அண்ணாமலையின் கருத்தால் சர்ச்சை!
தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பல நேரங்களில் சர்ச்சையான கருத்துக்களைச் சொல்லி, சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். அதுபோலவே, கடந்த செப்டம்பர் மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, பேரறிஞர் அண்ணா குறித்து முத்துராமலிங்க தேவர் பேசியதாக ஒரு கருத்தை முன்வைத்தார். இந்த சம்பவம் அரசியல் கட்சிகளைத் தாண்டி சாதிய அமைப்புகளிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அண்ணாமலை
இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் அண்ணாமலை தொடர்ந்து தவறான கவலைகளைப் பரப்புவதாகவும், சமூக ரீதியான மோதல் கலவரத்தை ஏற்படுத்துவதாகவும் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இரண்டு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய அரசின் அனுமதி கோரப்பட்டிருந்தது.
சர்ச்சையும் விளக்கமும்!
இந்த சூழலில் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும், அதனடிப்படையில் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யத் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதாக 25.04.2024 தேதியிட்டு ஒரு அறிக்கை வெளியானது. இந்த கடிதம் வெளியானதிலிருந்து சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலை தனது சமூக வலைத்தள பக்கத்தில், அந்த அறிக்கை பகிர்ந்ததுடன், “உண்மையைப் பேசியதற்காக வழக்குப் போடுகிறார்கள். எத்தனை வழக்குப் போட்டாலும் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு ஆளுநர் மாளிகையிலிருந்து ஒரு அறிவிப்பு வெளியானது. அதில், “தமிழக ஆளுநரால், தமிழக பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழக ஆளுநர் மாளிகைக்குக் கடந்த இரண்டு நாட்களாகப் பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழக ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அதுதொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை” என்று கூறப்பட்டிருந்தது.
நடந்தது என்ன?
உண்மையில் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து ஆளுநர் மாளிகை வட்டாரம், அரசு தலைமைச் செயலக வட்டாரத்தில் விசாரித்தோம். “அண்ணாமலை மீது சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் இரண்டு சமூகங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்ததால் அந்த விவகாரம் அரசின் ஒப்புதலுக்கு வந்தது. அதனை விசாரிக்கப்பட்டு இந்தியத் தண்டனை சட்டம் 196-ன் படி 153-A, 153-B(2), 505 (1)(b)and (c), 505(3) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. இவை அனைத்துமே இயல்பாக அனைவருக்குமே கடைப்பிடிக்கப்படும் நடைமுறை வழக்கம்தான்.
ஆளுநர் மாளிகை
அரசு ஒரு ஆணை வழங்கும்போது ஆளுநரின் ஆணையின்படி என்று இருக்கும். அதனைப் பார்த்ததுமே ஆளுநர் அண்ணாமலையின் மீது ஒப்புதல் வழங்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் கிளம்பிவிட்டார்கள். டெல்லியிலிருந்தும் ஆளுநர் அலுவலகத்துக்கு அழைப்பு வந்திருக்கிறது. உடனடியாக இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். உண்மையில் ஆளுநர் மாளிகை இப்படி ஒரு விளக்கத்தைக் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. இருந்தபோதிலும் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவர விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்” என்றனர் விரிவாக.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
