Sorting by

×

இந்திய அரசியலில் அரிதான நிகழ்வு: `சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்’ – வரலாறு சொல்லும் கதை!

2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம், முன்னாள் இந்திய ராணுவத் தளபதி நரவானே புத்தகத்தின் சம்பவம், எப்ஸ்டீன் பைல் என ஆளும் அரசிடம் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பத் திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், நரவானே புத்தகம் குறித்து ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றும்போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ராகுல் காந்திப் பேச்சை இடைமறித்து, அவரைப் பேச அனுமதிப்பதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக எட்டு காங்கிரஸ் எம்.பி.க்களையும் இடைநீக்கம் செய்தார். பிப்ரவரி 4-ம் தேதி, சில காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள், அவையில் பிரதமரின் இருக்கைக்கு சென்று முற்றுகையிட்டனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்த விவகாரம் குறித்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, “பிரதமர் மோடியை தாக்கும் திட்டம் இருப்பதாக நம்பத் தகுந்த செய்தி வந்தது. அதனால் பிரதமர் மோடியை அவைக்கு வரவேண்டாம் எனக் கூறிவிட்டேன்” எனத் தெரிவித்திருந்தார். இதுவும் அரசியல் அரங்கில் விவாதமானது.

அதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை காங்கிரஸைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் குழு, `நாங்கள் இந்தக் கடிதத்தை ஆழ்ந்த வேதனையுடனும், அரசியலமைப்பு பொறுப்புணர்வுடனும் எழுதுகிறோம். மக்களவையின் மாண்புமிகு சபாநாயகராக, எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஆளும் கட்சியால் பொய்யான, ஆதாரமற்ற மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளைச் சுமத்த நிர்பந்திக்கப்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.” எனக் கடிதம் ஒன்றை எழுதியது.

இதற்கு எதிராக பா.ஜ.க-வின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுதிய கடிதத்தில் “காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வரம்புகளை மீறி,பிரதமரின் இருக்கையைச் சுற்றி வளைத்தனர். பிப்ரவரி 4 அன்று சபாநாயகரின் அறையை ஆக்ரோஷமாக அணுகியதும் வரம்புமீறலாகவே இருந்தது. எனவே, காங்கிரஸ் எம்.பி-கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருந்தது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மேலும், பிப்ரவரி 4 அன்று மக்களவையில் ஏற்பட்ட மோதலின் வீடியோவையும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சமூக ஊடகங்களில் பகிர்ந்து, “பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதிர்ச்சியையும் நிதானத்தையும் காட்டினர். இல்லையெனில் இது அவையை முழுமையான குழப்பத்திற்கு இட்டுச் சென்றிருக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான், “இந்திய அரசியலமைப்பின் பிரிவு 94(c)-ன் விதிகளின்படி, காங்கிரஸ் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான மனுவைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில், “பட்ஜெட் கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச நேரம் மறுப்பது, எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, பா.ஜ.க எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நடவடிக்கை எடுக்காதது, காங்கிரஸின் பெண் எம்.பி.க்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது போன்றவை சபாநாயகர் வெளிப்படையாக ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதற்கான சான்றாகும்.” எனக் குறிப்பிட்டடு 120 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட காங்கிரஸின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

அரசியலமைப்பில், பிரிவு 94(C) மக்களவை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழியும் நடைமுறையைப் பற்றி பேசுகிறது. “மக்களவையின் சபாநாயகர் அல்லது துணை சபாநாயகராக பதவி வகிக்கும் உறுப்பினர், அப்போதைய அனைத்து உறுப்பினர்களின் பெரும்பான்மையினரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் அவரது பதவியில் இருந்து நீக்கப்படலாம்” என்று அரசியலமைப்பு கூறுகிறது.

மக்களவையில் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின்படி, சபையின் எந்தவொரு உறுப்பினரும் சபாநாயகரை நீக்கக் கோரலாம். உறுப்பினர் தீர்மானத்தின் முழு உரையுடன் எழுத்துப்பூர்வ அறிவிப்பை அவையின் பொதுச் செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அறிவிப்பு பெறப்பட்டதும், தீர்மானத்தை முன்மொழிய அனுமதி கோரும் ஒரு தீர்மானம், அறிவிப்பைச் சமர்ப்பித்த உறுப்பினரின் பெயரில் அலுவல் பட்டியலில் உள்ளிடப்படும். சபாநாயகர் தனது பதவி நீக்கத்திற்கான தீர்மானம் எடுக்கப்படும்போது சபைக்கு தலைமை தாங்க முடியாது. அதனால், இந்த தீர்மானத்தை எடுத்துக்கொள்வதற்கான தேதியை துணை சபாநாயகர் நிர்ணயிப்பார்.

ஓம் பிரகாஷ் பிர்லா
ஓம் பிரகாஷ் பிர்லா

அதன் பின்னர் அந்தத் தீர்மானத்தை சபையின் முன் வைத்து, அதை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டுமா? எனக் கேட்கப்படும். தீர்மானம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, குறைந்தது 50 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக எழுந்து நிற்க வேண்டும். இந்த வரம்பு நிறைவேற்றப்படாவிட்டால், தீர்மானம் தோல்வியடையும். தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது வாக்கெடுப்புக்கு விடப்படும். குரல் வாக்கெடுப்பு, வாக்குப் பிரிவு அல்லது பிற பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்படலாம்.

120 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையொப்பமிட்ட பிறகும், இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது சபையின் துணை சபாநாயகரைப் பொறுத்தது. ஒரு தீர்மானம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்க, அது விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். குற்றச்சாட்டுகளை தெளிவாகவும் துல்லியமாகவும் குறிப்பிட்டிருக்க வேண்டும். தீர்மானத்தில் வாதங்கள், அனுமானங்கள், முரண்பாடான தகவல்கள், அவதூறு அறிக்கைகள் இருக்கக்கூடாது. இந்த ஆய்வுகளுக்குப் பிறகு தீர்மானம் வாக்கெடுப்புக்கு கொண்டுவரப்படும்.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி

தற்போது நடந்துவரும் 18-வது மக்களவையில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களுடன் பெரும்பான்மையாக இருக்கிறது. இந்திய கூட்டணி 238 இடங்களைக் கொண்டுள்ளது. எனவே, தீர்மானம் நிறைவேறுவது கடினம். என்றாலும், இந்த தீர்மானம் அவையில் விவாதிக்கப்பட்டால், எதிர்க்கட்சிகள் சபாநாயகர் ஓம் பிர்லா மீதான குற்றச்சாட்டுகளை மக்கள் முன் பதிவு செய்ய ஒரு வாய்ப்பாக அமையும் என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

நாடாளுமன்றத்தின் உயரிய பதவியில் இருக்கும் சபாநாயகர் அல்லது மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது என்பது அரிதான நிகழ்வாகும்.

இத்தகைய தீர்மானங்கள் பெரும்பாலும் அவர்களைப் பதவியில் இருந்து நீக்குவதை விட, அவர்களின் தார்மீக அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தவே எதிர்க்கட்சிகளால் பயன்படுத்தப்படுகின்றன. சுதந்திர இந்திய வரலாற்றில் மக்களவைத் தலைவர் மீது 4 முறையும், மாநிலங்களவைத் தலைவர் மீது ஒரு முறையும் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

1954: ஜி.வி. மாவ்லங்கர்

சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவை சபாநாயகரான ஜி.வி. மாவ்லங்கருக்கு எதிராகவே முதல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. `விவாதத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் போதுமான நேரம் வழங்கவில்லை’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், சபாநாயகர் பாரபட்சமாகச் செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டி, எம்.பி. விக்னேஷ்வர் மிஸ்ரா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இருப்பினும், இது சபையில் போதிய ஆதரவின்றித் தோற்றது.

ஜி.வி. மாவ்லங்கர்
ஜி.வி. மாவ்லங்கர்

1966: சர்தார் ஹுக்கும் சிங்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் சபாநாயகராக இருந்த பால ராம் ஜாகருக்கு எதிராக 1987-ல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. எதிர்க்கட்சிகள் எழுப்பிய முக்கியமான பிரச்சினைகளுக்குச் சபையில் போதிய இடமளிக்கவில்லை என்றும், ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. எம்.பி மது லிமாயே இந்த தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அப்போதைய துணை சபாநாயகர் எஸ்.வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் முன்னிலையில் இந்த விவாதம் நடைபெற்றது. ஆனால் இறுதியாகத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

1987: பால்ராம் ஜாகர்

சிபிஎம் (CPM) எம்பி சோம்நாத் சட்டர்ஜி, சபாநாயகர் பால்ராம் ஜாகர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாகவும், நடைமுறை ரீதியான பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டினார். அப்போது ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு இருந்தது. எதிர்க்கட்சிகள் (குறிப்பாக இடதுசாரிகள்) அரசு மீது கடுமையான விமர்சனங்கள் வைத்தன. துணை சபாநாயகர் தம்பி துரை தலைமையில் விவாதம் நடந்தது. ஆனால் அரசின் பெரும்பான்மை காரணமாக இந்தத் தீர்மானமும் தோல்வியடைந்தது.

ஜக்தீப் தன்கர்
ஜக்தீப் தன்கர்

2024: ஜக்தீப் தன்கர்

2024 டிசம்பர் 10 அன்று 60 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, மாநிலங்களவைத் தலைவரும், துணைக் குடியரசுத் தலைவருமான ஜக்தீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால், இந்தத் தீர்மானம் முறையாக வரையப்படவில்லை என்றும், அவைத் தலைவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவசரமாகக் கொண்டுவரப்பட்டது என்றும் கூறி, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நிராகரித்தார்.

இப்போது ஓம் பிர்லா மீது கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஐந்தாவது தீர்மானமாகும்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *