழங்கியிருக்கிறார்கள். அதிலும் 58 வயதை கடந்தவர்களுக்கெல்லாம் வெறும் 2 லட்சத்தைதான் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த நிறுவனம் 1,000 கோடி ரூபாயை வரி கட்டாமல் நீதிமன்றத்தில் தடையும் வாங்கி வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட நிறுவனத்திடமிருந்து தொழிலாளர்களுக்கு முறையான இழப்பீட்டை வாங்கி கொடுப்பதில் என்ன பிரச்னை? ஆனால், இந்த திமுக அரசு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்தி

அண்ணாவின் காலத்தில் திமுக-வின் வழக்கறிஞர்கள் இந்த மக்களுக்காக போராடி சம்பள உயர்வு பெற்றுக் கொடுத்திருக்கின்றனர்.

இங்கே என்னுடன் இருக்கும் எஸ்டேட்டை சேர்ந்த ஸ்டாலின், ஊத்து கிராமத்தின் திமுக கவுன்சிலர். அவருக்கும் கூட இந்த அரசு காது கொடுக்கவில்லை. SIR இல் இந்த மக்கள் நிரந்தரமாக வெளியேறியவர்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களுக்கு முறையாக இழப்பீடு கொடுக்காமல் அந்த நிறுவனம் தொழிற்சாலையை காலி செய்துகொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் நுஸ் வாடியா பாஜக-வுக்கு 25 ஆண்டுகளாக நன்கொடை கொடுப்பவர். அந்த நபருக்கு சாதகமாக திமுக அரசு நிற்கிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதாக கூறினார். ஆனால், ஏன் இப்போது வரை அதை கொண்டு வரவில்லை. சீமானும் இதைப் பற்றி வாய் திறக்கவில்லை. தமிழர்களை வஞ்சித்து மார்வாடிக்கு ஆதரவாக இவர்கள் நிற்கிறார்கள். மாஞ்சோலை என ஒன்று இருக்கிறதா என்றே விஜய் கட்சிக்கு தெரியுமா என தெரியவில்லை. நீங்களெல்லாம் கட்சியை கலைத்துவிட்டு செல்லுங்கள்.

நாகர்கோவிலிலிருந்து ஒரு Plantation ஆபிசர் வந்து சம்பள உயர்வு விண்ணப்பம் என ஓய்வு விண்ணப்பத்தை கொடுத்து ஏமாற்றி கையெழுத்து வாங்கியிருக்கிறார். தொழிலாளர்கள் வேலையை விட்டு சென்றதால் கம்பெனியை மூடுகிறார்களாம். என்னய்யா நாடகம் இது? சமத்துவபுரத்தில் ஒரு வீடும், சுயமரியாதோடு வாழ ஒரு வேலையும் நிறுவனத்திடமிருந்து முறையான இழப்பீட்டையுமே தொழிலாளர்கள் கோருகிறார்கள். இதை கூட உங்களால் செய்ய முடியாதா?” என்றார்.

ஸ்டெல்லா மேரி
ஸ்டெல்லா மேரி

மாஞ்சோலை எஸ்டேட்டை சேர்ந்த ஸ்டாலின் பேசுகையில், “96 வருடமாக நான்கு தலைமுறையாக அந்த எஸ்டேட்டில் வாழ்ந்திருக்கிறோம்.

10 அடி வீட்டுக்குள் இரண்டு குடும்பங்கள் வாழ்ந்திருக்கிறோம். வேலைக்கு சென்றால் தலை முதல் கால் வரை அட்டை பிய்த்து எடுக்கும். அப்படி கஷ்டப்பட்டுதான் அந்த கம்பெனிக்காக வேலை செய்தோம். ஆனால், எங்களை ஏமாற்றி கையெழுத்து வாங்கி நடுத்தெருவில் விட்டு விட்டார்கள்.

நாங்கள் அரசிடம் இழப்பீடு கேட்கவில்லை. இந்த நிறுவனத்திடமிருந்து இழப்பீட்டை வாங்கி தர சொல்கிறோம்.

அங்கே 5 வார்டுகளிலுமே திமுக கவுன்சிலர்கள்தான். அமைச்சர் நேருவை பல முறை சந்தித்திருக்கிறோம். ஆனால், அதிகாரிகள் எங்களால் எதையும் செய்ய முடியாது என கையை விரித்துவிட்டார்கள். எங்கள் மீது வழக்கு பதிவோம் என மிரட்டுகிறார்கள்.

தண்ணியை நிறுத்திவிட்டார்கள். ரேஷனை நிறுத்திவிட்டார்கள். பேருந்தை நிறுத்திவிட்டார்கள். முழுமையாக நெருக்கடி கொடுத்து எங்களை அப்புறப்படுத்த நினைக்கிறார்கள்.

பொங்கல் பரிசைக்கூட எங்களுக்கு கொடுக்கவில்லை. நாங்கள் இருப்பது மாஞ்சோலையில், ஆனால் மணிமுத்தாறில் வந்து பொங்கல் பரிசையும் ரேஷனையும் வாங்க சொல்கிறார்கள். அதை வைத்து நாங்கள் மலையை விட்டு காலி செய்துவிட்டோம் என நிரூபிக்கப் பார்க்கிறார்கள். ஒரு நாள் வேலைக்கு சென்றால்தான் எங்களுக்கு 450 ரூபாய் சம்பளம். எங்களின் ரத்தத்தை சிந்தி வேலை பார்த்திருக்கிறோம். நாங்கள்தான் அந்த வனத்துக்கே பாதுகாப்பு” என்றார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

நாலுமுக்கை சேர்ந்த ஸ்டெல்லா மேரி பேசுகையில், “ஒரு நாளைக்கு 2 பேருந்து விட்டுக் கொண்டிருந்தார்கள். அதுதான் பெண்களுக்கு உதவியாக இருந்தது. இப்போது ஒரு பேருந்தை நிறுத்திவிட்டார்கள். நாங்கள் எப்படி மேலே செல்ல முடியும்?

நாங்கள் ரத்தம் சிந்தி வேலை பார்த்திருக்கிறோம். எங்களுக்கு அந்த காடுதான் எல்லாமே. இப்படி ஊர் இருக்கிறது மக்கள் இருக்கிறார்கள் என்று கூட. எங்களுக்கு தெரியாது. அட்டை எங்களின் பாதி ரத்தத்தை உறிந்தது. அந்த நிறுவனம் மீதி ரத்தத்தை உறிந்துவிட்டது. நாங்கள் எதையும் சண்டை போட்டு கேட்டதில்லை. கும்பிட்டுதான் கேட்டிருக்கிறோம்.

ஒவ்வொரு லைனாக சென்று வீடு வீடாக திமுக-வுக்கு ஓட்டு கேட்டிருக்கிறோம். முதல்வர் ஐயா எங்களுக்கு உரியதை செய்து கொடுக்க வேண்டும்.

நாங்கள் 267 குடும்பத்தினர் பொங்கல் பரிசு வாங்கவில்லை. எஸ்டேட்டை விட்டு கீழே போய் வாங்கிக் கொள்ளுங்கள் என்கின்றனர். இதையெல்லாம் யாரும் கேட்கவில்லை.

நீதி கிடைக்காமல் எஸ்டேட்டை விட்டு இறங்கமாட்டோம்” என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *