ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருப்பவர் சக்கரபாணி. தொகுதி முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் செய்து தொகுதியைத் தன் கண்டோரேலில் வைத்திருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் தரப்பில் இவருக்கு எதிராக ஒரு வலுவான வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலைதான் இருக்கிறது. ஆனால் இந்த முறை தமிழ் மாநில காங்கிரஸிற்கு இந்தத் தொகுதியை ஒதுக்கியிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது குறித்து அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, “ஒட்டன்சத்திரம் தொகுதியில் கடந்த முறை சக்கரபாணியை எதிர்த்து அதிமுக சார்பில் என்.பி.நடராஜன் வேட்பாளராக நின்றார். அந்தத் தேர்தலில் கிட்டதட்ட 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் சக்கரபாணி வெற்றி பெற்றார்.
கனிமவளங்கள் எடுப்பது தொடர்பான விஷயங்களில் சக்கரபாணியின் பெயர் அடிபடுவதால் அவர்மீது தொகுதியில் அதிருப்தி நிலவுகிறது. இதனை அதிமுக பயன்படுத்தி கொண்டு நல்ல வேட்பாளரைக் களமிறக்கினால் அவருக்கு டஃப் கொடுக்கலாம்.

ஆனால் இந்த முறை அதிமுக நேரடியாகக் களமிறங்கமல் தமிழ் மாநில காங்கிரஸிற்கு தொகுதியை ஒதுக்கியிருப்பது அதிமுகவினருக்கே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
பழனி, ஒட்டன்சத்திரம் தொகுதியில் கவுண்டர் சமூக வாக்குகள் அதிகம். அதனால் பழனியை தனி மாவட்டமாக்கி மேற்கு மாவட்டங்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி நீண்டகாலமாகவே முயன்று வருகிறார்.
அதோடு அமைச்சர் ஐ.பெரியசாமியைத் தாண்டி தன்னால் ஆதிக்கம் செலுத்தமுடியவில்லை என்பதால் பழனியை தனி மாவட்டமாகப் பிரித்து தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டுமென கணக்கு போடுகிறார் அமைச்சர் சக்கராணி.
இந்த முறை அமைச்சர் சக்கரபாணி வெற்றி பெற்றால் ஒரே தொகுதியில் தோல்வியே பெறாமல் தொடர்ந்து ஏழு முறை வெற்றி பெற்றவர் என்ற பெயர் கிடைக்கும். இதற்கு பரிசாக பழனியைத் தனி மாவட்டமாக்கி தன்னுடைய கட்டுபாட்டில் தர வேண்டுமென என தலைமையிடம் கேட்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதனால் இந்த முறை தன்னுடைய வெற்றிக்கு எந்தச் சிக்கலும் வரக்கூடாது என்பதாலேயே அதிமுக தரப்பில் தனக்கு நெருக்கமாக இருக்கும் மேற்கு மாவட்ட அதிமுக புள்ளியிடம் பேசி தொகுதியில் அதிமுக தரப்பில் வேட்பாளரை நிறுத்தாமல் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி வைத்திருக்கலாம்” என்கின்றனர் விரிவாக.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
