முறுக்குக்கு பெயர்போன இந்த தொகுதி, திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளில் ஓன்று. மருங்காபுரி தொகுதியாக இருந்து வந்த இந்த இது, தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு கடந்த 2011 – ம் வருடம் நடைபெற்ற தேர்தலில் இருந்து மணப்பாறை தொகுதியாக பரிமளித்து வருகிறது.
மருங்காபுரி டு மணப்பாறை
மருங்காபுரி சட்டமன்ற தொகுதியாக இருந்தவரை பெரும்பாலும் தி.மு.க சார்பிலேயே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கடைசியாக, இந்த தொகுதியில் 2006 -ம் வருட தேர்தலில் தி.மு.க-வைச் சேர்ந்த சல்மா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதன்பிறகு, மணப்பாறை தொகுதியாக அது மாறிய பிறகு கடந்த 2011 – ம் வருடம் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும், கடந்த 2016 – ம் வருடம் நடைபெற்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த எம்.ஏ.முகமது நிசாமுக்கும் இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது.

அதேபோல், கடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அந்த கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது வேட்பாளராக களமிறக்கப்பட்டு, வெற்றிவாகை சூடினார். இப்படி, கடந்த மூன்று தேர்தல்களாக இந்த தொகுதி தி.மு.க கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டபோதே, மணப்பாறை தொகுதியில் உள்ள தி.மு.க புள்ளிகள், ‘மணப்பாறையை தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டும்’ என்று கடுமையாக போர்க்கொடி தூக்கி வந்தனர்.
ஆனாலும், தி.மு.க தலைமை மணப்பாறையை கூட்டணி கட்சிகளுக்கே தள்ளிவிட்டு, லோக்கல் உடன்பிறப்புகளுக்கு கடுக்காய் கொடுத்து வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே, ‘இந்தமுறை எப்படியும் தி.மு.க-வுக்கே மணப்பாறையை ஒதுக்க வைப்போம். அதற்காக, எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் இறங்கி கடுமையாக போராடுவோம். அப்படியும், கூட்டணி கட்சிக்கு ஒதுக்கினால், ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம்’ என்று மணப்பாறை தொகுதி உடன்பிறப்புகள் முஷ்டியை முறுக்கி வந்தனர்.
இந்நிலையில், ‘மறுபடியும் வரும் சட்டமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட இருக்கிறது, மறுபடியும் அப்துல் சமதுதான் வேட்பாளர்’ என்று தொகுதிக்குள் பேச்சு அடிபடுகிறது. இன்னொருபக்கம், ம.தி.மு.க திருச்சி எம்.பி துரை வைகோ மூலமாக, மாநில துணைப் பொது செயலாளர் மருத்துவர் ரொஹையா சேக் முஹம்மது, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோர் மணப்பாறை தொகுதியை கேட்டு, தீவிர முயற்சியில் இருப்பதாக சொல்கிறார்கள். அதேபோல், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் இருப்பது உறுதியானால், அந்த கட்சியிலும் இந்த தொகுதியை கேட்டு சிலர் காய்நகர்த்தி வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் ரமேஷ்குமார், தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ‘மிலிட்டரி’ முருகன் ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் முன்னணியில் இருக்கிறார்கள்.
ஆனால், ஆரம்பத்தில் ‘மணப்பாறை தொகுதியை தி.மு.க-வுக்கு பெற எந்த எல்லைக்கும் செலவோம்’ என்று சூளுரைத்து வந்த உடன்பிறப்புகள், தற்போது டீயில் முக்கிய பன் கணக்காக நமநமத்து போய் கிடக்கிறார்கள். ‘அதற்கு என்ன காரணம்?’ என்று விசாரித்தால், இரண்டு அமைச்சர்களுக்கிடையில் நிலவும் கோஷ்டி பூசல் தான் காரணம் என்கிறார்கள். அதுவும், இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் சமீபத்தில் ஏற்பட்ட குழாயடி சண்டை ரேஞ்சுக்கான ‘கமிஷன் சண்டை’, தி.மு.க-வின் கோஷ்டி பூசலை மக்கள் மத்தியில் சந்தி சிரிக்க வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.
இதுபற்றி, மணப்பாறை தொகுதி தி.மு.க உள்ளடி பஞ்சாயத்து பற்றி அக்கு வேறு ஆணி வேராக அறிந்த விபர புள்ளிகள் சிலர் நம்மிடம்,
“கடந்த 2006 – ம் வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மருங்காபுரி தொகுதியில் தி.மு.க சார்பில் நின்ற சல்மா, இரண்டாம் இடம் வந்தாலும் அவர் திருச்சி மாவட்ட அரசியலில் ஆளுமையாக வளரும் தோரணையோடு செயல்பட்டார். அதனால், கே.என்.நேரு அவருக்கு சீட் கிடைக்க விடக் கூடாது என்பதற்காக கடந்த 2011, 2016 – ம் வருடங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் மணப்பாறையை கூட்டணிக் கட்சிகளுக்கு கிடைக்க வைத்தார். கடந்த தேர்தலிலும் கூட்டணி கட்சிக்கே ஒதுக்கப்பட்டது.

அதன்பிறகு, தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிக்கப்பட்ட பிறகும், அவரது தெற்கு மாவட்ட எல்லைக்குள் வரும் மணப்பாறையில் தனது ஆதரவாளரை கே.என்.நேரு பொறுப்பில் போட்டு மூக்கை நுழைத்தார். மணப்பாறை கிழக்கு ஒன்றிய செயலாளராக ஆரோக்கியசாமியை நியமிக்க வைத்தார்.
இவரோ, கிராவல் மண் கடத்தல் விவகாரத்தில் டி.எஸ்.பி-யையே மிரட்டி கட்சிக்கு களங்கம் பிறப்பித்ததால் அவரை கட்சி தலைமை நீக்கி நடவடிக்கை எடுத்தாலும் கே.என்.நேரு அவரை மறுபடியும் பொறுப்புக்கு கொண்டு வந்தார். அதேபோல், சமீபத்தில் உடையாப்பட்டி என்ற பகுதியில் ஆரோக்கியசாமி கிராவல் மண் விவகாரத்தில் ஈடுபட்டபோது அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆதரவாளர்களான மணப்பாறை ஒன்றிய செயலாளர் ராமசாமி, நகர செயலாளர் செல்வம், மருங்காபுரி ஒன்றிய செயலாளர்கள், வையம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் என்று எட்டு பேர் சென்று, ‘கமிஷன்’ வராத கோபத்தில் ஆரோக்கியசாமியோடு சண்டையிட்டனர்.

ஒருகட்டத்தில் இருதரப்புக்கும் பொதுமக்கள் முன்பு கடுமையான சண்டையாக மாறியது. அந்த சண்டை மணப்பாறை நகராட்சி வரை தொடர்ந்து, அங்குள்ள காமராஜர் சிலை அருகிலும் பொதுமக்கள் முன்னிலையில் குழாயடி சண்டை ரேஞ்சுக்கு கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.
பொதுமக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு போன இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்ல, ‘தேர்தல் நேரத்தில் இது கட்சிக்கு கெட்ட பெயர்’ என்று கே.என்.நேருவும், அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் விவகாரத்தை பேசி முடித்துவிட்டனர். இதில், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆதரவாளரான மணப்பாறை ஒன்றிய செயலாளர் ராமசாமி தான், ஆரோக்கியசாமி ஆட்களால் கடுமையாக தாக்கப்பட்டார். அதற்கு முன்புவரை மணப்பாறை தொகுதியை தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டும் என்று கடுமையாக போர்க்கொடி தூக்கி வந்ததும் இந்த ராமசாமிதான். தி.மு.க சார்பில் அவருக்கு தான் சீட் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

ஆனால், சட்டவிரோத கிராவல் மண் கடத்திய விவகாரத்தில் இரு அமைச்சர்களின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் முன்பே தாக்கிக்கொண்டது, மணப்பாறை பகுதியில் தி.மு.க கட்சிக்கு கெட்டப் பெயரை உண்டாக்கியது. அதனால், மணப்பாறையை தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டும் என்ற அவர்களின் உறுதியான குரலின் சுருதி மெல்ல மெல்ல குறைந்து, தற்போது முற்றிலும் தீர்ந்தே போய்விட்டது. அதனால், இந்தமுறையும் மணப்பாறை தொகுதி, கூட்டணிக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றுக்கு செல்லவே அதிகம் வாய்ப்பு உண்டாகியுள்ளது” என்றார்கள்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


