புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயிலில் வடக்கு மாவட்ட தி.மு.க மருத்துவரணி அமைப்பாளர் முத்துக்கருப்பன் ஏற்பாட்டில் கோடைகால நீர்மோர் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்து பொதுமக்களுக்கு சர்பத், மோர், பலா, தர்பூசணி, வாழைப்பழம், இளநீர், திராட்சை உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருள்களை வழங்கினார். மேலும், இதில் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கப்பட்ட நிலையில் அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “இ.டி எதிர்ப்பு தெரிவித்தாலும் ஜனநாயக கடமை ஆற்றுவதற்கு ஒரு கட்சியின் தலைவர் என்கின்ற முறையில் டெல்லி முதல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உரிமை உண்டு. அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அவர். அதனால் அவர் தேர்தல் பணியாற்ற வேண்டியது அவசியம், டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அவரது தேர்தல் பணி அவசியமானது. அவரது கட்சிக்கு வலுவை சேர்க்கக்கூடியது. அதனால், உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தேர்தல் பணியாற்ற அனுமதித்துள்ளது வரவேற்கத்தக்கது. பிரதமர் மோடியின் பிரசாரம் ஒன்றே போதும். பா.ஜ.க தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் ஆத்திரத்தோடும், இந்தியா கூட்டணியின் மீது வெறுப்பை உருவாக்குகின்ற வகையிலும் அவர் பேசுகின்ற பேச்சு பா.ஜ.க செல்வாக்கை இழந்துவிட்டது என்பதற்கு எடுத்துக்காட்டு. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விட்டது என்பதற்கு எடுத்துக்காட்டு. உதாரணத்திற்கு குஜராத்தில்கூட பத்து இடங்களில்கூட பா.ஜ.க வெற்றி பெறுவது அரிதான ஒன்று என்ற தகவல் வந்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க கூட்டணி கட்சிகளில் தேர்தல் ஆணையமும் ஒன்று. தேர்தல் முடிந்த பிறகு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், அவர்கள் செய்த தவறுக்காக நடவடிக்கைகளை இந்தியா கூட்டணி நிச்சயம் எடுக்கும்.
ரகுபதி
சவுக்கு சங்கர் வீட்டிற்கு காவல்துறையினர் சென்றபோது உரிய சாட்சிகளுடன் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளதே தவிர, பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் தமிழ்நாடு அரசுக்கு கிடையாது. சட்டப் பல்கலைக்கழகத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான அழைப்புகள் தரப்படுகிறது. தகுதி அடிப்படையில், மதிப்பெண் அடிப்படையில் அவை வழங்கப்படுகிறது. எல்லா பிரிவுகளும் அங்கு இருக்கிறது. புதிய பாடப் பிரிவுகள் தேவைப்பட்டால் அதனை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க மிகப்பெரிய வெற்றி பெற்று மூன்று ஆண்டுகள் சாதனையுடன் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அதற்குரிய பரிசாக, நாடாளுமன்ற தேர்தல் முடிவில் 40-க்கு 40 வெற்றி வெற்றிபெறுவோம்.
எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்ற வேண்டும். அப்போதுதான் சரியான எதிர்க்கட்சியாக இருக்கும். அதை விட்டுவிட்டு வேறு விதமாக விமர்சனங்களில் அவர் இறங்குகின்ற போது அவரது பதவிக்கு ஆபத்து வந்துவிடும். அதனால், அவரது பிறந்தநாளில் அவரது பதவிக்கு ஆபத்து என்று சொல்வது அழகல்ல. யாராக இருந்தாலும் பல நாள் வாழ வேண்டும். அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. அதனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்லாண்டு காலம் வாழ தி.மு.க மனசாட்சியுடன் எப்போதும் வாழ்த்தும். நாங்கள் யாரையும் தூற்றுபவர்கள் கிடையாது. தேர்தலுக்குப் பிறகு என்னென்ன வருகிறது என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகு தெரியும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க செங்கோட்டையன் தலைமையில் செல்ல போகிறதா, வேலுமணி தலைமையில் செல்ல போகிறதா என்பது தெரியும். ஆனால், ஏற்கெனவே ஜெயக்குமார்கூட, ‘எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். அதற்கு செங்கோட்டையன் பொறுப்புக்கு வர வேண்டும்’ என்ற சொன்னதாக செய்திகள் பத்திரிகைகளிலேயே வந்துள்ளது. அதனால், அந்த கட்சியில் மிகப்பெரிய பிளவு உண்டாவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனை நாங்கள் செய்ய மாட்டோம். பாஜக செய்யும்” என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
“கெஜ்ரிவால் வீட்டில் அவரின் பி.ஏ-வால் தாக்கப்பட்டேன்..!” – ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால் புகார்
