Sorting by

×

“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்”

என்கிற வரிகளோடு ரஜினி வெளியிட்ட அறிக்கைக்கு பின்னால் பல்வேறு அரசியல் நகர்வுகள் சத்தமில்லாமல் நடந்துள்ளது. ஆதவ் அர்ஜூனா கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் ரஜினியை பற்றி விமர்சித்தது தான், அரசியல் விளையாட்டுக்கு மையப்புள்ளியாக மாறியுள்ளது.

த.வெ.க சார்பில் கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் அந்த கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசும் போதும் “ரஜினிகாந்த் அரசியலுக்கு வர நினைத்தார். ஆனால் திமுகவின் அழுத்தம் வந்ததால் பின்வாங்கினார். ஆனால் விஜய் அப்படி இல்லை” என்று பேசினார். இந்த பேச்சிற்கு ஆரம்பத்தில் ரஜினி ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

மற்றொருபுறம் தி.மு.க-வை சேர்ந்த தமிழக அமைச்சர்களும் இதே விவகாரத்தில் ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிராக கருத்து தெரிவித்தனர். 

ஆதவ் அர்ஜூனா
ஆதவ் அர்ஜூனா

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க இணையும் என்று கடந்த ஒருவாரமாக செய்திகள் கசிந்து வந்தது. ஆனால்,நேற்று காலை “வதந்திகளை நம்பவேண்டாம். பா.ஜ.க, உள்ளிட்ட யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தையை நாங்கள் நடத்தவில்லை” என்று அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார் த.வெ.க இணை பொதுச்செயலாளர் சி.டிஆர் நிர்மல் குமார்.

இதனால் த.வெ.க தனித்து நிற்கும் முடிவுக்கு வந்ததாக அடுத்து செய்திகள் வெளியானது. இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் வரிசையாக ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தனர். 

பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழக அரசியலின் வரலாறு  தெரியாமல் பேசுகிறார் ஆதவ் அர்ஜூனா. அவர் மீது விஜய் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று   கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடி பழனிசாமியும் அதே போல் கண்டனத்தை பதிவு செய்தார். ஒரே நாளில் அடுத்தடுத்து ஆதவ் அர்ஜூனா மீது கண்டனங்களை பதிவு செய்ததற்கு பின்னால் டெல்லி மேலிடம் இருப்பதாக செய்திகள் இப்போது கசிந்துள்ளது. 

இது குறித்து ரஜினிக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் பேசும் போது, “ விஜய் குறித்து எந்தவித எதிர்மறையான கருத்தையும் ரஜினி பேசியது கிடையாது. ஆனால் ஆதவ் அர்ஜூனா பேசியது ரஜினிக்கு வருத்ததை ஏற்படுத்தியது. பயந்து போனார் என்று சொல்வதை ரஜினி எப்போது ஏற்றுக் கொள்வதில்லை.

இந்த விவகாரத்தை அப்போது தனக்கு நெருக்கமான பா.ஜ.க டெல்லி பிரமுகர்களிடம் சொல்லி வருத்தப்பட்டார் ரஜினிகாந்த். விஜய்யுடன் கூட்டணி வரும் என்கிற நம்பிக்கையில் இந்த விவகாரத்தை கொஞ்சம் ஆறப்போட்டது டெல்லி. 

இப்போது விஜய்க்கு எதிராக தேர்தல் களத்தில் நிற்க போவதால், ரஜினி ரசிகர்களை தங்கள் பக்கம் கொண்டுவர பா.ஜ.க திட்டமிட்டது. நேற்று டெல்லியிலிருந்து வந்த உத்தரவுக்கு பிறகுதான், ரஜினிக்கு ஆதரவாக ஒரே நாளில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் எல்லாம் வரிசையாக அறிக்கை விட்டு ஆதவ் அர்ஜூனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்கள். அதோடு, ரஜினி ரசிகர்களையும் தங்களுக்கு ஆதரவாக ஒன்று சேர்க்கும் அரசியலை கையில் எடுத்துள்ளார்கள். 

ரஜினி
ரஜினி

ரஜினி இன்று வெளியிட்ட அறிக்கையிலும் “காலம் காத்திருந்து பதில் சொல்லும்“ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு வாரத்திற்கு முன்பாக பேசிய பேச்சுக்கு இப்போது கண்டனங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளது.

ஆதவ் அர்ஜூனாவிற்கான நெருக்கடி இனிதான் துவங்கும் என்பதை குறிப்பிடும் வகையில் தான், ரஜினி காலத்தை குறிப்பிட்டு சொல்லியுள்ளார். இந்த மொத்த ஆக்ஷனக்கும் பின்னால் பா.ஜ.க வின் ப்ளானே உள்ளது.தேர்தல் அரசியல் களத்தில் ரஜினியை வைத்து ஒரு ஆட்டத்தை ஆட பா.ஜ.்க முடிவெடுத்துள்ளது” என்கிறார்கள் விரிவாக.

த.வெ.க தரப்பிலும் திடீரென இந்த விவகாரம் வெடித்ததில் அப்செட்டாகியிருக்கிறார்கள். இதை எப்படி சரிகட்டுவது என்கிற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்கள். ரஜினி ரசிகர்களை தேர்தல் நேரத்தில் துாண்டிவிட்டு தங்களுக்கு எதிராக அரசியல் செய்ய வைக்கும் யுக்தியை பா.ஜ.க கையில் எடுத்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறாரகள் த.வெ.க-வினர். 

ஆதவ் அர்ஜூனாவை வைத்து அடுத்த அரசியலை ஆட ஆரம்பித்துவிட்டது டெல்லி தலைமை.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *