தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்குத் தக்கத் தண்டனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகள் பெரும்பாலும் தேக்கநிலையில் இருப்பதாகவும், சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டனை பெறாமல் எளிதில் விடுதலை அடைவது வாடிக்கையாகிவிட்டது எனவும் பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
போக்சோ வழக்கு
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்:
சமீபத்தில் திருப்பூர் மாவட்டம், உடுமலையில் பெற்றோரை இழந்த 17 வயது சிறுமியை 9 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, 4 மாத கர்ப்பிணியாக இருந்த சம்பவம் பெரும் அதிரிவலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து, தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. மேலும், சுகாதாரத்துறை வழங்கிய தகவல்களின்படி, கடந்த 2021 ஜனவரி மாதம் முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை தமிழகத்தில் 36,134 பதின்பருவ கர்ப்பங்கள் பதிவாகியிருப்பதாக வெளியான செய்தி கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாகப் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், “கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திகளை தொடர்ந்து கேட்பது வருத்தமளிக்கிறது. முதலில் மிரட்டும்போதே புகார் அளித்திருந்தால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்த்திருக்கலாம்; சமூக சீர்கேட்டைத் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்!” என வலியுறுத்தினார்.
`போக்சோ குற்றவாளிகள் எளிதில் தப்பிக்கின்றனர்’
இந்தநிலையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “2021-ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 4,020 வழக்குகள் தொடரப்பட்டன. ஏற்கனவே நிலுவையில் இருந்த வழக்குகளையும் சேர்த்து அந்த ஆண்டில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணைக்கு வந்த வழக்குகளின் எண்ணிக்கை 9,643 ஆகும். ஆனால், அவற்றில் வெறும் 955 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மொத்த வழக்குகளில், 9.90 சதவிகித வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதிலும் கூட 202 வழக்குகளில், அதாவது 21.10 சதவிகித வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 753 (78.90 சதவிகித) வழக்குகளில் எதிரிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த அளவுக்கு குற்றவாளிகள் தப்புவதை நியாயப்படுத்த முடியாது.
அன்புமணி ராமதாஸ்
2022-ம் ஆண்டிலும் அதே நிலை தான் தொடர்ந்திருக்கிறது. அந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக விசாரணைக்கு வந்த 13,399 வழக்குகளில் வெறும் 15.17 சதவிகித, அதாவது 2033 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் கூட 25.77 சதவிகிதத்தில், 524 வழக்குகளில் மட்டும் தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 74.22 சதவிகித வழக்குகளில் எதிரிகள் தப்பியுள்ளனர். இதுவும் மிக அதிகம். போக்சோ வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதையும், தெய்வங்களுக்கு இணையாக போற்றப்பட வேண்டிய குழந்தைகளை சீரழித்தவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பிச்செல்ல அனுமதிக்கப்படுவதையும் அனுமதிக்கவே முடியாது. போக்சோ சட்டத்தின் படி தொடரப்படும் வழக்குகளில் நான்கில் மூன்று பங்கு வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. புலன் விசாரணைகளில் நடக்கும் குளறுபடிகளும், நீதிமன்ற விசாரணை தாமதப்படுத்தப்படுவதும் தான் இதற்கு காரணம்!” என குற்றம்சாட்டினார்.
போக்சோ சட்டம்
`அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!’
மேலும், “போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பெண் அதிகாரிகள் தான் விசாரணை நடத்த வேண்டும்; பாதிக்கப்பட்ட குழந்தைகள் மன உளைச்சல் அடையாத வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. ஆனால், பெரும்பான்மையான வழக்குகளில் ஆண் அதிகாரிகள் தான் குழந்தைகளிடம் விசாரணை நடத்துகின்றனர். விசாரணையின் போது அவர்கள் எழுப்பும் வினாக்கள் குழந்தைகளை மனதளவில் காயப்படுத்துகின்றன. அதனாலேயே பல குழந்தைகள் விசாரணையின் போது தடுமாறும் சூழலும், பின்வாங்கும் நிலையும் உருவாகிறது. குற்றவாளிகள் தப்புவதற்கு இதுவே முதல் காரணமாகும். அதேபோல், ஒரு குறிப்பிட்ட ஆண்டில் தொடரப்பட்ட வழக்கு, அதன் பின் 3 அல்லது 4 ஆண்டுகள் கழித்து விசாரணைக்கு வரும் போது, அவ்வழக்கு தொடர்பான நுண்ணிய விவரங்களை குழந்தைகளால் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. அதைக் காரணம் காட்டியே பாலியல் குற்றவாளிகள் விடுவிக்கச் செய்யப்படுகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டுமானால், குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அதை மனதில் கொண்டு போக்சோ வழக்குகளில் விசாரணை தாமதமாவதற்கு காரணங்கள் என்ன? குற்றவாளிகள் அதிக அளவில் விடுதலை செய்யப்படுவதற்கு காரணம் என்ன? என்பதைக் கண்டறிந்து அவற்றைக் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.
`குழந்தைகள் பாதுகாப்புக்கென தனி `காவல் யூனிட்’ வேண்டும்!’
இந்தநிலையில், குழந்தைகள் எதிரானக் குற்றங்களைத் தடுப்பது எப்படி, போக்சோ வழக்குகளில் தமிழக காவல்துறை, அரசு செய்யவேண்டிவை என்ன? என்பது குறித்து குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயனிடம் பேசினோம், “பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில், கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், சட்டம் செயல்பாட்டுக்கு வந்து 12 ஆண்டுகளாகியும் பெரும்பாலான குற்றவாளிகள் தப்பித்துக்கொண்டிருக்கின்றனர். போக்சோ வழக்குகளை கண்காணிக்கக்கூடிய அமைப்புகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் இருப்பதில்லை. குறிப்பாக, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் குழந்தைகள் உரிமைகள் குறித்து எந்தப் புரிதலும் இல்லாத கட்சி நிர்வாகிகளை `மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின்’ உறுப்பினர்களாக நியமித்திருந்தனர். அதன்பிறகு வந்த திமுக அரசு இந்த உறுப்பினர்களை நீக்கியது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் செயல்படாமல் இருக்கிறது. அதேபோல, மத்திய அரசும் குழந்தைகளுக்கான துறைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவதை குறைத்துக்கொண்டிருக்கிறது. குழந்தைகள் பாதுகாப்பை பொறுத்தவரை மத்திய, மாநில அரசுகள் அலட்சியமாகவே செயல்பட்டுவருகின்றன.
தேவநேயன், குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, உரிய நீதி தண்டனை கிடைக்காமல் காலம் தாழ்த்தப்படுவது, குற்றவாளிகள் விடுதலையாவது ஒரு குறைபாடு என்றால், குற்றம் நிகழாமல் தடுப்பதிலும் அரசுகள் கோட்டைவிட்டுவிடுகின்றன. மேலும், மாவட்ட அளவில் ஒரு சிறிய குழுவாகத்தான் குழந்தைகள் நல காவல் அலுவலர்கள் இருக்கிறார்கள். அதில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளைக் கையாள்வதற்கான தகுதியும், நிபுணத்துவமும் பெற்றவர்களாக இருப்பதில்லை. எனவே, சட்டம் ஒழுங்கு காவல்துறை, போக்குவரத்து காவல்துறை, மகளிர் காவல்துறை என தனித்தனியாக இயங்குவதைப் போல குழந்தைகளுக்காகவும் தனியாக ஒரு காவல்துறை பிரிவைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு காவல்நிலையத்திலும் குழந்தைகள் பாதுகாப்புக்கெனத் தனி காவல்துறை யூனிட்டை உருவாக்க வேண்டும்!” என கோரிக்கை வைத்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
