Sorting by

×

2019-ம் ஆண்டு வியட்நாம் நாட்டின் ஹனோய் (Hanoi) நகரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டின் போது, “வடகொரியா தனது அணு ஆயுதத் திட்டங்களை முழுமையாகக் கைவிட வேண்டும்” என்று ட்ரம்ப் நிபந்தனை விதித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அதைத் தொடர்ந்து வடகொரியா டஜன் கணக்கான அணு ஆயுதங்களைத் தயாரித்து சோதனைகளையும் மேற்கொண்டது. சமீபத்தில் புதிய போர்க்கப்பல் மற்றும் அணுசக்தி ராக்கெட்டுகளைச் சோதித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது இளம் வயது மகள் கிம் ஜூ ஏ-வை பொதுவெளியில் முன்னிறுத்தி, இந்த அணுசக்தித் திட்டம் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் என்பதை உலகிற்குத் தெரிவித்தார்.

மறுபுறம், ரஷ்யாவுடனான உறவை வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுப்படுத்தி வருகிறது. உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக பீரங்கிக் குண்டுகள், ராக்கெட்டுகள் மற்றும் ஆயிரக்கணக்கான வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளது.

இதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து உணவு, எரிபொருள் மற்றும் அதிநவீன ராணுவத் தொழில்நுட்பங்களை வடகொரியா பெற்று வருகிறது.

இது அமெரிக்காவின் செல்வாக்கிற்கு எதிராக ஒரு வலுவான அமெரிக்க எதிர்ப்பு உருவாகி வருவதைக் காட்டுகிறது என உலக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வடகொரியாவின் உச்ச மக்கள் பேரவையில் உரையாற்றினார். அப்போது, ஈரானின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் பேசிய கிம் ஜாங் உன், “அமெரிக்க நிர்வாகம், அரசு ஆதரவு பயங்கரவாதம் மற்றும் ஆக்கிரமிப்புச் செயல்களில் ஈடுபடுகிறது.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்

அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு அமெரிக்கா கொடுத்த அழுத்தங்களையும், அவர்களின் பேச்சுக்களையும் வடகொரியா நிராகரித்தது மிகச் சரியானது என்பது தற்போதைய உலகச் சூழலில் தெளிவாகியிருக்கிறது.

அணு ஆயுதம் இல்லாத நாடுகள் அமெரிக்காவின் ராணுவ வலிமைக்கு எளிதில் இலக்காகின்றன என்ற எனது நீண்டகால நம்பிக்கையை, ஈரான் மீதான தாக்குதல் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா தனது விரோத கொள்கையைக் கைவிட்டு, வடகொரியாவை ஒரு அணுசக்தி நாடாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே இனி பேச்சுவார்த்தைக்கு இடமுண்டு. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை சாத்தியமாகலாம், ஆனால் அணு ஆயுதங்களைக் கைவிடுவது என்ற பேச்சுக்கே இனி இடமில்லை” என வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

2019-ல் முறிந்துபோன பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இந்த உரை முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த காலத்தைப் போல ‘அணு ஆயுத ஒழிப்பு’ குறித்து இனி பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *