Sorting by

×

சசிகலா புஷ்பா — அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடி மேயர், கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் என அரசியலில் ஒரு சுற்று வந்தவர். ஒரு கட்டத்தில் தலைமைக்கும் இவருக்கும் உரசல் வர, “ஜெயலலிதா என்னை அடித்தார்” என கண்ணீர் விட்டார். தொடர்ந்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர், தற்போது தமிழக பாரதிய ஜனதாவில் மாநிலத் துணைத் தலைவராக உள்ளார்.

“தேர்தலுக்குத் தயாராகிவிட்டீர்களா?” என்ற கேள்வியுடன் அவரிடம் பேசினோம்.

“பாரதிய ஜனதா கட்சி தேர்தலுக்குத் தேர்தல் வேலை செய்யும் கட்சி இல்லை. வருடம் முழுவதும் கட்சி வேலைகள் தொய்வின்றி நடந்துகொண்டே இருக்கும். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் தயாராகவே இருப்போம். அதனால்தான் இன்றைய தேதியில் இந்தியாவில் அதிகப்படியான மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கிறோம். தமிழ்நாட்டிலும் இன்னும் இரண்டு மாதத்தில் ஆளும் கட்சி வரிசையில் அமர்வோம்” என்றவரிடம், அங்கிருந்தே கேள்விகளை வைத்தோம்.

எடப்பாடி பழனிசாமி – இபிஎஸ்

“தெளிவாகச் சொல்லுங்கள், வரும் தேர்தலில் உங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியா, அதிமுக மட்டுமே ஆட்சி அமைக்குமா?”

“தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை, மத்தியில் பாரதிய ஜனதாதான் கூட்டணிக்குத் தலைமை தாங்குகிறது. தமிழகத்தில் நீண்ட காலமாக மாநிலத்தை ஆண்ட கட்சியான அதிமுகவுடன் கூட்டணி வைக்கும்போது, அந்தக் கட்சிதான் கூட்டணிக்குத் தலைமை தாங்கும். இதை எங்கள் தலைவர்களே தெளிவாகச் சொல்லிவிட்ட பிறகும், இந்தக் கூட்டணியில் குழப்பம் உண்டாக்க எதிர்க்கட்சியினர் இந்த மாதிரியான கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உள்நோக்கம் எடுபடாது.

இந்தக் கேள்வியை யார் எழுப்புகிறார்களோ, அந்தப் பக்கத்தில்தான் இப்போது தனிக்கட்சி ஆட்சியா, கூட்டணி ஆட்சியா என்ற விவாதம் சூடாகப் போய்க்கொண்டிருக்கிறது. ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற முழக்கத்தை எங்கள் கூட்டணிக் கட்சிகளின் எந்த மேடையிலாவது கேட்டிருக்கிறீர்களா? அதனால் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வரும் தேர்தலில் அமோகமாக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார்.”

ops

“ஒ.பன்னீர்செல்வம் திமுகவில் சேர்ந்தது குறித்து..”

“மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது. ஜனநாயக நாட்டில் கட்சி மாறுவது புதுசில்லைனாலும், அவர் திமுகவுக்குப் போனதை அரசியலே தெரியாத சாமானியனால் கூட ஜீரணிக்க முடியாது. ஏன்னா, இதே சட்டசபையில் உதயநிதி முதன்முதலில் பேசினப்ப, ‘என்னுடைய காரை எடுத்துகிட்டு கமலாலயம் போயிடாதீங்க’னு அவர் எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்துச் சொன்னப்ப, ‘எங்களுடைய் கார் எம்.ஜி.ஆர் மாளிகையை நோக்கிதான் எப்பவுமே போகும்’னு இவர்தான் முந்திக்கிட்டுப் பதில் சொன்னார். அப்படிப் பேசினவர் கடைசியில திமுகவுக்குப் போகணும்னு எடுத்த முடிவு பெரிய தவறு.”

“ஆனாலும் கூட்டணி விஷயத்தில் உங்கள் பக்கம் கொஞ்சம் பலவீனமாக இருப்பது போன்ற ஒரு தோற்றம் தெரிகிறதே?”

“அதுவும் பொய்ப் பிரச்சாரம்தான். அதிமுக முன்பை விட இப்போது வலுவாகி இருக்கிறது. ஏனென்றால் பன்னீர்செல்வம் திமுகவிற்குப் போய்விட்டார். சசிகலா தனிக் கட்சி தொடங்கிவிட்டார். தினகரனுக்கு பழனிசாமியுடன் முரண்பாடு இல்லை. பழனிசாமி ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பதற்காகவே அவரும் எங்களுடன் வந்துவிட்டார். அதனால் ஒற்றைத் தலைமையில் கட்சி வலுவடைந்திருக்கிறது.

2021 தேர்தலிலேயே தன்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லி 60-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்த கட்சி இது. பத்தாண்டு ஆட்சியில் இல்லாதவர்கள் என்று திமுக மேல் மக்களுக்கு ஒரு அனுதாபம் வந்தது போல் தெரிந்தது. ஆனால் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட ஐந்தோ ஆறோ தொகுதிகள்தான் கூடுதலாகப் பிடித்தது. இப்போது ஐந்து ஆண்டுகளாக மிகவும் மோசமான ஆட்சியை நடத்தியிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா போதை. அதனால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்களின் வாக்கு கிடைக்காது என்று தெரிந்துவிட்டது.

NDA கூட்டணி மாநாடு
NDA கூட்டணி மாநாடு

அதனால் அவர்களை சமாதானப்படுத்தவே கடைசி நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் தந்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் பணத்தை மட்டும் வைத்து அவர்களை ஏமாற்ற முடியாது என்பது தேர்தல் முடிவு வரும் நாளில் தெரிந்துவிடும்.

இன்னொரு பக்கம் பாரதிய ஜனதா கட்சி இப்போது தமிழ்நாட்டில் மிகவும் வளர்ந்திருக்கிறது. முந்தைய தலைவர் அண்ணாமலையும் சரி, இப்போதைய தலைவர் நயினார் நாகேந்திரனும் சரி — சரியான திசையில் கட்சியின் பயணத்திற்கான பாதையைக் காட்டியிருக்கிறார்கள். மேலும் மத்திய அரசு தமிழ்நாட்டிற்குச் செய்து வரும் பல நல்ல திட்டங்கள் இங்கு கிராமங்கள் வரை சென்றிருக்கின்றன. இது போதும் — வார்த்தைக்கு வார்த்தை ‘மாடல் அரசு’ என்று சொல்கிறார்களே, அந்த மாடலை உடைக்க.

மேலும் எங்கள் மற்ற கூட்டணிக் கட்சிகளும் தேர்தலில் அனுபவம் வாய்ந்த கட்சிகள். அதனால் பலவீனமாக இருக்கிறோம் என்பதில் உண்மையில்லை.”

“புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் ஓட்டுகளைப் பிரிப்பார் என்கிறார்களே?”

“திமுக ஓட்டுகளை நிச்சயம் பிரிப்பார்னு தோணுது. அதனால அவருடைய அரசியல் என்ட்ரியில் தேசிய ஜனநாய கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.”

Vijay

`விஜய் மனைவி சங்கீதா அவருக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியதில் அரசியல் பின்னணி இருக்கலாம் எனப் பேசப்படுகிறதே?’

“விஜய்யை ஒரு நடிகராக எனக்கும் பிடிக்கும். அவருடைய படங்கள் பலவற்றை நான் விரும்பி பார்த்திருக்கிறேன். அரசியல் களத்தில் நாங்களுமே அவரை எதிர்க்கிறோம்தான். ஆனா எந்தவொரு அரசியல்வாதியின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அரசியலுக்காகப் பொது வெளியில் விவாதிப்பதை நான் ஆதரிக்க‌ மாட்டேன்.” என்றார்.

Loading…

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *