தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரபு. இவருக்கு பிரபா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மீனவர் பிரபு கடந்த சில வருடங்களாக மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து மதுரையில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் நாள்களில் மருந்து மாத்திரைகளுடனும் சென்றுள்ளார். மேலும் தினமும் தூக்க மாத்திரை உட்கொண்டால்தான் தூங்க கூடிய நிலையிலும் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க விசைப்படகில் சென்றுள்ளார் பிரபு.
அன்று இரவு இவர்களது படகு பாரம்பர்ய பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் பிரபு உள்ளிட்ட மீனவர்களைச் சிறைப்பிடித்துச் சென்றனர்.
சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த 13-ம் தேதி நீதிமன்றத்திற்கு பிரபு அழைத்து வரப்பட்டுள்ளார். அப்போது மனைவி பிரபாவை செல்போனில் தொடர்பு கொண்ட பிரபு, வழக்கமாக தான் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள் கிடைக்காமல் சிறையில் அவதியுற்று வருவதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து நம்மிடம் பேசிய பிரபா, ”கடந்த 20 நாள்களாக எனது கணவர் பிரபு இலங்கை சிறையில் இருந்து வருகிறார். மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்ட அவரை மாதந்தோறும் மதுரையில் உள்ள மனநல மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்வது வழக்கம்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி எனது கணவருக்கு தினமும் மருந்து மாத்திரை கொடுக்க வேண்டும். இந்நிலையில் கடந்த 20 நாள்களாக அவர் மருந்து மாத்திரை சாப்பிட முடியாமல் சிறையில் வாடி வருகிறார். இதனால் தன்னால் தூங்க முடியவில்லை எனவும், தூக்கம் இல்லாததால் மன அழுத்தம் அதிகமாகி வருவதாகவும் கூறினார்.

மருந்து மாத்திரை இல்லாததால் சரியான உணவு உட்கொள்ள முடியாமல் தவித்து வரும் அவரது நிலை தற்போது எப்படி உள்ளது என்பதைக் கூட எங்களால் அறிய முடியவில்லை. இந்நிலையில் வரும் 27-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்திற்கு அவரை அழைத்து வரும் போது அவரது நிலையினை இந்திய தூதரக அதிகாரிகள் நீதிமன்றத்தில் எடுத்துச் சொல்லி அவரை சிறையில் இருந்து மீட்டுத் தர வேண்டும்.
எனது கணவரின் நிலை குறித்து மத்திய அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன். எனது கணவரின் உடல்நிலை மேலும் பாதிப்புக்குள்ளாகி அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன் அவரை மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கண்ணீர் சிந்தினார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


