கேரள மாநிலத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. திருவல்லாவிலும், திருவனந்தபுரத்திலும் பிரசாரம் மேற்கொண்டடார். திருவனந்தபுரத்தில் ரோடு ஷோ-வில் பங்கெடுத்தார். பிரசாரத்தின்போது பிரதமர் மோடி பேசுகையில், “இன்று நம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டுக்கு செல்லும் நிலை உள்ளது. கேரளாவில் வேலைவாய்ப்பை உருவாக்க தொழிற்சாலைகள் ஏற்படுத்தாமல் உள்ளனர். அதற்கு மாநில ஆட்சியாளர்களின் ஊழல்தான் காரணம். ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இடது முன்னணியையும், வலது முன்னணியையும் நீங்கள் தோற்கடிக்க வேண்டும். வளைகுடா நாடுகள் இந்தியாவை எதிரி நாடாக கருதி இந்தியர்களை வெளியேற்ற வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகிறார்கள். அதற்காகத்தான் வளைகுடா நாட்டின் தலைவர்களை கோபப்படுத்தும் வகையில் வேண்டும் என்றே பேசுகிறார்கள். அப்படி விமர்சிப்பதால் மோடியை விமர்சிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள். இடதுசாரி மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம் நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன், தேர்தல் வரும், போகும் மக்களின் பாதுகாப்புதான் முக்கியம். மக்களை பாதுகாக்க நான் உறுதிபூண்டுள்ளேன். கேரளத்தின் அனைத்து மக்களையும் மோடி அரசு பாதுகாக்கும். இன்று தேர்தலில் வெற்றிபெறுவதற்காக, மோடியை விமர்சிப்பதற்காக ஒரு கோடிக்கும் மேலான வெளிநாடுவாழும் இந்தியர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள்.

கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கோவா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மீன்பிடித்தொழிலாளர்கள் இரான் நாட்டில் உயிருக்கு ஆபத்தான ஒரு நிலை ஏற்பட்டது. அங்கு ஆபத்தில் சிக்கியிருந்த மீனவர்களை மீட்க பெரிய முயற்சிகளை மேற்கொண்ட மத்திய அரசுக்கு, அவர்களை உயிருடன் திரும்ப கொண்டுவருவதுதான் முதன்மையான லட்சியமாக இருந்தது. நான் காங்கிரஸ் தலைவர்களிடம் சொல்லுகிறேன், நமக்கு பிரசாரம் செய்ய இனியும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் நம் சகோதரர்களை திரும்ப கொண்டுவரவேண்டும். ஆனால், காங்கிரஸுக்கு தேர்தல் என்ற சிந்தனை மட்டுமே உள்ளது. அரசியலின் பெயரில் மக்களை பலிகடாவாக்கும் காங்கிரஸ் கேரள மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

போர் சூழலில் கேரள மக்களின் அச்சம் என்னவென்று எனக்குத் தெரியும். வளைகுடா நாடுகளின் தலைவர்களிடம் நான் தொடர்புகொண்டு பேசிக்கொண்டிருக்கிறேன். உங்கள் குடும்பத்தினரும், உறவினர்களும் வளைகுடா நாட்டில் தனியாக இல்லை. அவர்களுடன் இந்திய அரசு உள்ளது. இந்த போருக்கு மத்தியிலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய அரசு செய்துவருகிறது. சபரிமலையின் புனிதத்தை கெடுக்க முயற்சி நடந்தது. கொள்ளை நடந்தது கம்யூனிஸ்ட் ஆட்சியில். ஆனால், கொள்ளையர்களின் தொடர்பு காங்கிரஸ் வரை நீளுகிறது. இந்து நம்பிக்கைகளை தகர்க்க முயல்பவர்கள்தான் இடதுசாரிகள். அதனால்தான் சபரிமலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றாமல் உள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் இந்துக்களுக்கு ஆதரவாக இருப்பது போன்று நடிக்கிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இந்த இரண்டு தரப்புக்கும் தண்டனை வாங்கிக்கொடுப்போம். சுவாமி ஐயப்பன் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்களின் கோபத்தில் இருந்து அவர்கள் தப்பிக்க முடியாது” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
