Sorting by

×

கடந்த 2020 ஜூன் 19 ல் சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ்ஸை  காவல்துறை விசாரணைக்காக அழைத்து சென்று தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர்,  சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்களான முருகன், சாமத்துரை, காவலர்களான முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 9 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் 5 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இந்த காவல் மரண வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.

கடந்த மார்ச் 23 ஆம் தேதி இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள  9 காவலர்களும் குற்றவாளிகளாக கருதப்படுவதாக மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பளித்ததோடு தண்டனை விவரங்கள் மார்ச் 30 ஆம் தேதி தெரிவிக்கப்படும் என்றார். இதனிடையே 30 ஆம் தேதி தொடர்ந்து இரு தரப்பினரின் இறுதி வாதங்களையும், கேட்ட நீதிபதி 6 ஆம் தேதி தண்டனை அறிவிப்பை ஒத்தி வைத்திருந்தார்.

இன்று வழக்கின் தண்டனை விவரங்களை வாசித்த நீதிபதி முத்துகுமரன், “ எங்கு அதிகாரம்  உள்ளதோ அங்கு பொறுப்பும் அதிகமுள்ளது.  அதன் கொடூரம் கருதியே மதுரை அமர்வு நேரடியாக கண்காணித்துள்ளது. இல்லையெனில், அவர்கள் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு உண்மை அடக்கம் செய்யப்பட்டிருக்கும்.

இருவரும் நிராயுதபாணியாக இருந்த போதும், இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர். இருவரும் வியாபாரிகள், சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள். அவர்கள் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்றே தெரிகிறது. இது அரிதினும் அரிதான வழக்கு.

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 9 பேர்

சிபிஐ அறிக்கையில் காவல் நிலைய மரணங்கள் கொடூரமானது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு கடுமையான தண்டனை கொடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த வழக்கிற்கு ஆயுள் தண்டனை விதிப்பதா? அல்லது மரண தண்டனை விதிப்பதா? என கேள்வி எழுந்துள்ளது. ஆயுள் தண்டனை விதிப்பது என்றால் அரிதினும் அரிதான வழக்கு , குற்றத்தின் தன்மை, குற்றவாளிகள் திருந்த வாய்ப்பே இல்லை எனும் போது கொடுக்கலாமென  உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

குற்றத்தின் தன்மை இரவு முழுவதும் அடித்து சித்ரவதை கொலை செய்துள்ளனர். குற்றத்தின் நோக்கம், காவல்துறையினரை ஏசியதால் தாக்கியதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. தன்னுடைய தந்தையை அனுமதியின்றி காவல்நிலையத்தில் வைத்துள்ளதை ஜெயராஜ் தட்டி கேட்டுள்ளார் அதற்காகவே இருவரும் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சமூகம் ஒரு குற்றத்தை கொடூரமாக பார்க்கும் போது நீதிமன்றம் அதை நியாயப்படுத்த முடியாது.  குற்றவாளிகள் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருப்பதால் மனநிலை பிரச்சனையும் இருக்க வாய்ப்பில்லை. எதிரிகள் படிக்காதவர்களும் அல்ல. எதிரிகள் அரசு வேலை செய்து மக்கள் சம்பளத்தில் மக்களுக்கு வேலை செய்ய வேண்டியவர்கள்.  ஸ்காட்டுலாந்திற்கு இணையான காவல்துறை என சொல்கிறார்கள் அந்த  காவல்துறைக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை விதித்தால், நீதிமன்றம் என்ன செய்யும் ஆயுள் தண்டனை தானே விதிக்கும் என ஏளனமாக நினைப்பார்கள், அச்சம் என்பது உண்மையான அச்சமாக இருக்க வேண்டும்.

சாத்தான்குளம் குடும்பத்தினர்
சாத்தான்குளம் குடும்பத்தினர்

இருவரும் நீராயுதபாணியாக இருந்துள்ளனர். இந்த குற்றத்தை செய்ய இன்னொருவர் அச்சப்பட  வேண்டும். இருவரின் இறப்பு சமூகத்தின் மனசாட்சியை உலுக்குவதாக உள்ளது. ஆயுள் தண்டனை விதிப்பது போதுமானதாக இருக்காது என இந்த நீதிமன்றம் கருதுகிறது. கொடூரமான குற்றங்களை தடுக்க உச்சபட்ச தண்டனை வழங்குவது சரி “என்றார் தொடர்ந்து 1 கோடியே 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தோடு 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *