Sorting by

×

திமுகவில் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, அதிமுகவில் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, தவெகவில் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், நிர்மல் குமார், நாம் தமிழர் கட்சியில் சாட்டை துரைமுருகன், சிவக்குமார், பாத்திமா பர்ஹானா உள்ளிட்ட தலைவர்கள் அவரவர் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களாக விளங்குகிறார்கள்.

இவர்களில் யார் அடுத்த தலைவர் என்ற கேள்வி எழுவதற்கு வாய்ப்புண்டு. ஒரு கட்சியில் அடுத்த தலைவராக புதியவர் உருவாகலாம், இரண்டாம் கட்டத் தலைவரே முதன்மைத் தலைவராக மாறலாம்.  

அரசியல் வரலாற்றில், இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருக்கும் பல தலைவர்கள் கட்சியில் முதலிடத்துக்கு வருவார்கள், சில தலைவர்கள் தனியாக கட்சி தொடங்கி முதன்மைத் தலைவராக மாறுவார்கள். சில தலைவர்கள் இரண்டாம் கட்டத் தலைவர்களாகவே தொடர்ந்து இருப்பார்கள். தேசியக் கட்சிகளில் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு முக்கியத்துவம் குறைவு. பாஜகவில் வாஜ்பாய், அத்வானி என்றும், நரேந்திர மோடி, அமித்ஷா என்றும் முடிவெடுக்கும் இடத்தில் முதன்மையாக இருந்தார்கள், இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் நரசிம்மராவ், மன்மோகன்சிங் பிரதமர் ஆனார்கள். ஆனால், அவர்கள் கட்சியின் முடிவெடுக்கும் இடத்தில் இருந்து வந்தவர்கள் கிடையாது.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், விஜய்

ஒரு கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருப்பவர்கள் அரசியல் ஆடுபுலி ஆட்டத்தின் தொடர்ச்சியாக முதன்மை இடத்தைப் பிடித்து விடுவார்கள்.  

தமிழ்நாட்டில் அண்ணா ஆட்சி காலத்தில் நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன் உள்ளிட்ட இரண்டாம் கட்டத் தலைவர்கள் இருந்தார்கள். கருணாநிதி கட்சியின் தலைவராக மாறினார். கருணாநிதி ஆட்சி காலத்தில் பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்ட இரண்டாம் கட்டத் தலைவர்கள் இருந்தனர். மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவராக உயர்ந்தார்.

எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், எஸ்.டி.சோமசுந்தரம் உள்ளிட்ட இரண்டாம் கட்டத் தலைவர்கள் இருந்தனர். ஜெயலலிதா கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் அதிமுக ஐவர் அணி என்கிற இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருந்தனர். ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகவும், கட்சியின் தலைவராகவும் மாறினார்.

வைகோ, திருநாவுக்கரசர், வி.கே.சசிகலா, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் பிரதான அரசியல் கட்சிகளில் இரண்டாம் கட்டத் தலைவர்களாக முடிவெடுக்கும் இடத்தில் இருந்தவர்கள் தான்.

காங்கிரஸ் என்கிற மிகப்பெரிய தேசியப் பேரியக்கத்தை வீழ்த்திய முதல் மாநிலக் கட்சி என்கிற பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உண்டு. 1967இல் தொடங்கிய அந்த வரலாற்றுத் திருப்பம், இன்று வரை தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகள் ஆட்சிக்கு வரமுடியாத நிலையை உருவாக்கி வைத்திருக்கிறது. அத்தகு பெருமைக்குரிய திமுகவின் நிறுவனர் அண்ணாவிற்குப் பிறகு கட்சிக்கு யார் தலைவர் என்கிற போட்டியில் நடந்த ஆடுபுலி ஆட்டம் தனிச்சிறப்பு கொண்டது.
 
முதன்முதலாக 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாதுரை தலைமையில் திமுக ஆட்சி அமைந்த போது, அண்ணாவிற்கு அடுத்த இடத்தில் நெடுஞ்செழியன் இருந்தார். முக்கியத் தலைவர்களாக நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன் இருந்தனர்.

அண்ணா ஆட்சி அமைக்க ஆளுநரை சந்திக்கச் சென்றபோது, நெடுஞ்செழியன், கருணாநிதி உடன் சென்றனர். அண்ணாவின் அமைச்சரவையில் முதன்மை இடம் பிடித்தவர்கள் நெடுஞ்செழியன் மற்றும் கருணாநிதி. அண்ணாவின் பிரச்சார பீரங்கிகளாக இருந்தவர்கள் கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், எஸ்.எஸ்.ஆர். போன்றவர்கள். அதனால் 1969 பெப்ரவரி 3 அன்று தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திவிட்டு அண்ணா மறைந்த பிறகு கட்சியை யார் வழிநடத்தப் போகிறார்கள் என்கிற போட்டி கடுமையாகவே இருந்தது.

பேரறிஞர் அண்ணா – பேராசிரியர் அன்பழகன் – நாவலர் நெடுஞ்செழியன்

அண்ணா மறைந்த உடன் அமைச்சரவையில் இரண்டாமிடத்தில் இருந்த நெடுஞ்செழியன் தற்காலிக முதலமைச்சராக பதவியேற்றார். அண்ணா உடல் வைக்கப்பட்டிருந்த நுங்கம்பாக்கம் இல்லத்திலும், பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட ராஜாஜி மண்டபத்திலும் அண்ணா உடலருகே நெடுஞ்செழியன், கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் அமைச்சர்கள் அமர்ந்திருந்தனர்.

அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில், அண்ணா உடல் கொண்டு செல்லப்பட்ட ராணுவ வாகனத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், கே.ஆர்.ராமசாமி, அசோகன் உள்ளிட்ட பிரபலங்கள் அமர்ந்திருந்தனர். சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே மறைந்த முதலமைச்சர் அண்ணா உடல் ராணுவ மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்ட போது, பெட்டியில் அமைச்சர் கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறுநாள் சென்னையில் பிரதமர் இந்திரா காந்தி பங்கேற்ற இரங்கல் பொதுகூட்டத்தில் பெரியார், ராஜாஜி ஆகியோருடன், திமுகவின் சார்பாக நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன் ஆகியோர் மெரினா கடற்கரையில் உரையாற்றினார்கள். அண்ணா மறைவின் போது நடந்த, இந்த நிகழ்வுகள் அனைத்துமே திமுகவின் அடுத்த தலைமை யார் என்பதற்கான குறியீடுகளை வெளிப்படுத்தின.

அண்ணாவிற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் முடிந்த உடன், அடுத்து முதலமைச்சர் யார்? திமுகவின் தலைவர் யார்? என்ற விவாதம் தொடங்கியது. கருணாநிதி மாணவராக இருந்த போது பேச்சாளராக இருந்தவர் நெடுஞ்செழியன். அமைச்சரவையில் இரண்டாமிடம் பிடித்தவர். தற்காலிக முதலமைச்சர் அதனால் நெடுஞ்செழியன் முதலமைச்சர் ஆகப் போகிறார் என்று சொன்னார்கள். ஆனால், அரசியல் ஆடுபுலி ஆட்டங்கள் பல திருப்பங்களை உண்டாக்கியது.

அமைச்சர்கள் மதியழகன், சத்தியவாணி முத்து, ஏ.கோவிந்தசாமி, சாதிக் பாட்சா, திமுக எம்பிக்கள் நாஞ்சில் மனோகரன், கோவை செழியன் உள்ளிட்ட திமுக தலைவர்கள் அமைச்சர் கருணாநிதியை சந்தித்து முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

கருணாநிதி – அண்ணா

அண்ணாவின் இடத்தைப் பூர்த்தி செய்கின்ற ஆற்றலும், திறமையும் கருணாநிதிக்கு உண்டு என பெரியார் கருத்து தெரிவித்தார். திமுக மாவட்டச் செயலாளர்கள் முக்கிய முடிவெடுக்கும் இடத்தில் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கருணாநிதி பக்கமே நின்றனர்.

மு.கருணாநிதி, என்.வி.நடராசன், ப.உ.சண்முகம், ஏ.கோவிந்தசாமி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தற்காலிக முதலமைச்சர் நெடுஞ்செழியனை சந்தித்து கட்சித் தலைவர்களின் விருப்பத்தைத் தெரிவித்தனர். ஆனால், நெடுஞ்செழியன் முதலமைச்சர் ஆக வேண்டுமென தன் விருப்பத்தை தெரிவித்தார். கருணாநிதி முதலமைச்சர், துணை முதலமைச்சர் நெடுஞ்செழியன் அல்லது சட்டசபையில் அவை முன்னவராக முதல் இருக்கை நெடுஞ்செழியனுக்கு, அடுத்த இடம் கருணாநிதிக்கு என்ற பரிந்துரையை நெடுஞ்செழியன் ஏற்க மறுத்து விட்டார்.

திமுக தொடங்கிய போது, பல அரசியல் திருப்பங்களை உண்டாக்கியதில் மு.கருணாநிதிக்கு முக்கியப் பங்குண்டு. திமுகவின் மும்முனைப் போராட்ட வடிவங்களை, வியூகங்களை உருவாக்கியதிலும் கருணாநிதி முதன்மையாக இருந்தார். இந்தி எதிர்ப்பு, சேலம் இரும்பாலை, சேதுசமுத்திர திட்டம் உள்ளிட்ட போராட்டங்களின் போது திமுகவின் முதன்மையான தலைவர்கள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்படுவார்கள். ஆனால், கைதாகாமல் போராட்டத்தில் கைதாவார் கருணாநிதி. காவல்துறைக்கு மட்டுமின்றி ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் பல சவால்களைக் கொடுத்தார்.

திமுகவின் வெற்றிக்காக சென்னை மெரினா கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேர்தல் நிதி என்ற திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியவர். சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுகவை வெற்றிக்கு அழைத்துச் சென்றவர், திமுக ஆட்சிக்கு வந்த உடனே நடைபெற்ற தென் சென்னை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் முரசொலி மாறன் வெற்றிபெற உழைத்தவர் என்கிற தகுதிகளோடு கருணாநிதி தலைமைப் பொறுப்புக்கு முன்னிறுத்தப்பட்டார். எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் நடந்த விருந்தில் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று கருணாநிதிக்கு ஆதரவாக முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டது.  

எம்ஜிஆர், கருணாநிதி

திமுக சட்டமன்றக் குழுத் தலைவரை தேர்வு செய்கின்ற கூட்டம், 1969 பெப்ரவரி 9 அன்று அமைச்சர் ஏ.கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது. நெடுஞ்செழியன், கருணாநிதி இருவரில் யார் சட்டமன்றக் குழுத் தலைவர், முதலமைச்சராக மாறப்போகிறவர் யார் என்கிற எதிர்பார்ப்பு மேலோங்கியது.

மற்றொருபுறம் திமுக அமைச்சர்கள் மட்டுமின்றி, எம்ஜிஆர் உள்ளிட்ட திமுக பிரபலங்கள் பலரும் கருணாநிதி பக்கமே இருந்தனர். கூட்டம் தொடங்கியதும், மு.கருணாநிதியின் பெயரை அமைச்சர் மதியழகன் முன்மொழிந்தார். அமைச்சர் சத்தியவாணி முத்து வழிமொழிந்தார். ரா.நெடுஞ்செழியன் பெயரை சட்டமன்ற உறுப்பினர்கள் அரக்கோணம் எஸ்.ஜி.ராமசாமி முன் மொழிந்தார், பெரணமல்லூர் வி.டி.அண்ணாமலை   வழி மொழிந்தார்.

ஆனால், போட்டியின்றி தலைவரைத் தேர்வு செய்ய வேண்டுமென தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக நாவலர் நெடுஞ்செழியன் அறிவித்தார். கலைஞர் கருணாநிதி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக கோவிந்தசாமி அறிவித்தார். மறுநாளே 1969 பெப்ரவரி 10 அன்று முதலமைச்சராக கருணாநிதி பொறுப்பேற்றார். ஆனால், அண்ணாவிற்கு அடுத்த இடத்தில் இருந்த தன்னால் அமைச்சராக பதவியேற்க முடியாது என்று நெடுஞ்செழியன் மறுத்து விட்டார். சமாதானப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

அடுத்து கட்சியின் தலைவர் யார் என்ற பேச்சு எழுந்தது. பொதுச்செயலாளர் தேர்தல் வந்தது. அப்போது பொதுச்செயலாளர் பொறுப்பில் நெடுஞ்செழியன் இருந்தார். கருணாநிதி போட்டியிடுவதாக அறிவிப்பு வந்தது. மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தது. திமுகவில் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. தலைவராக கலைஞர் கருணாநிதி, பொதுச்செயலாளராக நாவலர் நெடுஞ்செழியன் தேர்வு செய்யப்பட்டனர். ஆறே மாதத்தில் சமாதான உடன்படிக்கை ஏற்கப்பட்டதால் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றார் நெடுஞ்செழியன். அண்ணாவிற்கு அடுத்த இடத்தில் அமர்ந்த நெடுஞ்செழியன், கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் அமர்ந்தார்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வந்தபோது திமுக அரசும் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தித்தனர். 1971 மார்ச் மாதம் 1, 4 மற்றும் 7 ஆகிய நாட்களில் மூன்று கட்டங்களாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்றது. திமுகவும் இந்திரா காங்கிரசும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டனர். ராஜாஜியும் காமராஜரும் ஓரணியில் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் திமுகவிற்கே சாதகமாக அமைந்தது. எம்பி தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாகர்கோவில் தொகுதியில் காமராஜர் மட்டுமே வெற்றி பெற்றார். சட்டமன்றத் தேர்தலில் 203 தொகுதிகளில் போட்டியிட்ட திமுகவிற்கு 184 இடங்கள் கிடைத்தன.

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதி

தனிப்பெரும் செல்வாக்கோடு ஆட்சியைப் பிடித்தது திமுக. மீண்டும் முதலமைச்சர் ஆனார் கருணாநிதி. ஆனால் அரசியல் ஆடுபுலி ஆட்டங்கள் தொடங்கியது. எம்ஜிஆர் சுகாதார அமைச்சராக விரும்புகிறார் என்றார்கள். திமுக ஆட்சி அமைத்து ஓராண்டு கடந்த போது, எம்ஜிஆர் தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. அடுத்த சில மாதங்களில் கட்சியில் தனக்கு முக்கியத்துவமில்லை என்றார் நெடுஞ்செழியன்.

நெடுஞ்செழியன் தலைமையில் மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது. இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருந்த எம்ஜிஆர், நெடுஞ்செழியன் இருவரும் கட்சித் தலைவர்களாக மாறினார்கள். ஆனால், ஒருகட்டத்தில் நெடுஞ்செழியன் எம்ஜிஆர் தலைமையை ஏற்று தனது கட்சியை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

அண்ணாவிற்கு அடுத்த இடத்தில் அமர்ந்த நெடுஞ்செழியன், கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் அமர்ந்த நெடுஞ்செழியன், எம்ஜிஆருக்கு அடுத்த இடத்தில் அமர்ந்தார்.

மீண்டும் இரண்டாம் கட்டத் தலைவராகவே மாறிவிட்டார்.!

(ஆடு புலி ஆட்டம் தொடரும்)

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *