Sorting by

×

இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ம் நாள் தொடங்கிய குண்டுத் தாக்குதல், சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலான பிராந்தியச் சேதத்தையும், உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு அதிர்ச்சியையும், ஏற்றுக்கொள்ள முடியாத சிவிலியன் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

இரானை கற்காலத்துக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு அமெரிக்கத் தாக்குதல் இருக்கும் என்று கடந்த வாரம் சமூக ஊடகத்தில் பதிவிட்ட அதிபர் டிரம்ப், இரானுக்கு எதிராக தனது சமூக ஊடக மிரட்டல்களை அதிகரித்தார். சில நாட்களுக்குப் பின், ஹோர்மூஸ் நீரிணையை இரான் உடனடியாகத் திறக்க வேண்டுமென்று பதிவிட்ட டிரம்ப், இரானை தகாத வார்த்தைகளால் ஏசினார். கடைசியாக, திங்கட்கிழமை இரான் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க 48 மணி நேரக் கெடுவிதித்து, இரான் பணிய மறுத்தால், இரானிய நாகரீகமே அழிக்கப்படும் என்று மிரட்டி உலகைக் கதி கலங்க வைத்து, கடைசியில் ‘எதிர்-உச்சகட்ட காட்சி’யாக (anti climax) இரு வார போர் நிறுத்தத்தை அறிவித்திருக்கிறார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே, பாகிஸ்தான் “தொடர்பாளராக” இருந்து அல்லது “ மத்யஸ்தராக” இருந்து நடத்திய மறைமுக பேச்சுவார்த்தைகளில் கடைசி நிமிட உடன்பாடு ஏற்பட்டு இந்த இருவார போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை இரானும் உறுதி செய்திருக்கிறது. போர் நிறுத்தத்தின் மிக முக்கிய அம்சங்கள் – ஹோர்மூஸ் நீரிணை உடனடியாக திறக்கப்படும் என்பதும், அதே சமயத்தில். நிரந்தர அமைதிக்கான பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையாக இரானின் 10 நிபந்தனைகள் கொண்ட பிரேரணைகள்தான் அமையும் என்பது குறிப்பிடத்தக்க விஷயங்கள்.

நிறைவேறினவா அமெரிக்க நோக்கங்கள்?

ஆனால் குண்டுத் தாக்குதலை தொடங்கிய போது டிரம்ப் இந்தப் போரின் நோக்கங்களாக அறிவித்த முக்கிய நோக்கங்கள் எதுவும் நிறைவேறினவா என்பது கேள்விக்குறிதான்.

இரான் அணு சக்தித் திட்டம், அதற்கு அணு ஆயுத வல்லமை தரக்கூடிய நிலையை தடுப்பது, இரானின் ஏவுகணை வல்லமையை அழிப்பது, அதன் பிராந்தியக் கூட்டாளிகளை (ஹெஸ்பொல்லா, ஹூத்தி குழு, ஹமாஸ் போன்றவை) ஒழிப்பது, இரானின் கடற்படையை முற்றிலும் அழிப்பது, இரானின் தலைமையை முடிந்தால் மாற்றுவது போன்றவை டிரம்ப் இந்தத் தாக்குதலுக்கு முக்கிய நோக்கங்களாக அறிவித்தவை.

இவைகளில் இரானின் கடற்படை அழிப்பு பற்றிய ஒரு நோக்கம்தான் ஓரளவு நிறைவேறியிருப்பதாக பல செய்திகள் கூறுகின்றன.

அதில் கூட, இரான் சிறு படகுகளை வைத்துக்கொண்டே ஹோர்மூஸ் நீரிணையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து இந்தத் தாக்குதலை சமாளித்திருக்கிறது.

ஹோர்மூஸ் நீரிணை வரைபடம்
ஹோர்மூஸ் நீரிணை வரைபடம்

இரானின் அதியுயர் தலைவர் அயோதுல்லா கமேனியை குண்டுத்தாக்குதலின் முதல் நாளிலேயே அமெரிக்கா கொன்றது , வெனிசுவேலாவில் நடந்தது போல , உடனடியாக அமெரிக்காவுக்கு சாதகமான ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட வழிவகை செய்யும் என்ற அமெரிக்க-இஸ்ரேலிய நம்பிக்கைகள் பலிக்கவில்லை. இரானின் இஸ்லாமிய அரசு கமேனியின் மகனை அடுத்த தலைவராக அறிவித்ததுடன், அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலடியும் கொடுக்கத் தொடங்கியது.

`சுற்றுலா’ அல்ல சுழல்

இரானிய ஏவுகணைகளில் சுமார் 80 சதவீதம் அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்காவின் பெண்டகன் ( பாதுகாப்பு அமைச்சகம்) கூறினாலும், இன்னும் இரானின் ஏவுகணைத் திறன் முற்றிலும் அழிந்துவிட்டதற்கான தடயம் ஏதும் இல்லை.

ஆனால் செவ்வாய்க்கிழமை போர் நிறுத்தத்தை அறிவித்த டிரம்ப், இரான் மீதான தாக்குதல் குறித்த அமெரிக்காவின் ராணுவ நோக்கங்கள் எல்லாமே நிறைவேறிவிட்டன என்று கூறிக்கொண்டிருக்கிறார்.

ஒரு நாகரிகத்தையே அழித்துவிடுவேன் என்று கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்திவிட்டு, 48 மணி நேரத்தில் போர் நிறுத்தத்துக்கு டிரம்ப் ஒப்புக்கொண்டதற்குக் காரணங்கள் என்ன ?

தாக்குதலை தொடங்கிய ஒரு சில நாட்களில் இந்தப் போரை ஒரு சிறிய சுற்றுலா போவதைப் போன்றதுதான் என்று டிரம்ப் வர்ணித்திருந்தார்.

ஆனால் இந்தத் தாக்குதல் டிரம்ப் சொன்னதைப் போல அவ்வளவு எளிதாக இல்லை.

ராணுவத் தாக்குதலை முறியடித்த பொருளாதாரத் தாக்குதல்

பல தசாப்தங்களாக அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் மற்றும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த 12 நாள் போரால் பலவீனமடைந்ததாகக் கருதப்பட்ட இரான், அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு ராணுவ பலத்தை எதிர்கொண்டு முடிந்த அளவுக்கு திருப்பியும் கொடுத்தது போரின் போக்கை மாற்றியது.

இஸ்ரேலின் ஏவுகணைக் கவசத்தை பல முறை ஊடுருவி இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் குறிப்பிடத்தக்க சேதம் விளைந்தது.

இஸ்ரேல் மீது தாக்குதலோடு நிற்காமல் இரான், தனது பதிலடித் தாக்குதல்களை, அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளான சௌதி அரேபிய, பஹ்ரெய்ன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், குவைத், கத்தார் போன்ற மற்ற வளைகுடா பகுதி நாடுகள் மீதும் நடத்தி இதை ஒரு பிராந்தியப் போராக மாற்றியது.

அமெரிக்கா - இரான்
அமெரிக்கா – இரான்

குறிப்பாக வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் படைத் தளங்கள் மீது நடத்தப்பட்ட இரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் அமெரிக்கா எதிர்பாராதது.

ராணுவ நிலைகள் மீது தாக்குதல்களொடு நிற்காமல், வளைகுடா நாடுகள் மீது பொருளாதார ரீதியில் தாக்குதலையும் நடத்த முடியும் என்பதை இரான் நிரூபித்தது. கத்தாரின் மிகப்பெரிய எரிவாயு களத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு உதாரணம்.

இதைத் தவிர, உலக நாடுகளின் எண்ணெய்த் தேவைகளில் சுமார் 20 சதவீதம் இரானை ஒட்டியுள்ள கடற்பகுதியான , ஹோர்மூஸ் நீரிணை வழியாகத்தான் கப்பல்கள் மூலம் செல்கிறது என்ற யதார்த்தத்தை இரான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, அந்த நீரிணையின் வழியாக சரக்குக் கப்பல் போக்குவரத்தை முற்றிலும் நிலைகுலையச் செய்தது.

கடற்படைக் கப்பல்கள் பெரும்பகுதி அழிக்கப்பட்ட நிலையிலும், இரானின் சிறு படகுகளும், ஆளில்லா விமானங்களும், கடற்கரையிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளும், எண்ணெய்க் கப்பல்கள் போக்குவரத்தை ஸ்தம்பிக்கவைத்து, உலகின் எண்ணெய்ச் சந்தையில் பேரல் ஒன்றுக்கு 70 டாலர் அல்லது 80 டாலர் என்று விற்றுக்கொண்டிருந்த கச்சா எண்ணெயை பேரலுக்கு 100 டாலருக்கு மேல் உயர்த்தி, உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. போர் முடிவதற்குள் கச்சா எண்ணெய் பேரலுக்கு 200 டாலரை எட்டும் என்று இரான் எச்சரித்தது.

உள்நாட்டு அரசியலும் டிரம்ப் பின் வாங்க காரணமா?

இந்த பொருளாதாரத் தாக்குதல்தான், ராணுவ ரீதியில் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவும் சமபலமற்ற இரானின் கை இந்தப் போரில் ஓங்கியதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. பைபிளின் பழைய ஏற்பாடு ( Old Testament) கதையில் வரும் பலசாலி கோலையாத்தை சிறுவன் டேவிட் வீழ்த்திய கதையை பலரும் நினைவு படுத்துகிறார்கள்.

அமெரிக்காவில் ஏற்கனவே டிரம்ப்பின் இந்தப் போர், அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், ஒட்டு மொத்த அமெரிக்க வாக்காளர்கள் மத்தியில் டிரம்ப்பின் மதிப்பு சரியத் தொடங்கியது.

இந்த ஆண்டு பின்னர் அமெரிக்காவின் இரு அவைகளிலும் காலியாகும் பல இடங்களுக்குத் தேர்தல்கள் நடக்கவுள்ள சூழ்நிலையில், எண்ணெய் விலை உயர்வு, எரிவாயு விலை அதிகரிப்பு போன்றவை டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு தேர்தலில் நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற அச்சமும் , இந்தப் போரில் இருந்து எப்படியாவது வெளியே வந்தால் போதும் என்று டிரம்ப் விரும்பியதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது.

தொடர் தோல்வியில் ட்ரம்ப்
தொடர் தோல்வியில் ட்ரம்ப்

ஆனால் போரில் இருந்து வெற்றி பெறாமல் வெளியேறினால் அது டிரம்ப்புக்கு பெருத்த அரசியல் தோல்வியாகப் பார்க்கப்படும்.

எனவேதான், பேச்சுவார்த்தை என்ற தப்பிக்கும் வழிமுறையை தேடியது டிரம்ப் நிர்வாகம். இதற்காக பாகிஸ்தானின் உதவியையும் நாடியது.

பேச்சுவார்த்தையில் டிரம்ப் எதிர்பார்த்த ஒரே விஷயம், மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணையை இரான் திறக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

போரில் கடுமையாக ராணுவ ரீதியில் தாக்கப்பட்டு , அரசியல் தலைமையையும் இழந்து நிற்கும் இரான் தன்னிடம் இருக்கும் ஒரே கடைசி துருப்புச் சீட்டு ஹோர்முஸ் நீரிணை மீது தனக்கிருக்கும் பூகோளம் தந்த கட்டுப்பாடுதான் என்பதை உணர்ந்திருந்தது.

அதனால்தான், போர் நடந்து கொண்டிருக்கும்போதே , நீரிணையில் அமெரிக்க , இஸ்ரேல் மற்றும் தனது பிற எதிர் நாடுகளுக்குச் செல்லும் எண்ணெய்க் கப்பல்களுக்கு அனுமதி மறுத்த இரான், சீனா , ரஷ்யா, இந்தியா போன்ற ஒரு சில நாடுகளுக்கு மட்டும் கப்பல்கள் செல்ல அனுமதித்தது.

இதில் இரான் கப்பல்கள் நீரிணையக்க் கடக்க சுங்கத் தொகை வசூலித்ததாகவும் செய்திகள் வந்தன.

இந்த செய்திகளை இப்போது இரான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இணங்க விதித்த நிபந்தனைகளில் ஒன்றின் மூலம் ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது.

இரானின் நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தை

போரை நிறுத்தி பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக்கொள்ள இரான் அமெரிக்காவுக்கு 10 அம்ச பிரேரணைகளை முன்வைத்திருந்தது.

இதில் முக்கியமானவை இரானுக்கு எதிரான தாக்குதல்கள் முழுமையாகவும், இறுதியாகவும் நிறுத்தப்படவேண்டும். இதுவரை போரில் இரானுக்கு ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும், ஹோர்முஸ் நீரிணை மீது இரானுக்கு இறையாண்மை சார்ந்த உரிமை இருப்பது அங்கீகரிக்கப்பட வேண்டும், கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்க கப்பல் ஒன்றுக்கு 2 மிlலியன் டாலர்கள் இரானுக்கு சுங்க வரியாக செலுத்த வேண்டும் போன்றவை.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்காலிகப் போர் நிறுத்தம் குறித்து வெளியிட்ட அறிவிப்பிலும், இந்த பேச்சுவார்த்தைகள் இரான் முன் வைத்திருக்கும் 10 அம்சப் பிரேரணைகளை அடிப்படையாகக் கொண்டே நடத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.

இரான்

இது அமெரிக்கா அரசியல் வட்டாரங்களில் டிரம்ப் மீது பெரும் விமர்சனங்களைத் தூண்டியிருக்கிறது,

போருக்கு முன்னர் எல்லா நாடுகளும் சுதந்திரமாக கப்பல்களை செலுத்தத் திறந்திருந்த ஹோர்முஸ் நீரிணையை, டிரம்ப் நடத்திய போரால் இரானின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரச் செய்ததுதான் டிரம்ப்பின் சாதனையா என்று அரசியல் விமர்சகர்கள் கேட்கிறார்கள்.

பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த சூயஸ் கால்வாயை எகிப்தின் அதிபர் நாசர் 1950களில் கட்டுப்பாட்டில் எடுத்து ஒரு கேந்திர அரசியல் நெருக்கடி ஏற்பட்டு பின்னர் சூயஸ் கால்வாய் எகிப்தின் கைகளுக்குச் சென்ற அதே போன்ற ஒரு சம்பவம் இப்போது ஹோர்மூஸ் நீரிணையில் நடக்கவிருப்பதாக கருத்துகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

இந்த சர்ச்சைகள் ஒரு புறமிருக்க, இரான் குறித்த பேச்சுவார்த்தைகள் இரு வார போர் நிறுத்த காலத்திற்குள் முடிவடையுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஏற்கனவே இந்த இடைக்காலப் போர் நிறுத்தம் லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா இலக்குகள் பற்றியதல்ல என்று கூறி, இஸ்ரேல் இன்று ( புதன்கிழமை) அங்கு தனது தாக்குதல்களைத் தொடர்ந்திருக்கிறது.

ஆனால் போர் நிறுத்த உடன்பாட்டில் இரானின் பிராந்தியக் கூட்டாளிகள் மீதும் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என்ற இரானின் நிபந்தனையையும் அடங்கும் என்று இரான் கூறுகிறது.

இந்த சூழ்நிலையில் போர் நிறுத்தம் இந்த இரு வாரங்களாவது தாக்குப்பிடிக்குமா என்பது குறித்தும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

இந்த வாரமே சம்பந்தப்பட்ட மூன்று நாடுகளையும் இஸ்லாமாபாதில் பேச்சுவார்த்தைகள் நடத்த பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருக்கிறது.

இந்தப் பேச்சு வார்த்தைகள் நடக்கும்போதே இரான் மட்டுமல்லாமல், இஸ்ரேலும் தன்னை ராணுவ ரீதியாக மீண்டும் வலுப்படுத்திக்கொள்ள எத்தனிக்கும். போரின் தன்மை, அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளின் முடிவைப் பொறுத்தே அமையும்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *