இந்தோனேசியாவில் அமைந்துள்ள சுமத்ரா தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உருக்குலைந்து போயுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று (மே. 11) இரவு முதல் சுமத்ரா தீவில் கனமழை விடாது கொட்டித் தீர்த்தது. இதனால் எற்றபட்ட வெள்ளப்பெருக்கில் சுமத்ரா தீவின் அகேம், டனா டட்டார் மாவட்டங்கள் மிகக் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள டனா டட்டார்
ஒருபுறம் மழையால் ஏற்பட்ட வெள்ளம் பாதிபை உண்டாக்க, மறுபுறம் எரிமலையிலிருந்து வெளியாகும் லஹர் சுமத்ரா தீவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொதிக்கும் நீர், எரிமலை சாம்பல், பாறை துண்டுகள் என இவையனைத்தும் ஒன்றாகக் கலந்த கலவையே லஹர் என்றழைக்கப்படுகிறது. எரிமலையில் வெடிப்புக்கு பின் வெளிவரும் இந்த லஹர் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. கான்கிரீட் கலவை போல காட்சியளிக்கும் இந்த லஹர் பாய்ந்தோடும் வழியில் உள்ள கட்டடங்களையும், வாகனங்களையும் பொசுக்கும் ஆற்றல் வாய்ந்தது.
இந்தோனேசியாவில் அமைந்துள்ள 120 எரிமலைகளில் மவுண்ட் மராப்பியும் ஒன்று. சுமத்ரா தீவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 9,465 அடி உயர இந்த எரிமலை கடந்த ஆண்டின் இறுதியில் திடீரென ஏற்பட்ட வெடிப்பால், அங்கே மலையேறிக் கொண்டிருந்த 23 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், தற்போது பெய்த கனமழையால், மவுண்ட் மராப்பி எரிமலை அடிவாரப் பகுதிகளில் உள்ள சாலைகள் அடர்த்தியான சேறு மற்றும் எரிமலை சாம்பல் கலவையால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
அதில் 200க்கும் மேற்பட்ட வீடுகளும், 16 பாலங்களும் பலத்த சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது கருஞ்சாம்பல் சூழ்ந்து காட்சியளிக்கும் சுமத்ரா தீவின் பெரும்பாலான பகுதிகளில் ஆங்காங்கே புதையுண்ட மனிதர்களின் சடலங்கள் தோண்டி கண்டெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அகேம்
கடந்த 2 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் சுமத்ரா தீவில் 21 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
