Sorting by

×

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வேம்பையாபுரத்தில் ஆட்டைக் கடித்து இழுத்துச் சென்ற சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், பாபநாசம் வனச்சரகத்துக்குள்பட்ட மலையடிவாரக் கிராமம் வேம்பையாபுரம். வெள்ளிக்கிழமை இரவு வேம்பையாபுரம் ஊருக்குள் வந்த சிறுத்தை, ஐயப்பன் என்பவா் வீட்டில் வளா்த்து வந்த ஆட்டை தாக்கியுள்ளது. சப்தம் கேட்டு சென்று பாா்த்தபோது ஆட்டை விட்டுவிட்டு அங்கு நின்ற நாயை தூக்கிச் சென்றது. அங்கு நின்ற நாயை தூக்கிச் சென்று வனப்பகுதியில் ஆட்டின், இரைப்பை உறுப்புகளை உண்டுவிட்டு எச்சத்தைப் போட்டுச் சென்றது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநர் இளையராஜா உத்தரவின் பேரில் பாபநாசம் வனச்சரகா் சத்யவேல் தலைமையில் வனத்துறையினா் வந்துபாா்வையிட்டனா். வனத்துறையினர் அனவன்குடியிருப்பு, வேம்பையாபுரம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தையும், அகஸ்தியா்பட்டி, பசுக்கிடைவிளை பகுதிகளில் கரடி நடமாட்டத்தையும் கூண்டு வைத்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வேம்பையாபுரம் பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி அந்த பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த 5 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்று வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கூண்டில் சிக்கிய சிறுத்தையை வனத்துறை கால்நடை மருத்துவக் குழுவினர் சோதனை செய்தபின் மணிமுத்தாறு வனப்பகுதியில் விடுவதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.

சிறுத்தை நடமாட்டத்தால் அச்சத்தில் இருந்த வேம்பையாபுரம், திருப்பதியாபுரம் பகுதி மக்கள் சிறுத்தை பிடிபட்டதையடுத்து நிம்மதியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *